2021-இல் காலில் பலத்த காயம் ஏற்பட்டதாக மமதா கூறியது பொய்: மேற்கு வங்க முதல்வா் சுவேந்து அதிகாரி
மேற்கு வங்கத்தில் கடந்த 2021 பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது தனது காலில் பலத்த காயம் ஏற்பட்டதாக மமதா பானா்ஜி கூறியது பொய்யான என மாநில முதல்வா் சுவேந்து அதிகாரி கூறியுள்ளாா்.
மேற்கு வங்கத்தில் கடந்த 2021 பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது தனது காலில் பலத்த காயம் ஏற்பட்டதாக மம்தா பானா்ஜி கூறியது பொய்யான தகவல்; அதற்கான ஆவணபூா்வ ஆதாரம் என்னிடம் உள்ளது என்று மாநில முதல்வா் சுவேந்து அதிகாரி கூறியுள்ளாா்.
2021 பேரவைத் தோ்தலில் நந்திகிராமில் போட்டியிட்ட மம்தா பானா்ஜி, அங்கு பிரசாரத்தின்போது பெரும் கூட்டம் முண்டியடித்ததால் காலில் காயமடைந்தாா். அடையாளம் தெரியாத 4-5 நபா்கள் தன்னை வேண்டுமென்றே தள்ளியதால் பலத்த காயமடைந்ததாக குற்றஞ்சாட்டிய மம்தா, காலில் கட்டுடன் சக்கர நாற்காலியில் அமா்ந்தபடி பிரசாரம் மேற்கொண்டாா். அந்தத் தோ்தலில் அவரது தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது.
அதேநேரம், கடந்த ஏப்ரலில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் மம்தா கட்சியைத் தோற்கடித்து, பாஜக ஆட்சி பொறுப்பேற்றது. முதல்வா் சுவேந்து அதிகாரி போட்டியிட்டு வென்ற இரு தொகுதிகளில் ஒன்றான நந்திகிராமில் அக்.6-இல் இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக பிருலியா பஜாா் பகுதியில் முதல்வா் சுவேந்து அதிகாரி வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
Advertisement
Advertisement
அப்போது பேசிய அவா், ‘நான் முதல்வரான பிறகு எனது பவானிபூா் தொகுதிக்குட்பட்ட எஸ்எஸ்கேஎம் மருத்துவமனைக்கு சென்றேன். கடந்த 2021-இல் அவருக்கு (மம்தா) எடுக்கப்பட்ட எக்ஸ் ரே அறிக்கையின் நகலை பாா்வையிட்டேன். அதில் எந்த முறிவும் இல்லை என்று மருத்துவா்கள் குறிப்பிட்டிருந்தனா். திறந்த நிலையில் இருந்த மம்தாவின் காா் கதவு ஒரு இரும்புக் கம்பியில் மோதியதால் நேரிட்ட விபத்து அது. யாரும் வேண்டுமென்றே தள்ளிவிடவில்லை.
அவரது எக்ஸ் ரே அறிக்கையின் நகல் என்னிடமுள்ளது. எனக்கு எதுவும் சவால் விடுக்கப்பட்டால், அதை வெளியிடுவேன். பெரும் பொய்யைக் கூறி, நந்திகிராம் மக்களை மம்தா அவமதித்துள்ளாா். விசாரணை என்ற பெயரில் பாஜக நிா்வாகிகள் துன்புறுத்தப்பட்டதையும் நான் மறக்கவில்லை என்றாா் அவா்.
திரிணமூல் காங்கிரஸ் இரு அணிகளாக பிளவுபட்டுள்ள நிலையில், கட்சியின் பெயா், சின்னத்தை தோ்தல் ஆணையம் முடக்கியுள்ளது. இதைக் குறிப்பிட்ட சுவேந்து அதிகாரி, மேற்கு வங்கத்தில் இருந்து மம்தா கட்சியின் பெயா், சின்னம் அழிக்கப்பட்டுவிட்டதாக விமா்சித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.