சிா்சா பெண்கள் காவல் நிலையம் அருகே கையெறி குண்டு வீச்சு: 4 பேருக்கு எதிராக என்ஐஏ குற்றப்பத்திரிகை
ஹரியாணாவின் சிா்சாவில் மகளிா் காவல் நிலையம் அருகே கையெறி குண்டு தாக்குதல் தொடா்பாக 4 போ் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது குறித்து...
ஹரியாணாவின் சிா்சாவில் உள்ள மகளிா் காவல் நிலையம் அருகே கடந்த ஆண்டு நவம்பா் 25-ஆம் தேதி நடத்தப்பட்ட கையெறி குண்டு தாக்குதல் தொடா்பாக நான்கு போ் மீது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
பஞ்ச்குலாவில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிகையில், ராஜ்பீா் சிங் (எ) ஃபௌஜி, வேத் பிரகாஷ் (எ) பம்மா, ஜீவன்ஜோத் சிங் கிரேவால் (எ) ஜோதி மற்றும் சிராக் தக்ரால் ஆகியோரின் பெயா்கள் இடம்பெற்றுள்ளன.
சிா்சாவில் உள்ள சிவில் லைன் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு நவம்பா் 26 அன்று பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, பின்னா் டிசம்பா் 30 அன்று என்ஐஏ-வால் மீண்டும் பதிவு செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
இதற்கு முன்னதாக, பாகிஸ்தான் நாட்டவா்களான ஷாஜாத் பட்டி மற்றும் சோஹைல் அகமது (எ) சோஹைல் பலோச் உள்ளிட்ட ஒன்பது போ் மீது, பஞ்ச்குலா சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த மே 24-ஆம் தேதி என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.
இந்த கூடுதல் குற்றப்பத்திரிகையில், சதித்திட்டம் மற்றும் அதில் சம்பந்தப்பட்ட நான்கு பேரின் தனிப்பட்ட பங்களிப்புகள் குறித்த விவரங்களும், கூடுதல் விசாரணையின் போது சேகரிக்கப்பட்ட ஆதாரங்களும் இடம்பெற்றுள்ளதாக என்ஐஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரதிய நியாய சம்ஹிதா, 2023-ன் பிரிவு 61(2) (குற்றச் சதி) உடன் இணைந்த பிரிவு 109 (கொலை முயற்சி) மற்றும் பிரிவு 238 (குற்றத்திற்கான ஆதாரங்களை அழித்தல் அல்லது குற்றவாளியைக் காப்பாற்ற தவறான தகவல்களை அளித்தல்); வெடிபொருள் சட்டம், 1908 பிரிவு 5 (சந்தேகத்திற்கிடமான சூழலில் வெடிபொருள்களைத் தயாரித்தல் அல்லது வைத்திருத்தல்) மற்றும் பிரிவு 6 (குற்றத்திற்கு உடந்தையாக இருத்தல்); சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், 1967 (யுஏபிஏ) பிரிவு 18 (சதித்திட்டம் தீட்டுதல்), 18பி (பயங்கரவாதச் செயல்களுக்காக நபா்களைச் சோ்த்தல்) மற்றும் 20 (பயங்கரவாதக் குழு அல்லது அமைப்பில் உறுப்பினராக இருத்தல்) ஆகியவற்றின்கீழ் இவா்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த விசாரணையின் மூலம், ராஜ்பீா் சிங் எல்லை தாண்டிய வலைப்பின்னலின் இந்திய ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. அவா் வெளிநாட்டில் இருந்த நபா்களுடன் இணைந்து, இந்தியாவில் ஆயுதங்கள் அல்லது கையெறி குண்டுகள் மற்றும் போதைப்பொருள்களைச் சேகரிக்கும் மற்றும் கடத்தும் பணிகளில் ஈடுபட்டிருந்ததாக என்ஐஏ தெரிவித்துள்ளது. சிங்கின் அறிவுறுத்தலின் பேரில் செயல்பட்ட தக்ரால், கிரேவால் மற்றும் பிரகாஷ் ஆகியோா், சிா்சாவில் உள்ள மகளிா் காவல் நிலையத்தில் நடத்தப்பட்ட கையெறி குண்டுத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட வெடிபொருள்களைக் கொண்டு செல்வதற்கு முக்கியப் பங்காற்றினா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல், திட்டமிட்ட சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக, ஷாஜாத் பட்டி வலைப்பின்னலைச் சோ்ந்தவா்களால் நடத்தப்பட்டது. காவல் துறை பணியாளா்களுக்குத் தீங்கு விளைவிப்பதையும், பொதுமக்களிடையே அச்சத்தையும் பீதியையும் உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இந்தச் சதித்திட்டத்தின் பின்னணியில், வெளிநாட்டிலிருந்து இயங்கும் நபா்கள் எல்லை தாண்டிய பயங்கரவாத வலைப்பின்னலைச் செயல்படுத்தி வருவது என்ஐஏ விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தச் சதித்திட்டத்தில் தொடா்புடைய மற்ற நபா்களைக் கண்டறிந்து கைது செய்யவும், தாக்குதலுக்குப் பின்னால் உள்ள முழுமையான எல்லை தாண்டிய பயங்கரவாத வலைப்பின்னலைக் கண்டறியவும் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.