ஆந்திரத்தில், 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், 25 மக்களவைத் தொகுதிகளுக்கும் இன்று (மே 13) வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
தேர்தல் நடக்கும் முன் மக்களுக்கு பல இடங்களில் அரசியல் கட்சிகளால் ரூ. 1000 முதல் ரூ. 6000 வரை பணப்பட்டுவாடா செய்யப்பட்டு வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் பிரசாரம் கடந்த சனிக்கிழமை (மே 11) மாலை முடிவடைந்தது. பிரசாரம் முடிந்த நாளிலும் பல பகுதிகளில் பணப்பட்டுவாடா தொடர்ந்து நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து பலனாடு மாவட்டம், சட்டெனப்பள்ளி பகுதியில் 18- வது வார்டைச் சேர்ந்த பொதுமக்கள், தங்களுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் வாக்களிக்க பணம் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தும் பணம் தரவில்லை என்பதால் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதே போன்று, பிதாபுரம் நகரத்தில் வாக்களிக்க ரூ.5000 வரை பணம் தருவதாகக் கூறி ஏமாற்றியதாகக் கூறி வேட்பாளரின் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டதில் ஈடுபட்டனர். பின்னர், காவல்துறையினர் போராட்டத்தைக் கலைத்து பொதுமக்களை அனுப்பி வைத்தனர்.
மேலும், ஓங்கோல் நகர் மற்றும் கொண்டேவரம் கிராமப் பகுதியிலும் வாக்காளர்களுக்கு ரூ. 5000 வரை பணம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பணம் கிடைக்காதவர்கள் அதிருப்தியில் அந்தப் பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
விஜயவாடாவில், மாநகராட்சி அலுவலகங்களில் வைத்து பணப் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜயவாடா தொகுதியில் எம்.எல்.ஏ வேட்பாளர் ஒருவர், மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து பொதுமக்களுக்கு ரூ.1000 வழங்கியதாக அந்தப் பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.
முறையான அலுவலகங்கள் இல்லாத வேட்பாளர்கள், தங்களது ஆதரவாளர்கள் மற்றும் வாக்காளர்களை குறிப்பிட்ட இடங்களுக்கு வரவைத்து ரூ.1500 வரை பணம் விநியோகம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
”வாக்களிக்க பணம் கேட்டு போராட்டங்கள் நடப்பது தேர்தல் சட்டங்கள் கடுமையாக அமல்படுத்தப்படவேண்டும் என்பதைக் காட்டுகிறது. தேர்தல் விதிமீறல்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கட்சிகள் மீது தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு சரியான விழிப்புணர்வு ஏற்படும்” என்று ஆசிரியர் ஒருவர் கூறியுள்ளார்.
ஆந்திராவின் வடக்குப் பகுதியில், சில நகர்ப்புற அடுக்குமாடி குடியிருப்புப் பகுதிகளில் வசிப்பவர்கள், வாக்களிக்க வேட்பாளர்களிடம், ஜெனரேட்டர்கள், சூரிய மின்சக்தி தகடுகள் போன்றவற்றைக் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.