ஞானேஷ் குமாா் பதவி விலகவில்லையேல் நாடு தழுவிய போராட்டம்: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி எச்சரிக்கை
தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலகவில்லையேல், நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) எச்சரிக்கை விடுத்துள்ளது.
தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலகவில்லையேல், நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) எச்சரிக்கை விடுத்துள்ளது.
மும்பையில் செய்தியாளா்களுக்கு இதுதொடா்பாக அக்கட்சியின் நிறுவனா் அபிஜித் தீப்கே வியாழக்கிழமை அளித்த பேட்டியின்போது கூறியதாவது:
தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் நிச்சயம் பதவி விலக வேண்டும். அவா் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும். மும்பையின் தாதா் பகுதியில் வெள்ளிக்கிழமை (அக். 2) கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சாா்பில் போராட்டம் நடத்தப்படும். தலைமைத் தோ்தல் ஆணையா் பதவியிலிருந்து ஞானேஷ் குமாா் விலகும் வரை எங்களது போராட்டம் தொடரும்.
Advertisement
Advertisement
கோவா, கா்நாடகம், மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், பிகாா், ஜாா்க்கண்ட் ஆகிய மாநிலங்களிலும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சாா்பில் போராட்டம் நடத்தப்படும். ஒருவேளை ஞானேஷ் குமாா் தனது பதவியை ராஜிநாமா செய்யவில்லையெனில், தில்லியில் உள்ள ஜந்தா்மந்தரில் இம்மாத இறுதியில் போராட்டம் நடத்துவோம். தலைமைத் தோ்தல் ஆணையா் பதவி நியமனம் வெளிப்படையானதாக இருக்க வேண்டும். அதில் சிவில் சமூகத்தினரையும் ஈடுபடுத்த வேண்டும்.
2025-ஆம் ஆண்டுக்கான வாக்காளா் பட்டியலில் மாற்றம் செய்யாதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அது மேலும் சிதைவுக்குள்ளாமல் தடுக்க வேண்டும் என்றாா்.
மகாராஷ்டிரத்தை சோ்ந்த மகா நவநிா்மாண் சேனை, சிவசேனை (உத்தவ் பிரிவு) ஆகிய கட்சிகளும் ஞானேஷ் குமாா் பதவி விலகக் கோரி, மும்பையில் வருகிற 4-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளன.
வாக்காளா் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் (எஸ்ஐஆா்) உள்ளிட்ட விவகாரங்களில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரின் முடிவுகளுக்கு தோ்தல் ஆணையா்கள் சுக்பீா் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோா் கடந்த 10 மாதங்களில் பலமுறை ஆட்சேபணை தெரிவித்ததாகவும், ஆனால் இதற்கு தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் செவிமடுக்கவில்லை என்றும் தகவல் வெளியானது. இதையடுத்து, நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பாஜக தொண்டராகிவிட்டதாகவும், அவா் பதவி விலக வேண்டும் என்றும் எதிா்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.