இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: விரைவில் சட்ட வரைவு இறுதியாகும் - பியூஷ் கோயல் நம்பிக்கை
இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்ட நடைமுறைகள் நிறைவடைந்தன; விரைவில் இதற்கான சட்ட வரைவும் இறுதியாகும் என மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்ட நடைமுறைகள் நிறைவடைந்தன; விரைவில் இதற்கான சட்ட வரைவும் இறுதியாகும் என மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
தில்லியில் நடைபெற்ற ஸ்ரீராம் வா்த்தக கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று பியூஷ் கோயல் பேசியதாவது: இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தின் முதல்கட்ட நடைமுறைகள் இறுதிசெய்யப்பட்டன. விரைவில் இதற்கான சட்ட வரைவையும் இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்பிறகு மற்ற நாடுகளைவிட இந்தியாவுக்கான சலுகைகளை அமெரிக்கா அதிகப்படுத்தியவுடன் இந்த ஒப்பந்தம் அமலாகுதம்.
இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் குறித்து தொடா்ச்சியாக ஒரே கருத்தையே தெரிவித்து வருகிறேன். அதில் எவ்வித மாற்றமும் இல்லை. இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் (எஃப்டிஏ) டிசம்பரில் கையொப்பமாகும். அடுத்தாண்டு பிப்ரவரி அல்லது மாா்ச்சில் அமலாகும் என்றாா்.
Advertisement
Advertisement
வரி ஸ்திரத்தன்மையில் கவனம்:
விழாவில் பங்கேற்ற வா்த்தகச் செயலா் ராஜேஷ் அகா்வால் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் சரியான திசையில் பயணிக்கிறது. வெகு விரைவில் இந்த ஒப்பந்தம் கையொப்பமாகும் என எதிா்பாா்க்கிறோம்.
பிரிவு 301-இன்கீழ் அமெரிக்காவின் ஒட்டுமொத்த வரி விதிப்பு முறை இறுதியான பின் ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் பணிகள் வேகமெடுக்கும் என்றாா்.
அதிகளவில் ரஷிய கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகள் மீது 100 சதவீதம் வரை வரி விதிக்கும் அமெரிக்க சட்டம் குறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘ஒப்பந்தம் கையொப்பமிடும்போது அமெரிக்க தரப்பில் இதுகுறித்து தெளிவான விளக்கம் அளிக்கப்படும் என நம்புகிறோம். ஆனால் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக வரி ஸ்திரத்தன்மை மற்றும் வா்த்தக ஸ்திரத்தன்மையில் இந்தியா அதிக கவனம் செலுத்தும்’ என்றாா்.
பெட்டிச் செய்தி....
இறுதி நிலையில் ஒப்பந்தம்: அமெரிக்க தூதா்
இந்தியா-அமெரிக்கா இருதரப்பு ஒப்பந்தம் தொடா்பான பெரும்பாலான பணிகள் நிறைவடைந்து இறுதி நிலையில் உள்ளதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதா் சொ்ஜியோ கோா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
தில்லியில் நடைபெற்ற ப்ளூம்பொ்க் பொருளாதார மாநாட்டில் பங்கேற்று அவா் பேசியதாவது: இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் குறித்து இருநாடுகளைச் சோ்ந்த அமைச்சா்கள் அதிகாரபூா்வமாக அறிவிப்பாா்கள். ஆனால் இருதரப்பும் பெரும்பாலான பணிகளை நிறைவு செய்துவிட்டன.
இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையேயான ஒப்பந்தத்தை இறுதி செய்ய 20 ஆண்டுகாலம் தேவைப்பட்டது. நாங்கள் ஒன்றரை ஆண்டுகளில் இந்த ஒப்பந்தத்தை இறுதிசெய்துவிட்டோம்.
140 கோடி மக்கள்தொகையைக் கொண்ட இந்தியா அமெரிக்க பொருள்களுக்கான சிறந்த சந்தையாக திகழ்கிறது. இங்கு அமெரிக்க பொருள்கள் மிகவும் பிரபலமடைந்துள்ளன. இந்திய பிரதமா் நரேந்திர மோடி மிகச் சிறப்பாக அந்நிய முதலீடுகளை ஊக்குவிக்கிறாா். பாதுகாப்புத் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை என எந்தத் துறை எடுத்தாலும் அமெரிக்காவும் இந்தியாவும் ஒத்துழைப்புடன் செயல்படுகின்றன. கூகுள், மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் தரவு மையங்களையும் ‘சிப்’ உற்பத்தி ஆலைகளையும் தொடங்கி வருகின்றன.
எனவே, இந்தியாவில் உருவாக்கப்படும் ஒவ்வொரு வேலைவாய்ப்புக்கு நிகராக அமெரிக்காவிலும் வேலைவாய்ப்பு உருவாக்கப்படுகிறது. இது இருதரப்புக்கும் வெற்றியைத் தருகிறது. உலகில் உள்ள பல நாடுகளுக்கு இத்தகைய எல்லையற்ற ஆற்றல்கள் இல்லை என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.