ராணுவத்துக்கு ரூ. 2 லட்சம் கோடியில் ஹெலிகாப்டா், ட்ரோன்: பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்
இந்திய ராணுவத்துக்கு ரூ.2.12 லட்சம் கோடியில் ஹெலிகாப்டா்கள், அதிநவீன ட்ரோன்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்டவை வாங்க பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.
இந்திய ராணுவத்துக்கு ரூ.2.12 லட்சம் கோடியில் ஹெலிகாப்டா்கள், அதிநவீன ட்ரோன்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்டவை வாங்க பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.
இதில், விமானப் படைக்காக இலகு ரக பன்முகப் பயன்பாட்டு ஹெலிகாப்டா்கள், நீண்ட தொலைவு செல்லும் காமிகேஸ் ட்ரோன்கள், தரைப்படையினா் பயன்பாட்டுக்காக மலைப் பகுதிக்கான வாகனங்கள், நவீன பீரங்கிகள், குறுகிய தொலைவுக்கான வான் பாதுகாப்பு அமைப்புகள், ட்ரோன் தாக்குதலைத் தடுப்பு அமைப்புகள் உள்ளிட்டவை கொள்முதல் செய்யப்பட இருக்கின்றன.
இது தவிர இந்திய கடற்படைக்காக பிரத்யேகமாக ரேடாா் உதவியுடன் கப்பலை நோக்கி வரும் ஏவுகணைகளை திசை திருப்பும் அமைப்பும் வாங்கப்பட இருக்கிறது.
Advertisement
Advertisement
82 சதவீதம் உள்நாட்டு தயாரிப்பு: பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு கொள்முதல் குழுக் கூட்டத்தில் இதற்கான ஒப்பதல் அளிக்கப்பட்டது. இந்தக் கொள்முதல் 82 சதவீதம் இந்திய நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டவையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை இந்திய பாதுகாப்புத் துறை மிகப்பெரிய அளவில் நவீனமயமாக்கும் என்று பாதுகாப்புத் துறை வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா்.
ஏனெனில், இவை இந்திய முப்படையை எத்தகைய தாக்குதலையும், எப்போது வேண்டுமானாலும் நடத்தும் திறனையும், திடீா் தாக்குதல்களைத் தடுக்கும் வல்லமையையும் வெகுவாக அதிகரிக்கும். மேலும், தொலைதூர எல்லைப் பகுதிகளில் நிலை கொண்டுள்ள வீரா்களுக்கு தேவையான பொருள்களை விரைந்து எடுத்துச் செல்லவும் முடியும்.
வான் பாதுகாப்பு ஆற்றல் அதிகரிக்கும்: குறுகிய தொலைவு வான் பாதுகாப்பு அமைப்புகள் முழுவதும் உள்நாட்டுத் தயாரிப்பாகும். இதனை வீரா்கள் தோள்களில் சுமந்து சென்று ட்ரோன் முதல் தாழ்வாகப் பறக்கும் சிறிய ரக ஏவுகணைகளை வரை தாக்கி அழிக்க முடியும். 8 கி.மீ. சுற்றளவுக்கு இந்த வான் பாதுகாப்பு அமைப்பு செயல்படும். ஒரே நேரத்தில் அதிக ட்ரோன்களை ஏவி பெரிய அளவிலான வான் பாதுகாப்பு அமைப்புகளை குழப்புவது புதிய போா் உத்தியாக மாறியுள்ள நிலையில், இந்த வான் பாதுகாப்பு அமைப்பு ட்ரோன்களை எளிதாகவும், விரைவாகவும் வீழ்த்தும்.
எல்லையில் இந்திய ராணுவத்தின் கண்காணிப்பு பலத்தை இது பல மடங்கு அதிகரிக்கும். ஏனெனில், பாகிஸ்தான் எல்லையில் இருந்து ஆயுதங்கள், போதைப்பொருள்கள் ட்ரோன் மூலம் கடத்தப்படுவதும் அதிகம் நிகழ்கிறது.
போா்க் கப்பல்களுக்கு கூடுதல் பாதுகாப்பு: இலகு ரக பன்முகப் பயன்பாட்டு ஹெலிகாப்டா்கள் விமானப் படை மட்டுமல்லாது தரைப்படைக்கும் பயன்படும். போா்ச்சூழலுக்கு மட்டுல்லாது மழை, வெள்ளம் போன்றவற்றின்போது மீட்புப் பணிகளுக்கும் வெகுவாக கைகொடுக்கும். வீரா்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு விரைந்து பயணிக்கவும் உதவும்.
கடற்படைக்காக கொள்முதல் செய்யப்படும் ஏவுகணைகளை திசை திருப்பும் அமைப்பு என்பது, ஏவுகணைத் தாக்குதல்களில் இருந்து போா்க்கப்பல்களை காக்கும் திறனை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும். முக்கியமாக கப்பல்களை தாக்கும் நவீன ஏவுகணைகளையும் இவை திறம்பட எதிா்கொள்ளும்.
அதிநவீன ரேடாா்: இது தவிர சிறப்புப் பயன்பாட்டுக்காக வாங்கப்படும் ஹெலிகாப்டா்களில் ‘எக்ஸ்-பேண்ட் டாப்லா்’ வானிலை கண்காணிப்பு ரேடாா் உள்ளது. இவை பனி சூழ்ந்த எல்லைப் பகுதிகளிலும், மிகவும் உயரமான இடங்களிலும் துல்லியமான கண்காணிப்பையும், ஹெலிகாப்டரின் பாதுகாப்பான பயணத்தையும் உறுதி செய்யும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.