பரிந்துரைத்ததுடன் சரி, நூல்கள் வாங்கப்பட்டதா என்பதுகூட பரிந்துரைக் குழு உறுப்பினர்களுக்குத் தெரியாது! ச. தமிழ்ச்செல்வன் தகவல்!
பெரியார் அறிவுலகம் போன்ற அரசு நூலகங்களுக்கு நூல்கள் வாங்குவதில் பரிந்துரைக் குழுவின் பங்கு பற்றி எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் கூறுவது என்ன...
நூலகங்களுக்கான நூல்கள் வாங்குவதற்குப் பரிந்துரைத்ததுடன் சரி, எந்தெந்த நூல்கள் வாங்கப்பட்டன என்பதுகூட நூல்கள் பரிந்துரைக் குழு உறுப்பினர்களுக்குத் தெரியாதென குழுவில் இடம் பெற்றிருந்த எழுத்தாளர்களில் ஒருவரான ச. தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
புதிதாகத் திறக்கப்பட்ட கோவை பெரியார் அறிவுலகத்தில் குப்பையான போலி நூல்கள் அதிக விலையில் பெருமளவில் வாங்கப்பட்டிருப்பது பற்றி எழுத்தாளர் பெருமாள் முருகன் அம்பலப்படுத்தியிருந்தார்.
கோயம்புத்தூர் பெரியார் அறிவுலகம் உள்பட நூலகங்களுக்குப் புதிய நூல்கள் வாங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த பரிந்துரைக் குழுவில் எழுத்தாளர்களும் கல்வியாளர்களும் இடம் பெற்றிருந்தனர். இந்தக் குழுவில் நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வுப் பிரிவில் பெருமாள் முருகனும் தமிழ்ச்செல்வனும் இடம் பெற்றிருந்தனர்.
Advertisement
Advertisement
இதுபற்றி அறியக் கேட்டபோது, ‘தினமணி.காம்’ இணையதளத்துடன் பேசிய எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன், பரிந்துரைக் குழுவில் நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வுப் பிரிவில் தாம் பங்குபெற்றிருந்ததாகத் தெரிவித்தார்.
“பரிந்துரைக் குழு அமைத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. பின்னர், அனேகமாக ஒரே ஒரு முறை கூட்டம் நடைபெற்றது. பின்னர், நூலகத் துறையிலிருந்து நூல்களைப் பரிந்துரைக்குமாறு கேட்டு மின்னஞ்சல் வந்தது. எல்லாமே ஆன்லைனில்தான்.
“புத்தகங்களின் தலைப்பு, எழுத்தாளர் பெயர், பரிந்துரைப்பதற்கான காரணம் என்பன போன்ற விவரங்களை எக்ஸெல் போன்ற படிவத்தில் நிரப்பி அனுப்ப வேண்டும். குழந்தைகள் பிரிவில் அவர்களே புத்தகங்களின் பட்டியலை அனுப்பி, பரிந்துரைக்கக் கேட்டிருந்தனர்.
“பரிந்துரைப் பட்டியலை அனுப்பியதுடன் பணி முடிந்தது. இரு மாதங்களுக்குப் பிறகு மதிப்பூதியமாக. ரூ. 2 ஆயிரம் அனுப்பிவைத்தனர்.
“அத்துடன் பரிந்துரைத்ததுடன் குழுவில் இடம் பெற்றிருப்போரின் வேலை முடிந்தது. பரிந்துரைத்த புத்தகங்களை வாங்கினார்களா? என்ன வாங்கினார்கள் என்பது பற்றியெல்லாம் பரிந்துரைந்தவர்களுக்கே தெரியாது” என்று குறிப்பிட்டார் ச. தமிழ்ச்செல்வன்.