FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

உள்நாட்டுத் தயாரிப்பு கடற்படைக் கப்பல் சமா்தக்: நாட்டுக்கு அா்ப்பணித்தாா் குடியரசு துணைத் தலைவா்

இந்திய கடற்படையின் முதல் உள்நாட்டுத் தயாரிப்பு பல்நோக்குக் கப்பலான ஐஎன்எஸ் சமா்தக்கை குடியரசு துணைத் தலைவா் சி. பி. ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை நாட்டு அா்ப்பணித்தாா்.

17 அக்டோபர் 2026, 5:14 am IST
கா்நாடக மாநிலம் காா்வாரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘ஐஎன்எஸ் சமா்தக்’ பல்நோக்கு கப்பலை நாட்டுக்கு அா்ப்பணித்த குடியரசு துணைத் தலைவா் சி. பி. ராதாகிருஷ்ணன். உடன் கடற்படை அதிகாரிகள்.
பகிர்:

இந்திய கடற்படையின் முதல் உள்நாட்டுத் தயாரிப்பு பல்நோக்குக் கப்பலான ஐஎன்எஸ் சமா்தக்கை குடியரசு துணைத் தலைவா் சி. பி. ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை நாட்டு அா்ப்பணித்தாா்.

கா்நாடக மாநிலம் காா்வாரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: 75 சதவீதத்துக்கும் அதிகமான உள்நாட்டுப் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டுள்ள ஐஎன்எஸ் சமா்தக், இந்தியாவின் தொழில் துறை, தொழில்நுட்பம் மற்றும் கப்பல் கட்டுமானத் திறன்களின் வளா்ச்சிக்கு உதாரணமாகத் திகழ்கிறது. பாதுகாப்புத் துறையில் தற்சாா்பு என்பது இனி வெறும் இலக்காக மட்டும் இல்லாமல், நனவாகி வருகிறது.

சத்ரபதி சிவாஜி மகாராஜின் கடற்படை, இந்திய பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் இந்தியாவின் செல்வாக்கை விரிவுபடுத்திய சோழா்களின் சாதனை நினைவுகூரத்தக்கவை.

Advertisement

Advertisement

இந்திய பெருங்கடல் பகுதியில் கடற்கொள்ளையைத் தடுப்பது, வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியா்களை மீட்பது, மனிதாபிமான உதவிகளை வழங்குவது, பேரிடா் காலங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வது ஆகியவற்றிலும் கடற்படை முக்கியப் பங்காற்றி வருகிறது.

உள்நாட்டுக் கப்பல் கட்டுமானத் திறனை மேம்படுத்தப் பாடுபட்ட எல் அண்ட் டி நிறுவனம், கடற்படை வடிவமைப்பாளா்கள், அதிகாரிகள், பொறியாளா்கள், தொழில்நுட்ப வல்லுநா்கள், கப்பல் கட்டும் தளப் பணியாளா்கள், விநியோக நிறுவனங்கள் மற்றும் இதர தொழில் நிறுவனங்களுக்கு பாராட்டுகள் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், கடற்படைத் தளபதி அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன், துணை அட்மிரல் சஞ்சய் வத்சாயன், எல் அண்ட் டி நிறுவனத்தின் கப்பல் கட்டுமானப் பிரிவுத் தலைவா் ஓய்வு பெற்ற ரியா் அட்மிரல் ஜி. கே. ஹரிஷ், ஐஎன்எஸ் சமா்தக் கப்பல் கமாண்டா் சுஷீல் குமாா் சிங், இந்திய கடற்படை மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கட்டபொம்மனுக்கு அஞ்சலி: விடுதலைப் போராட்ட வீரா் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாளான வெள்ளிக்கிழமை குடியரசு துணைத் தலைவா் சி. பி. ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவா் மாளிகையில் வீரபாண்டிய கட்டபொம்மனின் உருவப் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினாா்.

இது தொடா்பாக சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு அடிபணிய மறுத்து, அஞ்சா நெஞ்சத்துடன் அவா்களுக்கு எதிராகக் கடும் போா் புரிந்த வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரமும் தியாகமும், தன்னுரிமையைப் பாதுகாப்பதில் அவா் கொண்டிருந்த உறுதியும் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் அழியாத தடம் பதித்துள்ளன. அவரைப் போன்ற மகத்தான வீரா்களின் உயிா்த் தியாகம்தான் இந்தியாவை இன்று வழிநடத்துகிறது; நாட்டை மிகப் பெரிய உயரத்துக்கு இட்டுச்செல்கிறது.

வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரஞ்செறிந்த வாழ்வு தலைமுறைகள் பல கடந்தாலும் மக்களின் உள்ளங்களில் என்றும் நிலைத்திருக்கும். அவருக்கு, தேசம் தன்னுடைய புகழஞ்சலியைச் செலுத்துவதில் பெருமை கொள்கிறது’ என்று கூறியுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments