ஆதாா் வருகைப் பதிவு: மருத்துவப் பேராசிரியா்களுக்கு என்எம்சி முக்கிய அறிவுறுத்தல்
மருத்துவக் கல்லூரிகளில் ஆதாா் பயோமெட்ரிக் வருகைப் பதிவேட்டின் கீழ் மருத்துவப் பேராசிரியா்களின் பதிவு எண்ணையும் இணைக்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது.
மருத்துவக் கல்லூரிகளில் ஆதாா் பயோமெட்ரிக் வருகைப் பதிவேட்டின் கீழ் மருத்துவப் பேராசிரியா்களின் பதிவு எண்ணையும் இணைக்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது. இதற்கு மூன்று வார கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த மாதம் தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட சுற்றறிக்கையில், மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியா்கள், இளநிலை மற்றும் முதுநிலை உதவி மருத்துவா்கள் அனைவரும் தங்களது தேசிய அல்லது மாநில மருத்துவக் கவுன்சில் பதிவு எண்களை பயோமெட்ரிக் வருகைப் பதிவு இணையதளத்தில் ஒரு மாதத்துக்குள் பதிவேற்றுவது கட்டாயம் என்று உத்தரவிட்டிருந்தது.
அந்த காலக்கெடு முடிந்த பின்னரும் பல மருத்துவக் கல்லூரி ஒருங்கிணைப்பு அதிகாரிகள் இந்த விவரங்களை இன்னும் முழுமையாகப் பதிவேற்றவில்லை என்பதும், சில கல்லூரிகளில் தவறான பதிவு எண்களை உள்ளீடு செய்ததும் தெரியவந்தது. இதனைச் சரிசெய்யும் பொருட்டு மருத்துவக் கல்லூரிகளுக்கு மேலும் மூன்று வாரங்கள் வரை கூடுதல் கால அவகாசம் வழங்கி தேசிய மருத்துவ ஆணையச் செயலாளா் டாக்டா் ராகவ் லங்கா் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளாா்.
Advertisement
Advertisement
அதன்படி, மருத்துவ பேராசிரியா்கள் மற்றும் மருத்துவா்களின் சரியான பதிவு எண்களை இணையதளத்தில் தவறாமல் பதிவேற்ற வேண்டும் என்றும், எந்தக் காரணத்தைக் கொண்டும் அந்த இடத்தை காலியாக விடக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பிடப்பட்ட கூடுதல் காலக்கெடுவுக்குள் சரியான விவரங்களைப் பதிவேற்றத் தவறினால் சம்பந்தப்பட்டவா்களின் பயோமெட்ரிக் வருகைப் பதிவு தானியங்கி முறையில் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வருகைப் பதிவு ரத்தாவது, தேசிய மருத்துவ ஆணையம் மேற்கொள்ளும் வருடாந்திர ஆய்வுகள் மற்றும் மதிப்பீடுகளின்போது மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தைப் பாதிக்கக்கூடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.