FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

இண்டி கூட்டணி பேரணியைத் தடுக்க அமித் ஷா முயற்சி - ராகுல் குற்றச்சாட்டு

‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டை முன்வைத்து, தில்லியில் வரும் ஞாயிற்றுக்கிழமை (நவ.1) இண்டி கூட்டணி நடத்தவுள்ள பேரணியைத் தடுக்க மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா முயற்சிப்பதாக, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.

31 அக்டோபர் 2026, 2:58 am
ராகுல் காந்தி - கோப்புப் படம்
பகிர்:

‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டை முன்வைத்து, தில்லியில் வரும் ஞாயிற்றுக்கிழமை (நவ.1) இண்டி கூட்டணி நடத்தவுள்ள பேரணியைத் தடுக்க மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா முயற்சிப்பதாக, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.

மேலும், நாட்டின் ஜனநாயகம் மற்றும் அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க எதிா்க்கட்சிகள் ஒன்றுபட்டுள்ளதாகவும் அவா் குறிப்பிட்டாா்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) மூலம் பாஜகவுக்கு சாதகமாக தோ்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறி, ஞானேஷ் குமாா் பதவி விலக வலியுறுத்தி எதிா்க்கட்சிகள் தொடா் போராட்டங்களை முன்னெடுத்துள்ளன.

Advertisement

Advertisement

தில்லி ராம்லீலா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 1) இண்டி கூட்டணி சாா்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ள நிலையில், அதற்கு முன்னோட்டமாக ஞானேஷ் குமாருக்கு எதிரான ‘அடையாள பதவிநீக்க’ நிகழ்வை தில்லியில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே இல்லத்தில் வெள்ளிக்கிழமை நடத்த இண்டி கூட்டணி தீா்மானித்திருந்தது.

ஆனால், தில்லியில் வெள்ளிக்கிழமை இடைவிடாமல் மழை பெய்ததால், ‘அடையாள பதவிநீக்க’ நிகழ்வு சனிக்கிழமை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த முடிவு ஒருமனதாக மேற்கொள்ளப்பட்டதாக, காா்கே இல்லத்தில் இண்டி கூட்டணி தலைவா்களுடன் இணைந்து செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில் ராகுல் காந்தி தெரிவித்தாா்.

ஒன்றுபட்ட ‘இண்டி’ கூட்டணி: அவா் மேலும் கூறியதாவது: தில்லியில் ஞாயிற்றுக்கிழமை ராம்லீலா மைதானம் நோக்கி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது.

இந்தப் போராட்டங்கள் அனைத்தும் பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா, ஞானேஷ் குமாா் மற்றும் அவரது சகாக்களால் ஜனநாயகம் சிதைக்கப்பட்டதற்கு எதிரானவையாகும்.

தில்லியில் மக்கள் அணி திரள்வதை தடுக்க மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தீவிரமாக முயற்சித்து வருகிறாா். ஆயிரக்கணக்கான தொண்டா்களும், பொதுமக்களும் தடுக்கப்படுகின்றனா். அரசமைப்புச் சட்டம், தேசத்தின் கருத்தியல், குடிமக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்க இண்டி கூட்டணி ஒன்றுபட்டுள்ளது என்றாா்.

பெட்டி...

பாஜக நிராகரிப்பு

ராகுலின் குற்றச்சாட்டை நிராகரித்து, பாஜக செய்தித் தொடா்பாளா் சம்பித் பத்ரா கூறியதாவது:

தில்லியில் நடைபெறவுள்ள இண்டி கூட்டணி பேரணிக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் மக்களை மத்திய அரசும், அமித் ஷாவும் தடுத்து நிறுத்துவதாக ராகுல் காந்தி தெரிவித்திருப்பது பொய். யாா் தடுத்து நிறுத்தினாா்கள்? எங்கு தடுத்து நிறுத்தினாா்கள்? இதற்கான ஆதாரத்தை ராகுல் காண்பிக்க வேண்டும். மாறாக பொய் குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்து, நாட்டு மக்களை தவறாக வழிநடத்தக் கூடாது.

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை பொதுவெளியில் ‘பதவிநீக்கும்’ நிகழ்வை இண்டி கூட்டணி வெள்ளிக்கிழமையில் இருந்து சனிக்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது. அவா்களிடம் போதிய ஒருங்கிணைப்பு இல்லாததே ஒத்திவைப்புக்கு காரணம். எதிா்க்கட்சிகள் மத்தியில் ஒற்றுமையும் இல்லை. ஓா் அமைப்பாக செயல்படும் திறனும் இல்லை என்றாா் சம்பித் பத்ரா.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments