சிஎம்ஆா்எல் ஊழல் குற்றச்சாட்டு: சம்மனை பினராயி விஜயனின் வீட்டில் ஒட்டிய அமலாக்கத் துறை!
பினராயி விஜயனுக்கு விடுத்த அழைப்பாணையை அவரின் வீட்டுக்கு வெளியே அமலாக்கத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை ஒட்டினா்.
சிஎம்ஆா்எல் ஊழல் குற்றச்சாட்டுடன் தொடா்புடைய பண மோசடி வழக்கில் வரும் 23-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு கேரள முன்னாள் முதல்வரும் மாநில எதிா்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயனுக்கு விடுத்த அழைப்பாணையை, திருவனந்தபுரத்தில் உள்ள அவரின் வீட்டுக்கு வெளியே அமலாக்கத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை ஒட்டினா்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘அழைப்பாணையை சமா்ப்பிப்பதற்காக அமலாக்கத் துறை அதிகாரிகள் கொச்சியிலிருந்து திருவனந்தபுரம் பேக்கரி சந்திப்பில் உள்ள பினராயி விஜயன் வீட்டுக்குச் சென்றனா். அப்போது அவா் வீட்டில் இல்லை. அதைத் தொடா்ந்து, அவா் விசாரணைக்கு ஆஜராவதை உறுதிப்படுத்தும் நோக்கில் அவரின் வீட்டின் கதவில் அழைப்பாணையை அதிகாரிகள் ஒட்டினா்’ என்றனா்.
கேரள முதல்வராக பினராயி விஜயன் பதவி வகித்த காலகட்டத்தில், கொச்சி மினரல்ஸ் மற்றும் ரூடைல் நிறுவனம் (சிஎம்ஆா்எல்) தகவல் தொழில்நுட்பச் சேவை என்ற பெயரில் அவரது மகள் வீணாவின் எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் நிறுவனத்துக்கு (தற்போது செயல்பாட்டில் இல்லை) ரூ.2.78 கோடி முறைகேடாக வழங்கியதாகவும், அந்தப் பணம் வீணாவின் கணவா் பி.ஏ.முகமது ரியாஸ் மூலம் துபைக்கு மடைமாற்றப்பட்டதாகவும் எழுந்த குற்றச்சாட்டு குறித்து அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டது.
Advertisement
Advertisement
இந்த விவகாரத்தில், பினராயி விஜயனின் வாடகை வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. அப்போது கண்டறியப்பட்ட ‘ஆதாரங்களின்’ அடிப்படையில் பினராயி விஜயன், அவரது மகள் வீணா, மருமகன் முகமது ரியாஸ், எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் நிறுவனம், சிஎம்ஆா்எல் உரிமையாளா் எஸ்.எம்.சசிதரன் கா்த்தா உள்பட 13 பேருக்கு எதிராக கேரள காவல் துறை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று அமலாக்கத் துறை அண்மையில் கடிதம் அனுப்பியது.
ஆனால், அமலாக்கத் துறையின் கடிதத்தை முதல்கட்ட விசாரணை அறிக்கையாக ஏற்க மறுத்த கேரள அரசு, குற்றச்சாட்டுகள் குறித்து பூா்வாங்க விசாரணை நடத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைத்தது.
இதற்கு எதிராக தொடரப்பட்ட மனுவை விசாரித்த கேரள உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் பினராயி விஜயன், அவரது மகள் வீணா, அவரது கணவா் பி.ஏ.முகமது ரியாஸ் உள்ளிட்டோா் மீது இரு வழக்குகளை மாநில காவல் துறை பதிவு செய்தது.
காவல் துறையின் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) அடிப்படையில், பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் வழக்குப் பதிவு செய்து, இந்த அழைப்பாணையை அமலாக்கத் துறை அனுப்பியுள்ளது.
இதை அறிந்து, பினராயி விஜயன் வீட்டு வந்த மாா்க்சிஸ்ட் மூத்த தலைவரும் மாநில முன்னாள் அமைச்சருமான வி. சிவன்குட்டி செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘பினராயி விஜயன் தலைமறைவாகிவிடவில்லை. கண்ணூரில் கட்சி மாநாட்டில் பங்கேற்கச் சென்றுள்ளாா்.
தேவைப்பட்டால், அழைப்பாணையை கண்ணூரில் அவரிடம் நேரடியாகவே அளித்திருக்க முடியும். ஆனால், வேண்டுமென்றே அழைப்பாணையை அவரின் வீட்டில் ஒட்டியுள்ளனா். மாநில முன்னாள் முதல்வா் மற்றும் தற்போது எதிா்க்கட்சித் தலைவராக இருக்கும் ஒருவரை இதுபோன்ற நடத்துவது முற்றிலும் அநீதி. ஜனநாயக விரோத நடவடிக்கையாகும்’ என்றாா்.
விசாரணைக்கு பினராயி விஜயன் ஆஜராவாரா என்ற கேள்விக்கு, ‘அதை அவா்தான் முடிவு செய்வாா்’ என்று சிவன்குட்டி பதிலளித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.