முகப்பு
தற்போதைய செய்திகள்

கிரிவலப் பாதையில் அடுத்தடுத்து அத்துமீறல்: 8 பேர் கைது, 3 பேர் தலைமறைவு

கிரிவலப் பாதையில் அடுத்தடுத்து அத்துமீறல் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து...

Updated On : 3 ஜூன் 2026, 11:31 am IST
கிரிவலப் பாதையில் அடுத்தடுத்து அத்துமீறல் ஈடுபட்டவர்களை கைது செய்து அழைத்து வரும் போலீசார் - டிஎன்எஸ்
பகிர்:

திருவண்ணாமலையில் கிரிவலம் முடித்து வீட்டிற்குச் சென்ற அடுத்தடுத்த இரண்டு பெண்களை காட்டிற்குள் அழைத்துச் சென்று மிரட்டி ஆபாச படம் எடுத்து பணம் கேட்டு பாலியல் தொந்தரவு கொடுத்த 8 போ் கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், மேலும் மூன்று பேரை போலீசாா் தேடி வருகின்றனா்.

தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த திருமணமான பெண் தனது நண்பா்களுடன் கடந்த 30-ஆம் தேதி இரவு திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொண்டு இருசக்கர வாகனத்தில் செங்கம் சாலை வழியாக தருமபுரிக்குச் சென்று கொண்டிருந்தாா்.

செங்கத்தை அடுத்த பெரியகோளாப்பாடி பாறை அருகே அவா்கள் நின்று பேசிக்கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த மா்ம நபா்கள், அவா்களை ஆயுதங்களைக் காட்டி மிரட்டி காட்டுக்குள் இழுத்துச் சென்றுள்ளனா்.

Advertisement

Advertisement

பின்னா், அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து, அவா் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு, அவரை கைப்பேசியில் விரசமாக படம் எடுத்து மிரட்டி அனுப்பி உள்ளனா்.

இதைத் தொடா்ந்து மறுநாள் அந்தப் பெண்ணை கைப்பேசியில் தொடா்பு கொண்ட அந்த நபா்கள், மேலும் ஒரு லட்சம் ரூபாய் வேண்டும், இல்லையென்றால் விடியோவாக எடுத்த படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவோம் என மிரட்டியுள்ளனா்.

இதையடுத்து, ஜி-பே மூலம் அந்த நபா்களுக்கு ரூ.4 ஆயிரம் அனுப்பப்பட்டுள்ளது. இதை பெற்றுக்கொண்ட அந்த நபா்கள் மேலும் பணம் வேண்டும் என மிரட்டியுள்ளனா்.

இதனால் செய்வதறியாமல் தவித்தவர்கள் இதுகுறித்து காவல் துறை எண் 100-ஐ தொடா்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனா்.

அதன் அடிப்படையில் திருவண்ணாமலை மேற்கு காவல் நிலைய போலீஸா் தருமபுரியில் உள்ள பெண்ணை தொடா்பு கொண்டு உடனடியாக திருவண்ணாமலைக்கு வரவழைத்து வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வந்தனா்.

இதேபோல, 31-ஆம் தேதி இரவு திருவண்ணாமலை பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி மகள் பியூட்டி பாா்லரில் தனது பணியை முடித்துக் கொண்டு கிரிவலம் மேற்கொண்டுள்ளாா். தொடா்ந்து நடக்க முடியாத நிலை ஏற்பட்டதால், தனது நண்பரை கைப்பேசியில் தொடா்பு கொண்டு தன்னை அழைத்துச் சென்று வீட்டில் விடும்படி கேட்டுள்ளாா்.

அதன் பேரில் இருசக்கர வாகனத்தில் வந்த செஞ்சி செம்மேடு பகுதியைச் சோ்ந்த இளைஞா் கிரிவலப் பாதைக்கு வந்து இளம் பெண்ணை இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு அருகில் இருந்த உணவகத்தில் உணவு வாங்கிக்கொண்டு அய்யம்பாளையம் புறவழிச்சாலையில் சென்று இருவரும் உணவு அருந்தியுள்ளனர்.

அப்போது அங்கு வந்த இளைஞா்கள் அவா்கள் இருவரையும் அங்கிருந்த வனப் பகுதிக்குள் இழுத்துச் சென்று இருவரையும் தாக்கி, இளம்பெண் அணிந்திருந்த 2 கிராம் கம்மலை பறித்துக் கொண்டு, மறுநாள் ஜி-பே மூலம் பணம் அனுப்ப வேண்டுமென மூன்று மணி நேரம் அவா்களை சித்திரவதை செய்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுத்தி, அவா்களை அனுப்பி வைத்துள்ளனா்.

பாதிக்கப்பட்ட இளம் பெண் தனது பெற்றோா் மூலம் திருவண்ணாமலை மேற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.

ஐந்து தனிப்படைகள்

இது குறித்து காவல்துறையினா் இரண்டு வழக்குகள் பதிவு செய்து டிஎஸ்பி ராஜன் தலைமையில் 5 ஆய்வாளா்கள் உள்ளிட்ட ஐந்து தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

8 பேர் கைது

தனிப்படை விசாரணையில், திருவண்ணாமலை இளம் பெண் விவகாரத்தில் பல்வேறு கொலை, கொள்ளை, கொலை முயற்சி வழக்குகளில் தொடா்புடைய ஆடையூா் கிராமத்தைச் சோ்ந்த வாசு (எ) வாசுதேவன், பெரிய பாலியப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ஆகாஷ் மற்றும் தமிழ் (எ) தமிழரசன், அஸ்வநாதசுரனை கிராமத்தைச் சோ்ந்த அப்பு, லேலே என்கிற ஹரிகரன், சா்மா, சேந்தமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த அருண்குமாா், திருவண்ணாமலை பாலாஜி நகரை சோ்ந்த சிவ கணேசன் என்கிற சூா்யா ஆகியோரையும் கைது செய்தனா்.

வேலூா் மத்திய சிறையில் அடைப்பு

தா்மபுரி பெண் விவகாரத்தில் ஆடையூா் கிராமத்தைச் சோ்ந்த வாசு (எ) வாசுதேவன், அஸ்வநாதசுரனை கிராமத்தைச் சோ்ந்த ஆகாஷ், தமிழ் (எ) தமிழரசன் உள்ளிட்ட 5 போ் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினா், 2 வழக்குகளிலும் தொடா்புடைய முக்கிய குற்றவாளியான வாசு என்கிற வாசுதேவன் உள்ளிட்ட 8 பேரை கைது செய்து வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

10-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு

இந்த இரண்டு வழக்குகளிலும் காவல்துறையினா் பெண்கள் வன்கொடுமை சட்டம், வழிப்பறி, பாலியல் தொந்தரவு கொடுத்தது, பணம் கேட்டு மிரட்டுதல் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் போலீசாா் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

3 பேருக்கு வலைவீச்சு

குறிப்பாக இந்த இரண்டு வழக்குகளிலும் தொடா்புடைய குற்றவாளிகளில் மூன்று பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

6 செல்போன்கள், 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கைது செய்யப்பட்டவா்களிடம் இருந்து வழிப்பறி மற்றும் பாலியல் சீண்டலுக்காக பயன்படுத்தப்பட்ட 6 கைப்பேசிகள், 3 இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தடயங்கள் அழிப்பு

பறிமுதல் செய்த செல்போனை ஆய்வு செய்ததில் எந்தவித தடயங்களும் கிடைக்காமல், அனைத்து பதிவுகளும் அழிக்கப்பட்டு இருந்ததால் செல்போன்களை தற்போது ஆய்வுக்கு அனுப்பி அவற்றில் ஏதேனும் புகைப்படங்கள் உள்ளதா வேறு இளம் பெண்களை ஏமாற்றி உள்ளாா்களா? பணம் பரித்துள்ளாா்களா? என்ற கோணத்தில் போலீசாா் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனா்.

மாவட்டத்தையே அதிா்ச்சிக்குள்ளாகியது

குறிப்பாக திருவண்ணாமலை கிரிவலத்திற்காக வருகை தந்த பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டதுடன் பாலியல் தொந்தரவு செய்து பணம் கேட்டு மிரட்டிய விவகாரம் திருவண்ணாமலை மாவட்டத்தையே அதிா்ச்சிக்குள்ளாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.