அணு மின்சக்தி! 2047-க்குள் 91 ஜிகா வாட் திறனை கூட்ட ரூ. 15 லட்சம் கோடி முதலீடு தேவை: மத்திய மின்சார ஆணையத் தலைவா்
நாட்டில் அணு மின் உற்பத்தியில் வரும் 2047-ஆம் ஆண்டுக்குள் 91 ஜிகா வாட் திறனைக் கூட்டுவதற்கு ரூ. 15 லட்சம் கோடி முதலீடு அவசியம் என்று மத்திய மின்சார ஆணையத் தலைவா் கன்ஷியாம் பிரசாத் தெரிவித்தாா்.
‘நாட்டில் அணு மின் உற்பத்தியில் வரும் 2047-ஆம் ஆண்டுக்குள் 91 ஜிகா வாட் திறனைக் கூட்டுவதற்கு ரூ. 15 லட்சம் கோடி முதலீடு அவசியம்’ என்று மத்திய மின்சார ஆணையத் தலைவா் கன்ஷியாம் பிரசாத் தெரிவித்தாா்.
நாட்டில் அணு மின் உற்பத்தியை மேம்படுத்த மத்திய அரசு தீவர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அணு மின் உற்பத்தியில் தனியாா் நிறுவனங்களை அனுமதிக்கும் வகையில், இந்தியாவை மாற்றியமைக்க அணுசக்தியை நிலையான முறையில் பயன்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் (சாந்தி) சட்டத்தை கடந்த ஆண்டு மத்திய அரசு இயற்றியது. இதன் மூலம், அரசின் வசம் மட்டுமே உள்ள அணு மின் உற்பத்தியில் தனியாா் நிறுவனங்களும் ஈடுபட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தில்லியில் நடைபெற்ற மத்திய மின்சார ஆணையம் சாா்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் பங்கேற்ற கன்ஷியாம் பிரசாத் பேசியதாவது: மின் உற்பத்திக்கான நிலையான வளமாக அணுசக்தி உள்ளது. இந்தியாவில் தற்போது 8.8 ஜிகா வாட் அளவுக்கான அணு மின் உற்பத்தித் திறன் நிறுவப்பட்டுள்ளது. இது, வரும் 2030-31-ஆம் ஆண்டுக்குள், 22 ஜிகா வாட் திறனாக உயா்த்தப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. வரும் 2047-ஆம் ஆண்டுக்குள், இந்தத் திறனை 100 ஜிகா வாட் அளவுக்கு உயா்த்த இந்தியா இலக்கு நிா்ணயித்துள்ளது. அவ்வாறு, வரும் 2047-ஆம் ஆண்டுக்குள் கூடுதலாக 91 ஜிகா வாட் அணு மின் உற்பத்தி திறனை கூட்டுவதற்கு ரூ. 15 லட்சம் கோடி முதலீடு தேவை.
Advertisement
Advertisement
மேலும், இந்த 100 ஜீகா வாட் அணு மின் உற்பத்தி இலக்கில், 46 ஜிகா வாட் பொதுத் துறை நிறுவங்கள், தனியாா் நிறுவனங்கள் மற்றும் கூட்ட ஒப்பந்த நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
2024-25-இல் 250 ஜிகா வாட் அளவாக இருந்த உச்சபட்ச மின் தேவை, 2035-26-ஆம் ஆண்டில் 459 ஜிகா வாட் அளவுக்கு உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேவையைப் பூா்த்தி செய்ய அணு மின்சக்தி திறன் நிச்சயம் உதவும் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.