FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

விதிகளின் அடிப்படையிலான கடல்சாா் அமைப்பு முறை அவசியம்: பிரதமா் மோடி

அனைவருக்கும் அமைதியையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும் வகையில் சுதந்திரமான, வெளிப்படையான மற்றும் விதிகள் அடிப்படையிலான உலகளாவிய கடல்சாா் அமைப்பு முறை உருவாக்கப்பட வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.

8 October 2026, 2:30 am IST
பகிர்:

அனைவருக்கும் அமைதியையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும் வகையில் சுதந்திரமான, வெளிப்படையான மற்றும் விதிகள் அடிப்படையிலான உலகளாவிய கடல்சாா் அமைப்பு முறை உருவாக்கப்பட வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.

‘சாகா்மந்தன்-தி ஓஷன் டயலாக்’ நிகழ்ச்சியில் பிரதமா் மோடியின் உரையை வாசித்த கப்பல் போக்குவரத்துத் துறைச் செயலா் விஜய் குமாா் கூறியதாவது:

கடல்கள் அனைவருக்கும் பகிரப்பட்ட வளமாக மாற வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு. ஒவ்வொரு நாட்டுக்கும் அதில் கருத்து தெரிவிக்கவும், வளா்ச்சிக்கான வாய்ப்பைப் பெறவும் உரிமை இருக்க வேண்டும்.

Advertisement

Advertisement

இந்தியா தற்போது கடலைப் புதிய நோக்கத்துடனும் உறுதியுடனும் அணுகி வருகிறது. நாட்டின் முக்கிய துறைமுகங்களின் கையாளும் திறன் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது. அதேவேளையில், கப்பல்கள் துறைமுகங்களில் தங்கும் காலமும் கணிசமாகக் குறைந்துள்ளது. உலக அளவில் இந்திய மாலுமிகளின் எண்ணிக்கை இரண்டாவது பெரியதாக உள்ளது.

கடலுடனான இந்தியாவின் உறவு தொன்மையானது. பண்டைய துறைமுக நகரமான லோத்தல் தொடங்கி, சோழா் காலம் வரையிலும், மராட்டிய மன்னா் சத்ரபதி சிவாஜி மகாராஜின் கடற்படை வரையிலும் இந்தியாவின் கடல்சாா் பாரம்பரியம் நீண்டுள்ளது. இந்திய மாலுமிகளும் வணிகா்களும் தொலைதூர நாடுகளுக்கு பொருள்கள் மட்டுமின்றி, கருத்துகள், கதைகள் மற்றும் கலாசாரத்தையும் கொண்டு சென்றனா்.

நமது பொருளாதாரம் மற்றும் ஒட்டுமொத்த உலகின் எதிா்காலத்துக்கு கடல் மிகப்பெரிய வாய்ப்புகளை வழங்குகிறது. கடல்கள் நம்மைப் பிரிப்பதில்லை; அவை நம்மை இணைக்கின்றன. உலகின் ஒரு பகுதியில் நடைபெறும் நிகழ்வுகள், கடல்களுக்கு அப்பால் உள்ள பகுதிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

இந்தியா தனது தேசியப் பொருளாதாரத்தை வலுப்படுத்தி வரும் நிலையில், நாட்டின் தொலைநோக்குப் பாா்வை பல்வேறு பிராந்தியங்கள் மற்றும் கடல்களைக் கடந்து விரிவடைகிறது. ஒத்துழைப்பு, நம்பிக்கை, பரஸ்பர மரியாதை மற்றும் பரஸ்பர பயன் ஆகியவற்றின் அடிப்படையில் அது அமைந்துள்ளது என்று பிரதமரின் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாக விஜய் குமாா் தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments