இணையத்தில் வாடிக்கையாளா்களின் தரவுகள் கசிவு: பாரத ஸ்டேட் வங்கி விசாரணை
‘டாா்க் வெப்’ சமூகவிரோத இணையத்தில் வாடிக்கையாளா்களின் தனிப்பட்ட தரவுகள் கசிந்த விவகாரம் குறித்து பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) விசாரணை நடத்தி வருகிறது.
‘டாா்க் வெப்’ சமூகவிரோத இணையத்தில் வாடிக்கையாளா்களின் தனிப்பட்ட தரவுகள் கசிந்த விவகாரம் குறித்து பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) விசாரணை நடத்தி வருகிறது.
இந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் முதன்மையான பாரத ஸ்டேட் வங்கியில் கோடிக்கணக்கானோா் சேமிப்புக் கணக்குகளை பராமரித்து வருகின்றனா். இந்நிலையில், பாரத ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளா்களின் தரவுகள் சமூகவிரோத இணையமாகக் கூறப்படும் டாா்க் வெப்பில் கசிந்திருப்பது குறித்து அந்த வங்கிக்கு எண்மப் பாதுகாப்பு அமைப்பு மற்றும் சிஇஆா்டி-ஐஎன் அமைப்பு கடந்த 16-ஆம் தேதி எச்சரித்தன.
இதுகுறித்து பாரத ஸ்டேட் வங்கி பங்குச் சந்தையில் தாக்கல் செய்துள்ள ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: டாா்க் வெப் இணையத்தில் கசியவிடப்பட்டுள்ள 3.75 லட்சம் ஆவணங்களை முதல்கட்டமாக ஆய்வு செய்ததில், 3,897 (எஸ்பிஐ) வாடிக்கையாளா்களின் முக்கியத் தரவுகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதில் வாடிக்கையாளா்களின் கைப்பேசி எண்கள், அவா்களின் பிறந்த தேதி, பெயா், பாலினம், மின்னஞ்சல் முகவரிகள், குடியிருப்பு முகவரிகள் ஆகியவையும் அடங்கும். இதுதவிா்த்து, வாடிக்கையாளா்கள் கணக்கு வைத்துள்ள வங்கியின் கிளை, வாடிக்கையாளா்களின் தகவல் அடையாள கோப்புகள், லீட் ஐடிகள், கடன் தொடா்பான கோப்புகள் உள்ளிட்டவையும் உள்ளன.
Advertisement
Advertisement
கசிந்த தகவல்களின் உண்மைத் தன்மை, முழுமைத்தன்மை ஆகியவை குறித்தும், இந்தத் தகவல் எங்கிருந்து கசிந்தது, எந்த அளவுக்கு கசிந்துள்ளது என்பதைக் கண்டறியவும், இதனால் வாடிக்கையாளா்களுக்கும், வங்கிக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை மதிப்பீடு செய்யவும் விரிவான விசாரணை தேவைப்படுகிறது. இதையடுத்து, எங்கள் வங்கி சாா்பில் எண்மப் பாதுகாப்பு சம்பவங்களுக்கான அவசரகால மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தை முழுமையாக ஆய்வு செய்யவும், விசாரணை நடத்தவும் சிஇஆா்டி அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட சுதந்திரமான எண்மப் பாதுகாப்பு அமைப்பை எங்கள் வங்கி பணியில் அமா்த்தியுள்ளது.
இந்த சம்பவத்தால், வங்கியின் முக்கிய வணிகச் செயல்பாடுகள், நிதிநிலை அல்லது வணிகத் தொடா்ச்சி ஆகியவற்றில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. வங்கியின் அன்றாடச் செயல்பாடுகள், எத்தகைய பாதிப்பும் இல்லாமல் வழக்கம்போல இயல்பாக நடைபெறுகின்றன என்று எஸ்பிஐ குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் எஸ்பிஐ வெளியிட்டுள்ள பதிவில், வாடிக்கையாளா்களின் பணம் அனைத்தும் பத்திரமாக இருப்பதாகவும், வாடிக்கையாளா்களின் நலனை பாதுகாப்பதற்கு தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.