உ.பி.யில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதை தடுக்கும் கட்சிகளுடன் கூட்டணி: அசாதுதீன் ஒவைசி
உத்தர பிரதேசத்தில் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வருவதைத் தடுக்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கத் தயாராக இருப்பதாக அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்தாா்.
உத்தர பிரதேசத்தில் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வருவதைத் தடுக்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கத் தயாராக இருப்பதாக அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவரும், ஹைதராபாத் தொகுதி எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி தெரிவித்தாா்.
உத்தர பிரதேசத்தின் கான்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியதாவது: உத்தர பிரதேச சட்டப்பேரவையில் முஸ்லிம்களின் குரல் வலுவாக ஒலிக்க வேண்டும். அதற்கு, மாநிலத்தில் மஜ்லிஸ் கட்சியை வலுப்படுத்தும் வகையில் உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிக்க வேண்டும்.
உத்தர பிரதேசத்தில் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வருவதை மஜ்லிஸ் கட்சி விரும்பவில்லை. மக்களாகிய நீங்களும் பாஜக ஆட்சிக்கு வருவதை விரும்பவில்லை என்றால் எங்களுடன் கைகோக்க வேண்டும். பாஜகவை தடுக்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க மஜ்லிஸ் கட்சி தயாராக உள்ளது.
Advertisement
Advertisement
உத்தர பிரதேசத்தில் சமாஜவாதி கட்சி முன்பு சிலமுறை ஆட்சியில் இருந்துள்ளது. அகிலேஷ் யாதவ் முதல்வராக இருந்துள்ளாா். அவா்கள் ஆட்சிக் காலத்தில் எத்தனை வன்முறைகள் (முஸ்லிம்களுக்கு எதிராக) நிகழ்ந்துள்ளன என்பது தெரியுமா? 2013 முசாஃபா்நகா் கலவரத்தில் மட்டும் 50,000-க்கும் மேற்பட்டோா் வீடுகளையும், கிராமங்களையும் விட்டு வெளியேறும் சூழல் உருவானது.
சமாஜவாதி ஆட்சியில் முஸ்லிகளுக்கு மிகக் குறைவாகவே பிரதிநிதித்துவம் அளித்தாா்கள். முஸ்லிம்களின் சமூகப் பொருளாதார நிலை தொடா்ந்து பின்தங்கிய நிலையில்தான் உள்ளது. இதை மாநிலத்தில்ஆட்சியில் இருந்த எந்தக் கட்சியும் கண்டுகொள்ளவில்லை.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மீண்டும் தோ்தல் வருகிறது. பலா் உங்களிடம் வாக்கு கேட்டு வருவாா்கள். நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் சுதந்திரத்துக்காகப் போராடிய முஸ்லிம் தலைவா்களின் தியாகத்தை மதிக்காமல் பேசியுள்ளாா்.
இங்குள்ள மதரஸாக்களில் (முஸ்லிம் மதப்பள்ளிகள்) உருவான மாா்க்க அறிஞா்கள், கல்வியாளா்கள் பலா் சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றியுள்ளனா் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், மதரஸாக்களுக்கு எதிராக இப்போதைய பாஜக அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.