செய்திகள்

உணவில் உப்பு அதிகம் சேர்த்தால் என்னவாகும்? - ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

DIN

உங்கள் உணவில் உப்பு அதிகம் சேர்க்க விரும்புகிறீர்களா? அப்படியெனில் உங்கள் மரணத்தை நீங்களே முன்கூட்டியே அழைக்கிறீர்கள் என்று அர்த்தம். 

உப்பு அதிகம் சேர்ப்பது மரண அபாயத்தை அதிகரிக்கலாம் என 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட சமீபத்திய ஆராய்ச்சி எச்சரிக்கை விடுக்கிறது. 

'யுரோப்பியன் ஹார்ட் ஜர்னல்' என்ற இதழில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் உள்ள துலேன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், உப்பை  அதிகம் உணவில் சேர்த்துக்கொள்பவர்களுக்கு அகால மரணம் ஏற்படும் அபாயம் 28 சதவீதம் அதிகமாக இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். 

சாதாரணமாக 40 முதல் 69 வயதுக்குள்பட்ட ஒவ்வொரு நூறு பேரில் மூன்று பேர் முன்கூட்டியே இறக்கின்றனர். இதில் உப்பு அதிகம் எடுத்துக்கொள்வதால் இந்த வயதினரில் நூறில் கூடுதலாக ஒருவர் இறப்பதாக ஆய்வு கூறுகிறது. 

உணவில் உப்பு அதிகம் சேர்க்காதவர்களுடன் ஒப்பிடும்போது உப்பு சேர்க்கும் நபர்களிடையே ஆயுட்காலம் குறைவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

உணவில் எப்போதும் உப்பு சேர்க்கும் பழக்கம் உள்ள ஆண்களும் பெண்களும் முறையே தங்கள் ஆயுளில் 1.5 ஆண்டுகள், 2.28 ஆண்டுகள் குறைத்துக்கொள்கின்றனர். 

உடல்நலத்தை மேம்படுத்துவதற்கான உணவுப்பழக்கவழக்கங்களை  மற்றும் பரிந்துரைகளை இந்த ஆய்வு வழங்குவதாக அமெரிக்காவில் உள்ள பொது சுகாதார மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த பேராசிரியர் லு குய் தெரிவித்தார்.

உணவில் உப்பு சேர்ப்பதை கொஞ்சமாக குறைத்தால்கூட, கணிசமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார். 

அதிக அளவு பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்பவர்களில் உப்பின் பாதிப்பு இயல்பாகவே சற்று குறைவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனினும், இதுகுறித்த புள்ளிவிவர ஆதாரங்கள் இல்லை. பழங்கள் மற்றும் காய்கறிகள், பொட்டாசியத்தின் முக்கிய ஆதாரங்கள் என்பதால் இந்த கண்டுபிடிப்பு ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று குய் கூறினார். 

ஆனால், இந்த ஆய்வுக்கு தொடர்பில்லாத, ஸ்வீடனின் கோதன்பர்க் பல்கலைக்கழகத்தின் மூத்த ஆராய்ச்சியாளரும் மருத்துவப் பேராசிரியருமான பேராசிரியை அன்னிகா ரோசெங்ரென், உப்பை அதிகம் குறைத்தாலும் பாதிப்பு என்று கூறுகிறார்.

எனவே, உப்பு எடுத்துக்கொள்வது என்பது முடிவில்லாத சர்ச்சையாகவே தொடர்கிறது. எனினும், அளவோடு எடுத்துக்கொள்வது நல்லது. 

'அளவுக்கு மீறினால் அமுதும் நஞ்சாகும்' 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜுபிடரின் நிலவோ.. ஸ்ரீமுகி!

”டீக்கடைக்காரரால் என்ன செய்ய முடியும்? விமர்சித்த காங்கிரஸின் நிலை..” பிரதமர் மோடி பிரசாரம்

ரிஷபத்துக்கு பெயர்ச்சி அடைந்தார் குருபகவான்

ஆடை சுதந்திரம் கோரியது குற்றமா? செளதியில் பெண்ணுரிமைப் போராளிக்குச் சிறை: அமைப்புகள் கண்டனம்!

"வாக்கு சதவிகித விவரங்களில் சந்தேகம்!”: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT