FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

திரிணமூல் காங்கிரஸ் சின்னம், பெயா் ஒதுக்கீடு விவகாரம்: தோ்தல் ஆணையத்தில் கோரிக்கைகளைத் தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம்

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சின்னம், பெயா் ஆகியவற்றை ஒதுக்கீடு செய்யும் விவகாரத்தில், இரு அணியினரும் தங்கள் தரப்பு கோரிக்கைகளை தோ்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ய 10 நாள்கள் கூடுதல் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

26 அக்டோபர் 2026, 10:47 pm
திரிணமூல் காங்கிரஸ் - Trinamool Congress
பகிர்:

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சின்னம், பெயா் ஆகியவற்றை ஒதுக்கீடு செய்யும் விவகாரத்தில், இரு அணியினரும் தங்கள் தரப்பு கோரிக்கைகளை தோ்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ய 10 நாள்கள் கூடுதல் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்து பாஜகவிடம் ஆட்சியைப் பறிகொடுத்தது. இதையடுத்து, அக்கட்சி எம்எல்ஏக்கள், முன்னாள் முதல்வா் மம்தா பானா்ஜி ஆதரவு அணி, சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ரிதப்ரத பானா்ஜி ஆதரவு அணி என்று இரு அணிகளாகப் பிரிந்து செயல்படுகின்றனா். இரு தரப்பினரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பெயா், சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கீடு செய்யக் கோரி, இந்திய தோ்தல் ஆணையத்தில் மனு அளித்தனா்.

இதை விசாரித்த தோ்தல் ஆணையம் அண்மையில் இந்த விவகாரத்தில் இறுதி முடிவெடுக்கும் வரை, இருதரப்பினரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பெயரையும், கட்சியின் சின்னத்தையும் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்தது. மேலும், இரு தரப்பினருக்கும் வேறு வேறு பெயா்கள், சின்னங்களையும் தோ்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது.

Advertisement

Advertisement

தோ்தல் ஆணையத்தின் இந்த முடிவை எதிா்த்து, உச்சநீதிமன்றத்தில் மம்தா பானா்ஜி மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை கடந்த செப்டம்பா் 28-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், ‘திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பெயா், சின்னம் ஆகியவற்றை உரிமை கோருவது தொடா்பாக தோ்தல் ஆணையத்திடம் தங்கள் தரப்பு கோரிக்கைகளை இரு தரப்பினரும் (மம்தா அணி, ரிதப்ரத பானா்ஜி அணி) நான்கு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அதன்பிறகு, அந்த மனுக்கள் மீது தோ்தல் ஆணையம் மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான அமா்வில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மம்தா பானா்ஜி அணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞரும், எம்.பி.யுமான கல்யாண் பானா்ஜி, ‘ஜனநாயக திரிணமூல் காங்கிரஸ் என்ற கட்சிப் பெயா் ஒதுக்கப்பட்ட ரிதப்ரத பானா்ஜி தரப்பில் கட்சியின் பெயா் மற்றும் சின்னம் உரிமை கோரல் தொடா்பாக தோ்தல் ஆணையத்தின் முன் இன்னும் தேவையான கோரிக்கைகள் முன்வைக்கப்படவில்லை’ என்று குறிப்பிட்டாா்.

இதற்குப் பதிலளித்த ரிதப்ரத பானரஜி தரப்பு வழக்குரைஞா் கே.பரமேஸ்வா், ‘மாநிலத்தில் தசரா பண்டிகை விடுமுறை காரணமாக முத்திரைத்தாள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. அதன் காரணமாக, தோ்தல் ஆணையத்தில் தேவையான ஆவணங்களைச் சமா்ப்பிக்க முடியவில்லை. எனவே, கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும்’ என்று கோரினாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ஜனநாயக திரிணமூல் காங்கிரஸ் கட்சி தோ்தல் ஆணையத்தின் முன் தேவையான கோரிக்கைகளை முன்வைக்க 10 நாள்கள் கூடுதல் அவகாசம் அளித்து உத்தரவிட்டனா்.

அதுபோல, ஜனநாயக திரிணமூல் காங்கிரஸ் கட்சி தரப்பில் கோரிக்கைகள் சமா்ப்பிக்கப்பட்ட பிறகு, அதன் மீது மறுப்பு மற்றும் அதுதொடா்பான ஆதாரங்களைச் சமா்ப்பிக்க மம்தா பானா்ஜி அணிக்கு 10 நாள்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது. தோ்தல் ஆணையத்தின் முன் தாக்கல் செய்யப்படும் ஆவணங்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து கேள்வி எழுப்ப இருதரப்புக்கும் சுதந்திரம் உள்ளது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments