FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பட்டாசுகளுக்கு முழு தடை விதிக்கப்படாது: உச்சநீதிமன்றம்

நாடு முழுவதும் பட்டாசுகளுக்கு முழுமையான தடை விதிக்கப்படாது என்றும், அதே நேரத்தில் 24 மணி நேரமும் அவற்றை வெடிக்க அனுமதிக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

1 October 2026, 4:45 am IST
உச்சநீதிமன்றம்
பகிர்:

நாடு முழுவதும் பட்டாசுகளுக்கு முழுமையான தடை விதிக்கப்படாது என்றும், அதே நேரத்தில் 24 மணி நேரமும் அவற்றை வெடிக்க அனுமதிக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

மக்களின் மத உணர்வுகளையும், காற்று மாசுபாட்டினால் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் சமநிலையில் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்தது.

பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் சுகாதாரக் கேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அர்ஜுன் கோபால் என்பவர் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

Advertisement

Advertisement

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், "தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் என்பது தசரா கொண்டாட்டத்தில் இருந்தே தொடங்குகிறது. எனவே, பட்டாசுகள் வெடிப்பதற்கு ஒரு கால வரம்பை நிர்ணயிக்க முடியாது' என்று வாதிட்டார். அதற்கு நீதிபதிகள், கடந்த ஆண்டு பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை நீதிமன்றம் நிர்ணயித்ததாக சுட்டிக்காட்டினர்.

இதைத்தொடர்ந்து, மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் ஐஸ்வர்யா பாட்டீ ஆஜராகி, அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சில் } தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (சிஎஸ்ஐஆர்-நீரி) தயாரித்துள்ள புதிய வழிகாட்டுதல்களின்படி, சரவெடிகள் மற்றும் பசுமை பட்டாசுகளை குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கலாம் என்று கூறினார்.

இதைக் கேட்ட நீதிபதி எம்.எம். சுந்தரேஷ், "பட்டாசுகளுக்கு முழு தடை விதிக்க மாட்டோம். அதேபோல நாள் முழுவதும் பட்டாசுகளை வெடிக்கவும் அனுமதிக்க முடியாது. முழு தடை என்பது உணர்வுபூர்வமான பாதிப்பை ஏற்படுத்தும். அதேவேளையில், நாள் முழுவதும் வெடித்தால் முதியோர், நோயாளிகள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதிப்பு உண்டாகும். குறிப்பிட்ட நேரத்தையும், அனுமதிக்கப்பட்ட பட்டாசு வகைகளையும் நிர்ணயிப்பதே சரியான தீர்வாக இருக்கும்' என்று கருத்து தெரிவித்தார்.

இதையடுத்து, சரவெடிகளின் அளவு, வெடிகளின் எண்ணிக்கை மற்றும் வெடிக்கும் நேர இடைவெளி ஆகிய கட்டுப்பாடுகளுடன் புதிய தலைமுறை சரவெடிகளை உற்பத்தி செய்ய அனுமதிக்கலாம் என்ற மத்திய அரசின் பரிந்துரையை ஏற்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், "பேரியம்' கலக்கப்பட்ட இரண்டாம் தலைமுறை பசுமைப் பட்டாசுகளின் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து தில்லி, போபால், கொல்கத்தா, சென்னை ஆகிய 4 நகரங்களில் திறந்தவெளியில் பரிசோதனை நடத்த மத்திய அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. அதை ஏற்று ஆய்வின் முடிவுகளைச் சமர்ப்பிக்க அவகாசம் வழங்கிய நீதிபதிகள், வழக்கின் அடுத்த விசாரணையை அக்.15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments