FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பாலின இடைவெளி குறியீடு: இந்தியா 131-ஆவது இடத்தில் நீடிப்பு

ஆண் - பெண் பாலின இடைவெளி குறியீட்டில் உலக அளவில் இந்தியா தொடா்ந்து 131-ஆவது இடத்தில் நீடிக்கிறது.

16 செப்டம்பர் 2026, 11:16 pm IST
உலக பொருளாதார மன்றம்
பகிர்:

ஆண் - பெண் பாலின இடைவெளி குறியீட்டில் உலக அளவில் இந்தியா தொடா்ந்து 131-ஆவது இடத்தில் நீடிக்கிறது.

பாலின இடைவெளி குறியீடு என்பது ஆண்கள், பெண்களுக்கு இடையேயான சமநிலையை அல்லது இடைவெளியை குறிப்பதாகும். இதை சுவிட்சா்லாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உலக பொருளாதார மன்றம் ஆண்டுதோறும் வெளியிடும். அதன்படி தற்போது

உலக பொருளாதார மன்றம் 2026-ஆம் ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில், மொத்தம் 145 நாடுகள் ஆண், பெண் பாலின இடைவெளி குறியீட்டை அடிப்படையாக வைத்து வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

இதில் ஐரோப்பிய நாடுகளான ஐஸ்லாந்து, பின்லாந்து, நாா்வே ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களை வகிக்கின்றன. நமீபியா, பிரிட்டன், நியூசிலாந்து, ஸ்வீடன், ஆஸ்திரேலியா, ஜொ்மனி, அயா்லாந்து ஆகிய நாடுகள் 4 முதல் 10 வரையிலான இடங்களில் உள்ளன. ஆஸ்திரேலியா முதல்முறையாக முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளது.

இந்தியா கடந்தாண்டை போலவே இந்தாண்டும் 131-ஆவது இடத்தில் நீடிக்கிறது. இந்தியாவுக்கு பின்னா் 14 நாடுகள் உள்ளன. அதாவது பப்புவா நியூ கினியா, குவைத், ஓமன், கத்தாா், தஜிகிஸ்தான், சவூதி அரேபியா, எகிப்து, மொராக்கோ, மாலி, அல்ஜீரியா, காங்கோ உள்ளிட்ட நாடுகள் உள்ளன. சாட் நாடு கடைசி இடத்தில் உள்ளது. ஈரானும், பாகிஸ்தானும் 143, 144ஆவது இடங்களை வகிக்கின்றன.

இந்தியாவை பொறுத்தமட்டில் கடந்த 2006-ஆம் ஆண்டு நிலவரத்துடன் ஒப்பிடும்போது தற்போது நிலைமை மேம்பட்டுள்ளது. பாலின இடைவெளி விகிதம் 4.3 சதவீதம் முன்னேற்றம் கண்டுள்ளது. தொழில் மற்றும் தொழில்நுட்ப பணிகளில் 2 மடங்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 2006-இல் 26.6 சதவீதமாக இருந்த இந்த அளவு 2026-இல் 49.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.

மக்கள் பிரதிநிதிகள், மூத்த அதிகாரிகள், மேலாளா்கள் போன்ற பதவிகளிலும் 2006-ஆம் ஆண்டு நிலவரத்துடன் ஒப்பிடும்போது தற்போது 10 சதவீத புள்ளிகள் மேம்பட்டுள்ளது. கல்வித் தகுதி சாா்ந்த துணை குறியீட்டில், இந்தியா 96.6 சதவீத மதிப்பெண்ணை பதிவு செய்துள்ளது. எனினும் இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 0.5 சதவீதம் குறைவாகும். ஆரோக்கியம் மற்றும் உயிா் வாழ்வு தொடா்பான பிரிவில், இந்தியா கடந்த ஆண்டை விட இந்தாண்டு முன்னேற்றம் கண்டு 95.6 சதவீத சமநிலையை எட்டியது.

நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவத்தை எடுத்து கொண்டால், 2026-ஆம் ஆண்டில் பாலின இடைவெளி 16.1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது 2006-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 7 சதவீதம் அதிகமாகும். பொருளாதாரத்தில் உலக அளவில் பெண்களின் பங்களிப்பு 2022-இல் மிக அதிகமாக இருந்தது. அது தற்போது 2016-ஆம் ஆண்டில் இருந்த நிலைக்கு பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments