இந்திய மக்களின் இழப்பில் லாபம் ஈட்டுவது பிராமணர்களா? பெரும் பணக்காரர்களா?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வணிக ஆலோசகர் பீட்டர் நவரோ இரண்டாவது முறையாக இந்தியாவைக் குற்றஞ்சாட்டித் திங்கள்கிழமை தெரிவித்த ஒரு கருத்தானது செய்தி ஊடகங்களில் விரைந்து பரவிக்கொண்டிருக்கிறது.
New Delhi, a laundromat for the Kremlin - இந்தியாவை ரஷியாவின் சலவைக்கூடம் என்றும் Brahmins of profiteering at the expense of the Indian people - இந்திய மக்களின் இழப்பில் பிராமணர்கள் லாபம் ஈட்டுகிறார்கள் என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார் நவரோ.
எதற்காக பிராமின்ஸ் என்று குறிப்பிடுகிறார், யாரைக் குறிப்பிடுகிறார் என்று கொஞ்சம் சந்தேகப்பட்டுத் துழாவும்போதுதான், இந்தச் சொல் உள்ளபடியே பிராமணர்களைக் குறிப்பிடவில்லை. பெரும் பணக்காரர்களைத்தான் குறிப்பிடுகிறது என்பது தெரிய வந்தது. இந்தியா தொடர்புடைய கருத்து என்பதால் பலரும் பிராமணர்கள் என்பதாகவே புரிந்துகொண்டுவிட்டனர்.
ரஷியா – உக்ரைன் போரை ‘மோடியின் போர்’ என்று சில நாள்களுக்கு முன் கருத்துத் தெரிவித்துப் பரபரப்பாக்கியவர் பீட்டர் நவரோ. எனவே, இப்போதும் ‘பிராமணர்கள்’ என்ற இவருடைய கருத்தும் பரபரப்பானது.
இதனிடையே, பிராமின்ஸ் என்று நவரோ, குறிப்பிட்டது நேரடியாக பிராமணர்களை அல்ல; பெரும் பணக்காரர்களைத்தான். ஒருகாலத்தில் அமெரிக்க புதிய இங்கிலாந்தின் பெரும் பணக்காரர்களைக் குறிப்பிட பாஸ்டன் பிராமின் (Boston Brahmins – பாஸ்டன் என்பதொரு நகர்) என்ற சொற்றொடர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
ஆங்கிலம் பேசுவோரிடையே இன்னமும் சமூக அல்லது பொருளாதார ரீதியில் ‘உயர்நிலை’யில் இருப்பவர்களைக் குறிப்பிட பிராமின் என்ற சொல்லைப் பயன்படுத்தும் வழக்கம் இருக்கிறது என்று எக்ஸ் தளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சகரிகா கோஷ் பகிர்ந்தார். பின்னர், அதையே ஏஎன்ஐ செய்தி நிறுவனமும் பகிர்ந்தது.
சரி, ஸ்நானப் பிராப்திகூட இல்லாத அமெரிக்காவுக்கும் பிராமணர்கள் என்ற சொல்லுக்கும் என்ன தொடர்பு? எப்படித் தொடர்பு?
தொடக்க காலத்தில் பிரிட்டனிலிருந்து அமெரிக்காவின் நியு இங்கிலாந்து பகுதியில் குடியேறிய, பாஸ்டன், மசாசூசெட்ஸ் நகர்களைச் சார்ந்த, பரம்பரையாக உயர் வகுப்பினரான ஆங்கிலோ சாக்சன் பிராட்டஸ்டன்ட்கள்தான் ‘பாஸ்டன் பிராமணர்கள்’ எனக் குறிப்பிடப்படுகிறார்கள்.
பணக்கார வெள்ளையின பிரபுக் குலத்தவரான இவர்கள், பத்தொன்பதாம் நூற்றாண்டு, இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பெரும் செல்வாக்குடன் திகழ்ந்தவர்கள்.
இந்தச் சொல்லை, இந்தியாவின் மிக உயர்ந்த சாதியினராகக் கருதப்பட்ட பிராமணர்களுடன் இணைவைத்து, 1861 ஆம் ஆண்டில், தாம் எழுதிய எல்ஸி வென்னர் என்ற நாவலில் ஆலிவர் வெண்டல் ஹோம்ஸ் சீனியர் என்ற எழுத்தாளர் உருவாக்கினார்.
பாரம்பரியம், பரம்பரையான செல்வம், அறிவுசார் பெருமிதம், சமூகத்தில் உயர் மதிப்பு மற்றும் தனித்த குணம் ஆகியவற்றைக் கருதி, இவர்களை நியூ இங்கிலாந்தின் பிராமணர்கள் எனக் குறிப்பிட்டார் அவர். ஹார்வர்ட் பல்கலைக்கழகம், பாஸ்டன் லத்தீன் பள்ளி போன்ற பல கல்வி நிறுவனங்கள் இவர்களால் உருவாக்கப்பட்டவையே.
ஆக, இந்திய மக்களின் இழப்பில் லாபம் ஈட்டுவதாக இப்போது நவரோ குறிப்பிட்டது, இந்த பாஸ்டன் பிராமணர்களுடன் இணைவைத்து, இந்தியப் பெரும் பணக்காரர்களைத்தான்.
மொழிபெயர்ப்பில், ஒரு சொல்லையும் அதற்கான பொருளையும் தெரிந்து வைத்திருப்பது மட்டுமே போதுமானதல்ல; அந்தச் சொல் எந்தெந்த நாட்டில் என்னென்ன பொருள்களில் எல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டியிருக்கிறது.
இதனிடையே, நவரோ சொன்ன பிராமின் என்ற சொல்லும் பொருளும் பற்றி, எக்ஸ் தளத்தில் பெரும் விவாதங்களே நடந்துகொண்டிருக்கின்றன.
இப்படியொரு விளக்கத்தை எதற்காக சகரிகா கோஷ் கூற முன்வருகிறார், நவரோ சொன்னாரா? என்றெல்லாம் அவரையும் சிலர் விமர்சிக்கின்றனர்.
ஆப்பிரிக்க அமெரிக்கர்களைக் குறிப்பிட ஒருகாலத்தில் நீ_ரோ என்ற சொல்லும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. இப்போதும் ஆங்கிலத்தில் சிலர் ஆப்பிரிக்கர்களைக் குறிப்பிட நீ_ரோக்கள் என்று கூறுகிறார்கள். அரை நூற்றாண்டுக்கு முன் பயன்படுத்தப்பட்டது என்பதற்காக இப்போதும் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.
செய்யறிவும் என்னவோ பெரும் பணக்காரர்களைத்தான் சுட்டுகிறது. ஆனாலும், சமூக ஊடகங்களில் இன்னமும் பீட்டர் நவரோ யாரைச் சொல்கிறார்? என்று அவரவர் சிந்தனைப் போக்கிற்கேற்பத் தொடர்ந்து விவாதித்துக் கொண்டே இருக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.