லக்னௌவில் இளம்பெண் மீது அமிலம் வீச்சு: பெற்றோரையும் கத்தியால் தாக்கிய நபர்!
லக்னௌவில் திருமணம் தொடர்பான தகராறு காரணமாக இளம்பெண்ணின் முகத்தில் அமிலம் வீசிய நபர் பற்றி.....

லக்னௌவில் திருமணம் தொடர்பான தகராறு காரணமாக 18 வயது இளம்பெண்ணின் முகத்தில் நபர் ஒருவர் அமிலம் வீசிய சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.
உத்தர பிரதேச மாநிலம், லக்னௌவின் ஹுசைன்கஞ்ச் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடந்த இந்தச் சம்பவத்தில், தாக்குதல் நடத்திய தௌசீஃப் என்ற முன்னாவைக் காவல்துறையினர் கைது செய்தனர். அவருக்கும் இந்தச் சம்பவத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மூவர் மற்றும் தாக்குதல் நடத்தியவர் என மொத்தம் நான்கு பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காவல்துறையின் அறிக்கையின்படி, தௌசீஃப் தனது உறவினரின் வீட்டிற்குச் சென்று, அவரது மகளைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.
Advertisement
Advertisement
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, அந்தப் பெண்ணின் முகத்தில் தௌசீஃப் அமிலம் வீசியுள்ளார். இதைக் கண்டு தடுத்த அவரது பெற்றோரைக் கத்தியால் தாக்கியதில், அந்தப் பெண்ணும் அவரது தாயாரும் பலத்த காயமடைந்தனர். மேலும், இந்தச் சம்பவத்தில் அந்தப் பெண்ணின் தந்தையும், தாக்குதல் நடத்திய தௌசீஃபும் காயமடைந்தனர்.
தகவல் கிடைத்ததும் மூத்த காவல் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்த அனைவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பே, தௌசீஃப் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டார்.