புதிய ட்ராய் விதிகளின் கீழ் 30 நாள் ரீசார்ஜ், குரல் அழைப்பு திட்டங்கள் வழங்கப்படும்: ராகவ் சத்தா எம்பி
30 நாள்களுக்கான ரீசார்ஜ், குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் வசதிகள் மட்டுமே கொண்ட திட்டங்களை இனி பெற முடியும் என மாநிலங்களவை உறுப்பினர் ராகவ் சத்தா தெரிவித்துள்ளார்.
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) அறிவித்துள்ள புதிய விதிகளின் கீழ், ப்ரீபெய்ட் மொபைல் பயனர்கள் 30 நாள்களுக்கான ரீசார்ஜ், குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் வசதிகள் மட்டுமே கொண்ட திட்டங்களை இனி பெற முடியும் என மாநிலங்களவை உறுப்பினர் ராகவ் சத்தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இந்தாண்டு தொடக்கத்தில் அவர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாகவே இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஒரு ஆண்டில் 12 மாதங்கள் உள்ளன. ஆனால், ப்ரீபெய்ட் பயனர்கள் 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டியுள்ளது. ஏன் 28 நாள்களுக்கு ஒருமுறை ரீசார்ஜ் செய்யவேண்டும்? 30 நாள்களுக்கு செல்லுபடியாகும் விதமாக திட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.
Advertisement
Advertisement
டேட்டா வசதி இல்லாமல் குரல் அழைப்பு வசதி மட்டுமே கொண்ட திட்டங்களை விரும்பும் பல நுகர்வோர்கள் உள்ளனர். அவர்களுக்காக இன்கமிங் மற்றும் அவுட்கோயிங் அழைப்பு வசதிகளுடன் கூடிய ப்ரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும்” என்று தெரிவித்தார்.
தொலைத்தொடர்பு நுகர்வோர் பாதுகாப்பு (13-வது திருத்தம்) விதிமுறைகள், 2026-ஐ செப்டம்பர் 22 அன்று ட்ராய் அறிவித்தது. குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் வசதி மட்டுமே கொண்ட சிறப்பு ரீசார்ஜ் திட்டங்களை இந்தத் திருத்தம் விரிவுபடுத்துகிறது.
இதில் 30 நாட்கள் அல்லது அதற்கும் குறைவான கால அளவு கொண்ட திட்டங்களும் ஒவ்வொரு மாதமும் அதே தேதியில் தானாகவே புதுப்பிக்கப்படும் திட்டமும் அடங்கும்.
புதிய திருத்தத்தின் கீழ், தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள், மொத்த ரீசார்ஜ் திட்டங்களில் வழங்கப்படும் குறுகிய கால அளவு கொண்ட குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் மட்டுமே கொண்ட திட்டங்களையும் அதற்கேற்ப குறைந்த கட்டணத்தில் வழங்கவேண்டும். 1,132 பங்குதாரர்களிடமிருந்து கருத்துகளைப் பெற்ற ஆலோசனை செய்த பிறகே இந்த விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம், முதியவர்கள் மற்றும் குறைந்த பட்ஜெட் பயனர்கள் போன்ற டேட்டா வசதி தேவையில்லாத மற்றும் இன்கமிங் மற்றும் அவுட்கோயிங் அழைப்புகளுக்கு மட்டும் தொலைபேசியைப் பயன்படுத்தும் நுகர்வோருக்கு இந்த திருத்தம் பெரிதும் உதவும் என ராகவ் சத்தா கூறினார்.
குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் மட்டும் கொண்ட ரீசார்ஜ் திட்டங்களுக்கு தனது முந்தைய கட்டமைப்பின் அடிப்படையிலேயே ட்ராய்-ன் புதிய விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இணையச் சேவை தேவையில்லாத பயனர்களுக்காக டேட்டா இல்லாமல் குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் வசதிகளை மட்டும் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களாகவே இத்தகைய ரீசார்ஜ் பேக்குகளை ஒழுங்குமுறை ஆணையம் தற்போது வரையறுத்துள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்களின் ஆதரவு பெற்ற பிரச்சினைகளை எழுப்புகையில் அது எவ்வாறு ஒழுங்குமுறை நடவடிக்கைகளாக மாறுகிறது என்பதை இந்த நிகழ்வு காட்டுவதாக ராகவ் சத்தா குறிப்பிட்டார்.
"ஆக்கபூர்வமான அரசியலுக்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம் இது. மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் இதுபோன்ற முயற்சிகள் தொடரும் என்று நம்புகிறேன்," என்று அவர் தெரிவித்தார்
30-day recharge and voice calling plans will be offered under the new TRAI rules: MP Raghav Chadha
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.