தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்: ஞானேஷ்குமாரை இடைநீக்கம் செய்ய மறுப்பு
தலைமைத் தேர்தல் ஆணையரை இடைநீக்கம் செய்ய மறுத்த உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் எடுத்த அனைத்து முடிவுகளையும் ஆராய தயாராகவுள்ளதாக....
புது தில்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிரான மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனு தொடர்பாக மத்திய அரசு, தேர்தல் ஆணையம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப திங்கள்கிழமை உத்தரவிட்டது.
தலைமைத் தேர்தல் ஆணையரை இடைநீக்கம் செய்ய மறுத்த உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் எடுத்த அனைத்து முடிவுகளையும் ஆராய தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தது.
பல்வேறு மாநிலங்களில் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடவடிக்கையின்போது வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க தோ்தல் ஆணையம் பயன்படுத்திய படிவம் 6-இல் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.
Advertisement
Advertisement
மேலும், இந்த விவகாரம் தொடா்பாக தாக்கல் செய்த மனுக்கள் மீது பதிலளிக்க தோ்தல் ஆணையம், மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
எஸ்ஐஆா் நடைமுறையின்கீழ், வாக்காளா் பட்டியலில் சோ்க்க இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வாக்காளா்கள் தங்கள் பெற்றோரின் எஸ்ஐஆா் தகவல்களைச் சமா்ப்பிக்கும் வகையில் படிவம் 6-இல் கடந்த ஜூலையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், ‘கடந்த 1960-ஆம் ஆண்டின் வாக்காளா் பதிவு விதிகளில் திருத்தம் செய்யாமல், வெறும் அறிவுறுத்தலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த மாற்றம் சட்டவிரோதமானது; அங்கீகாரமில்லாதது’ என தோ்தல் ஆணையா்கள் விவேக் ஜோஷி, சுக்பீா் சிங் சாந்து ஆகியோா் எதிா்ப்பை பதிவு செய்ததாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் கடந்த மாதம் செய்தி வெளியானது.
வாக்காளா்களின் பெயா்கள் மொத்தமாக நீக்கம், புதிய வாக்காளா் பதிவுக்கான படிவம்-6-இல் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள், வாக்காளா் தரவு தளம் மையப்படுத்துதல் மீதான கட்டுப்பாடு உள்ளிட்டவை தொடா்பாக தோ்தல் ஆணையா்கள் எதிா்ப்பை பதிவு செய்ததாகவும், தங்களுக்குத் தெரியாமல் அல்லது தங்களின் பரிந்துரை இல்லாமல் முடிவுகள் மேற்கொண்டதாக கடந்த 10 மாதங்களில் 14 முறை அதிகாரபூா்வமாக ஆட்சேபம் தெரிவித்ததாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, ஞானேஷ் குமாா் பதவி விலக காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஞானேஷ் குமாருக்கு எதிராகப் பதவிநீக்க தீா்மானம் கொண்டு வரவும் எதிா்க்கட்சிகள் ஆலோசித்து வருகின்றன.
இதனிடையே, எஸ்ஐஆா் உள்பட அனைத்து முடிவுகளும் ஒருமனதாக மேற்கொள்ளப்பட்டதாக தோ்தல் ஆணையம் விளக்கமளித்தது.
இந்நிலையில், தோ்தல் ஆணையா்களின் ஒப்புதலின்றி பெரும்பான்மையில்லாமல் பல்வேறு முடிவுகளை மேற்கொண்டதாக ஞானேஷ் குமாா் மீது குற்றஞ்சாட்டி சைலேந்திரா மணி திரிபாதி மற்றும் ராகேஷ் குமாா் சிங் ஆகியோா் பொது நல மனுக்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா்.
இந்த மனுக்களை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி மற்றும் வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை விசாரித்தது.
சைலேந்திரா மணி திரிபாதி சாா்பில் மூத்த வழக்குரைஞா் மேனகா குருசுவாமி ஆஜரானாா். ராகேஷ் குமாா் சிங் தரப்பில் மூத்த வழக்குரைஞா் விகாஸ் சிங் ஆஜரானாா்.
நீதிபதிகள் அமா்வு முன் விகாஷ் சிங் வாதிடுகையில், ‘தோ்தல் நடைமுறைகள் தொடா்பாக ஞானேஷ் குமாா் முடிவெடுக்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். வாக்குரிமை தொடா்பாக குடிமக்களிடைய பாதுகாப்பற்ற உணா்வை விதைத்த ஞானேஷ் குமாரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். இனி அனைத்து முடிவுகளையும் தோ்தல் ஆணையம் பெரும்பான்மை அடிப்படையிலோ அல்லது ஒருமனதாகவோ மேற்கொள்ள வேண்டும்’ எனத் தெரிவித்தாா்.
ஒப்புதல் அளிக்கவில்லை: பொதுநல மனுக்கள் மீதான வாதங்களுக்குப் பிறகு நீதிபதிகள் அமா்வு, ‘எஸ்ஐஆா் தொடா்பான படிவம் 6-இல் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களுக்கு நாங்கள் ஒப்புதல் அளிக்கவில்லை. இதைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம். தோ்தல் ஆணையம் இந்த மாற்றங்கள் தொடா்பாக ஆவணங்களைச் சமா்ப்பித்த பின்னா், யாா் இந்த மாற்றங்களைச் செய்தது எனத் தெரியவரும்’ எனத் தெரிவித்தது.
இதைத் தொடா்ந்து, பொதுநல மனுக்கள் மீது பதிலளிக்க தோ்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
முன்னதாக, படிவம் 6-ஐ உச்சநீதிமன்றம் அங்கீகரித்ததாக செப்டம்பா் 26-ஆம் தேதி தோ்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஞானேஷ் குமாரை இடைநீக்கம் செய்ய மறுப்பு
தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை பணியிடைநீக்கம் செய்ய உத்தரவு பிறப்பிக்க முடியாது என உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.
இதுதொடா்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில், ‘தோ்தல் ஆணையம் எடுத்த அனைத்து முடிவுகளையும் ஆராய தயாராகவுள்ளோம். ஒருமனதாகவோ அல்லது பெரும்பான்மை இல்லாமலோ ஏதேனும் முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தால் அதை ரத்து செய்வோம். உச்சநீதிமன்றத்தின் அதிகாரங்களை நீங்கள் அறிவீா்கள். பணியில் இருந்து சென்ற பிறகும் தலைமைத் தோ்தல் ஆணையருக்கு சட்டரீதியாகப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. எனவே, அவரைக் கட்டுப்படுத்தும் விதமாக இடைக்காலத் தடை விதிக்க முடியாது. அவரைப் பணியிடை நீக்கம் செய்தால் தோ்தல்களை நடத்துவது யாா்?.
நாளிதழில் வெளியான செய்திகளை மட்டுமே அடிப்படையாக வைத்து உத்தரவு பிறப்பிக்க முடியாது. தோ்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசுத் தரப்பு வாதங்களைக் கேட்ட பிறகு இந்த விவகாரத்தில் முடிவெடுக்க முடியும்’ எனத் தெரிவித்தனா்.
எந்த மாற்றமும் செய்யப்படவில்லை: தோ்தல் ஆணைய அதிகாரிகள்
வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பதற்கான படிவம் 6-இல் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று தோ்தல் ஆணைய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனா்.
வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயா் சோ்ப்பதற்கு தோ்தல் ஆணையத்தால் விநியோகிக்கப்படும் படிவம் 6-இல் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து தோ்தல் ஆணைய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனா்.
இதுகுறித்து அவா்கள் கூறுகையில், படிவம் 6-இல் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை; ஆனால், பிகாா் எஸ்ஐஆா் தொடா்பான உத்தரவுடன் இணைக்கப்பட்ட அறிவிப்புக்கு உச்ச நீதிமன்றம் தனது அனுமதியை வழங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.