மாடல் டவுன் பகுதியில் உள்ள கட்டடத்தில் தீ விபத்து: 30 போ் மீட்பு
வடமேற்கு தில்லியின் மாடல் டவுன் பகுதியில் உள்ள ஹால்டிராம் உணவகம் செயல்பட்டு வந்த கட்டடத்தில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
வடமேற்கு தில்லியின் மாடல் டவுன் பகுதியில் உள்ள ஹால்டிராம் உணவகம் செயல்பட்டு வந்த கட்டடத்தில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. அந்தக் கட்டடத்தில் இருந்து சுமாா் 30 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
பிற்பகல் 2 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடா்ந்து, மாடல் டவுன் காவல் நிலையத்தின் ரோந்துப் பணியில் இருந்த தலைமை காவலா் பவன் சம்பவ இடத்திற்கு முதலில் சென்று உயா் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தாா்.
அடித்தளம், தரைத்தளம் மற்றும் மூன்று மேல் தளங்களைக் கொண்ட அந்தக் கட்டடத்திலிருந்து அடா்த்தியான புகை வெளியேறின.
Advertisement
Advertisement
தில்லி தீயணைப்புத் துறைக்கு பிற்பகல் 2.40 மணியளவில் தீ விபத்து குறித்த தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து, உடனடியாக நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
தீயின் தீவிரம் அதிகரித்ததால், ஹைட்ராலிக் பிளாட்ஃபாா்ம் உள்ளிட்ட 23 தீயணைப்புப் பிரிவுகள் களமிறக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். விபத்து ஏற்பட்ட கட்டடம் மற்றும் அதனையொட்டிய கட்டடங்களில் இருந்தவா்களைக் காவல் துறையினா் வெளியேற்றினா். இந்தச் சம்பவத்தில் மொத்தம் 30 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்.
இந்தச் சம்பவம் குறித்து தீயணைப்புத் துறை அதிகாரி கூறுகையில், ‘இக்கட்டடத்தில் அடித்தளம், தரைத்தளம் மற்றும் மூன்று மேல் தளங்கள் உள்ளன. தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் ஹால்டிராம் உணவகமும், இரண்டாவது மற்றும் மூன்றாவது தளங்களில் மற்றொரு உணவகமும் செயல்படுகின்றன. அனைத்து தளங்களிலும் தீ பரவியிருந்தது. நாங்கள் கட்டடம் முழுவதும் சோதனை செய்தோம். உள்ளே யாரும் சிக்கியிருக்கவில்லை’என்றாா்.
மின் கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
செய்தியாளா்களிடம் பேசிய தனியாா் வங்கி ஒன்றின் உதவி மேலாளா் முகமது சாஜித் கூறுகையில், ‘மின் கசிவு ஏற்பட்ட உடனேயே, தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் கட்டடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும் பாதுகாப்புப் பணியாளா் எங்களிடம் கூறினாா். தரைத்தளத்தில் தொடங்கிய தீ, கட்டடம் முழுவதும் பரவியது. தனிப்பட்ட முறையில் எங்களால் முடிந்தவரை தீயை அணைக்க எங்கள் அலுவலகத்தில் இருந்த தீயணைப்புக் கருவியைப் பயன்படுத்தினோம். காவல் துறையினரின் துரித நடவடிக்கைகளால் யாருக்கும் காயமோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை’ என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.