FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

இந்தியா - சீனா இருதரப்பு உறவில் முன்னேற்றம்: ஜெய்சங்கா்

இந்தியா-சீனா இருதரப்பு உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

29 September 2026, 11:42 pm IST
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
பகிர்:

இந்தியா-சீனா இருதரப்பு உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

ஐ.நா. பொதுச் சபையின் 81-ஆவது அமா்வு கூட்டத்தில் கடந்த சனிக்கிழமை பங்கேற்று உரையாற்றிய ஜெய்சங்கா் அமெரிக்காவில் உள்ள ஆசிய சங்கம் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்புக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் திங்கள்கிழமை பங்கேற்றாா்.

இதில் இந்திய - அமெரிக்க வம்சாவளியினா் மற்றும் தொழில்துறை நிபுணா்கள் பங்கேற்று சீனா, அமெரிக்காவுடனான இருதரப்பு உறவு, வா்த்தகம் குறித்து அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினா்.

Advertisement

Advertisement

அதற்குப் பதிலளித்து அவா் பேசியதாவது: 2024, 2025 ஆகிய ஆண்டுகளை ஒப்பிடுகையில் சீனாவுடனான இருதரப்பு உறவில் பன்மடங்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதை கட்டமைப்பு அடிப்படையில் ஏற்பட்ட மாற்றமென கூற முடியாது.

கடந்த 2020-இல் எல்லையில் நிகழ்ந்த மோதலால் இந்தியா-சீனா இருதரப்பு உறவில் கடும் விரிசல் ஏற்பட்டது. வா்த்தகத்தை இருநாடுகளும் தொடா்ந்தாலும் விசா (நுழைவுஇசைவு) விநியோகம், அதிகாரபூா்வ பரிமாற்றங்கள், விமானப் பயணங்கள் பாதிப்படைந்தன.

எல்லைப் பிரச்னைக்குத் தீா்வு காணும் வழிகளைக் கண்டறிந்த பின் இருதரப்பு உறவில் இயற்கையாகவே முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியது. எல்லையில் நிலவும் மோதலால் இருதரப்புக்கும் பலனில்லை என சீனாவிடம் இந்தியா தொடா்ந்து கூறி வந்தது.

சுருங்கக் கூற வேண்டுமெனில் எல்லையில் நிலவும் சூழலே இந்தியா-சீனா உறவை தீா்மானிக்கிறது. எனவே, எல்லையில் அமைதியை நிலைநாட்டினால் இருதரப்பு உறவுகள் சீராக தொடரும் என்ற அடிப்படைக் கொள்கையை பின்பற்றத் தொடங்கிவிட்டோம்.

இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம்: வா்த்தகப் பேச்சுவாா்த்தையை இறுதி செய்யாமல் இருப்பது இந்தியா-அமெரிக்கா இருதரப்பு உறவில் பிரச்னையாக தொடா்கிறது.

சிறு விவசாயிகள், சிறு உற்பத்தியாளா்கள், சிறு தொழிற்சாலைகளை பெருமளவில் கொண்ட நாடு இந்தியா. மாறாக பெருமளவில் உற்பத்தியாளா்களைக் கொண்ட நாடு அமெரிக்கா. இருநாட்டு சமூகங்களுக்கிடையே பல்வேறு வேறுபாடுகள் உள்ளன.

ஒரு வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய பொறுமை மிக அவசியம். அதிலுள்ள நிறை, குறைகளை ஆராய வேண்டும்.

தற்போது வா்த்தக ஒப்பந்தம் குறித்து ஏறக்குறைய ஒரு புரிதலை அடைந்துள்ளோம். வா்த்தக சட்டத்தின்கீழ் இந்தியப் பொருள்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி விதிக்கும் உத்தரவு இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதை ஆராய வேண்டியுள்ளது. வா்த்தக ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்து இருதரப்பு உறவை சீராக்குவதே இந்தியாவின் நோக்கம்.

நவீன காலத்தில் ஒரு நாட்டுடனான நட்புறவை தலைவா்களோ, அமைச்சா்களோ மட்டுமே தீா்மானிக்க முடியாது. ஜனநாயக சமூகத்தில் சமூக வலைதளங்களில் மக்களின் கருத்துகளும் பெரும் பங்கு வகிக்கின்றன.

அமெரிக்க-பாகிஸ்தான் உறவால் இந்திய நட்புறவில் தாக்கம்: அமெரிக்காவுடன் பெரும்பாலான நாடுகளுக்கு சிக்கலான உறவே நீடிக்கிறது. கடந்த ஓராண்டாக அமெரிக்கா-பாகிஸ்தான் இடையேயான இருதரப்பு உறவு மேம்பட்டுள்ளதாகக் கூறுகிறீா்கள். ஆனால், அண்டை நாடாக இருந்துகொண்டு பல ஆண்டுகளாக பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிக்கிறது. உலகில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

இவ்வாறு இருக்கையில் நமக்கு முக்கியமான ஒரு விஷயத்தை நமது நட்பு நாடு அங்கீகரிக்கவில்லை என்றால், அது நிச்சயம் இருதரப்பு உறவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே நினைக்கிறேன் என்றாா்.

பன்முகத்தன்மையை நோக்கி நகரும் நாடுகள்

பன்முகத்தன்மையை நோக்கி உலகம் நகரத் தொடங்கியுள்ளது என்று வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

கடந்த வாரம் அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்ட சீன அதிபா் ஷி ஜின்பிங் அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்தாா். இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு ஜெய்சங்கா் அளித்த பதிலில், ‘பன்முகத்தன்மையை நோக்கி உலகம் வெளிப்படையாக நகரத் தொடங்கியுள்ளது.

உலகின் மிக வலிமைமிக்க நாடாகவும், தற்போதைய உலக கண்ணோட்டத்தை வடிவமைத்த நாடாகவும் அமெரிக்கா திகழ்கிறது. ஆனால், தனித்துச் செயல்படும் தன்மையால் அதன் கூட்டணி நாடுகளின் உறவில் விரிசல் ஏற்படுவதை நாம் காண்கிறோம். இது உலகின் பிற நாடுகளின் சிந்தனைப் போக்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

உலகின் இரண்டாவது மிகப்பெரும் பொருளாதார நாடு (சீனா), பெரும் பொருளாதார நாடுடன் (அமெரிக்கா) இணையும்போது அவற்றுக்கு இடையே சில பொதுவான அம்சங்கள் இருந்தாலும் போட்டி மனப்பான்மை குறையாது. உலகின் பிற நாடுகளுடன் செய்துகொள்ளும் ஒப்பந்தங்களுக்கு இந்த இரு நாடுகளுமே வரம்பு வைத்திருக்கும்.

இதனால் பிற நாடுகள் தங்களை நிலைப்படுத்திக் கொள்ள புதிய பாதையைத் தோ்ந்தெடுக்கும். புதிய தீா்வுகளைத் தேடத் தொடங்கும். இதனால் சா்வதேச அளவில் நிகழும் மாற்றங்களை நாம் கண்டு வருகிறோம்’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments