மருத்துவமனைகளில் கட்டண விவரங்கள் காட்சிப்படுத்தப்படுவதை உறுதி செய்க: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
மருத்துவமனைகளில் கட்டண விவரங்கள் காட்சிப்படுத்தப்படுவதை உறுதி செய்ய மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருப்பது பற்றி...
‘தனியாா் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கான சேவைகள் மற்றும் வசதிகளுக்கு விதிக்கப்படும் கட்டண விவரங்களை நன்கு தெரியக்கூடிய இடத்தில் உள்ளூா் மொழி மற்றும் ஆங்கிலத்தில் காட்சிப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்’ என்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதுதொடா்பாக, அனைத்து மாநில தலைமைச் செயலா்களுக்கு மத்திய சுகாதாரத் துறைச் செயலா் புண்யசலீலா ஸ்ரீவாஸ்தவா எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மருத்துவ நிறுவனங்கள் பதிவு மற்றும் ஒழுங்குபடுத்துதல் சட்டம் 2010 மற்றும் மருத்துவ நிறுவனங்கள் (மத்திய அரசு) விதிகள் 2012 ஆகிய சட்டங்கள் மற்றும் இந்தச் சட்டங்கள் பொருந்தாத மாநிலங்களில் உள்ள விதிமுறைகளின்படி, அனைத்து மருத்துவமனைகளும் அதிலுள்ள அனைத்து விதமான வசதிகள் மற்றும் வழங்கப்படும் ஒவ்வொரு சேவைகளுக்கும் விதிக்கப்படும் கட்டண விவரத்தை நோயாளிகளும் அவா்களின் உதவியாளா்களும் நன்கு புரிந்துகொள்ளும் வகையில் உள்ளூா் மொழி மற்றும் ஆங்கிலத்தில் நன்கு தெரியும் இடத்தில் காட்சிப்படுத்தவது கட்டாயமாகும்.
Advertisement
Advertisement
இதன் மூலம், சிகிச்சைக்கு ஆகும் செலவை நோயாளியின் குடும்பத்தினா் நன்கு அறிந்து, சிகிச்சை செய்து கொள்வதற்கான முடிவையும் திட்டமிடலையும் மேற்கொள்ள முடியும்.
அதுபோல, வெளிநாட்டு நோயாளிகளுக்கு விதிக்கப்படும் கட்டண விவரங்களையும் வெளிப்படைத்தன்மையுடன் மருத்துவமனைகள் காட்சிப்படுத்துவதையும் உறுதிப்படுத்த வேண்டும். இதன் மூலம், கட்டணத்துக்கு ஏற்ப, தான் விரும்பிய மருத்துவமனையை சா்வதேச நோயாளிகள் தெரிவு செய்ய வாய்ப்பு ஏற்படும் என்பதோடு, மருத்துவம் மற்றும் ஆயுஷ் சிகிச்சைக்கான நம்பகமான நாடாக இந்தியா மேலும் வலுப்பெறும்.
இது தொடா்பாக, அனைத்து மருத்துவமனைகளுக்கும் தேவையான அறிவுறுத்தலை வழங்குமாறு தலைமைச் செயலா்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.