ஃப்ளாசிங் தெரியுமா? வாய்த் துர்நாற்றத்துக்கும் பற்கள் பராமரிப்புக்கும் என்ன தொடர்பு?
பற்களைச் சுத்தம் செய்யும் முறை பற்றி மருத்துவர்கள் கூறுவது....
சாதாரணமாக நாம் பல் துலக்கும்போது பற்களின் மேற்பரப்பில் உள்ள கறை நீங்குகிறது. ஆனால் பற்களின் இடுக்குகளில் உள்ள கறையைப் போக்க ஃப்ளாசிங் செய்வது அவசியம் என்று பல் மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
ஃப்ளாசிங் என்பது என்ன?
ஃப்ளாசிங் என்பது பற்களுக்கு இடையிலும் ஈறுகளுக்கு கீழேயும் உள்ள பகுதிகளை ஒரு பிரத்யேக நூலை (ஃப்ளாஸ்) அல்லது வாட்டர் ஃப்ளாசரைப் பயன்படுத்தி சுத்தம் செய்யும் ஒரு செயல்முறையாகும். இதனால் பல் ஈறுகளில் உள்ள உணவுத் துகள்கள் முற்றிலுமாக நீக்கப்படுகிறது. இதன் பிறகு மவுத் வாஷ் திரவங்களைக் கொண்டு வாய் கொப்புளிக்கலாம்.
இந்த ஃப்ளாசிங், மவுத் வாஷ் செய்வது பல் துலக்குவதற்கு ஈடாகாது. இவற்றைச் செய்தாலும் பல் துலக்குவதும் அவசியம். மூன்றையும் செய்யும்போது பல் சொத்தை வருவதைத் தவிர்க்க முடியும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
Advertisement
Advertisement
இதுபற்றி சென்னை, பாலாஜி கிரானியோஃபேஷியல் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் டாக்டர் எஸ்.எம். பாலாஜி கூறுகையில்,
"டென்டல் ஃப்ளாஸ் என்பது பல் துலக்குவதைப் போல பற்களைச் சுத்தப்படுத்தும் ஒரு இயந்திர செயல்முறையாகும். டூத் பிரஷ்ஷால் நீக்க முடியாத பற்களுக்கு இடையிலும், ஈறுகளுக்குக் கீழேயும் உள்ள உணவுத் துகள்கள், கறையை இது நீக்குகிறது. மவுத் வாஷ் என்பது ஒரு ரசாயன, நுண்ணுயிர் எதிர்ப்பு திரவத்தின் மூலம் வாய் கொப்புளிப்பதாகும். இது பல் மற்றும் வாயின் அனைத்துப் பரப்புகளையும் சென்றடைந்து பாக்டீரியாக்களை நீக்கிப் புத்துணர்ச்சியடையச் செய்கிறது.
முதலில் ஃப்ளாசிங் செய்ய வேண்டும், அதன் பிறகு பல் துலக்க வேண்டும், இறுதியாக மவுத் வாஷ் பயன்படுத்த வேண்டும். இதுவே சரியான முறையாகும்.
பல் சிகிச்சை செய்தவர்கள், செயற்கைப் பற்கள் வைத்திருப்பவர்கள், ஒழுங்கான பற்களைக் கொண்டிராதவர்கள் ஃப்ளாஸ் செய்யும்பது கவனமாக செய்ய வேண்டும். ஃப்ளாஸ் செய்வது பற்களைச் சுற்றியுள்ள எலும்பு தேய்மான அபாயத்தைக் குறைக்கிறது. தினமும் ஒருமுறை குறிப்பாக இரவில் உறங்குவதற்கு முன் டென்டல் ஃப்ளாஸைப் பயன்படுத்துவது நல்லது.
அதேபோல, மவுத் வாஷ் பாக்டீரியாக்களைக் கொன்று ஈறு அழற்சியைக் குறைக்கிறது, பற்களை வலுப்படுத்துகிறது, வாய் வறட்சியைப் போக்குகிறது மேலும் பல் துலக்குவதால் கிடைக்கும் பலனைவிட அதிகமாக புத்துணர்ச்சியூட்டுகிறது.
தினமும் இரு முறை பல் துலக்க வேண்டும். பல் துலக்கிய பிறகு 30 - 60 விநாடிகள் வாய் கொப்புளிக்க வேண்டும். இதனைச் செய்தவுடன் அடுத்த 30 நிமிடங்களுக்கு எதுவும் சாப்பிடவோ, குடிக்கவோ கூடாது என்று டாக்டர் பாலாஜி கூறினார்.
பல் துலக்கும் முறை...
மேல் மற்றும் கீழ் பற்களைச் சேர்த்து வைத்து, பல் துலக்கும் பிரஷ்ஷை பற்களின் வெளிப்புறப் பரப்பில் வைத்து வட்ட இயக்கத்தில் (circular motion) தேய்க்கவும். பற்களின் உட்புறப் பரப்பிலும் இவ்வாறே செய்யவும். கடவாய்ப் பற்களில் இவ்வாறு செய்ய முடியாது என்பதால் முன்னும் பின்னும் தேய்க்கலாம்.
பல் துலக்கும் பிரஷ்ஷின் முள்களை, ஈறுகளின் ஓரத்தில் 45 டிகிரி கோணத்தில் வைத்து தேய்க்கலாம். மேல், கீழ் உள்ள 2 -3 பற்களைச் சேர்த்து முன்னும் பின்னும் இவ்வாறு செய்யலாம். அடுத்தடுத்த 3 பற்களைச் சேர்த்து தேய்க்கலாம். பற்களின் உட்புறப் பரப்புகளிலும் பிரஷ்ஷின் முன்பகுதியை வைத்து தேய்க்க வேண்டும். பற்களின் ஈறுகளுக்கு இடையே பிரஷ்ஷின் முட்கள் இருக்குமாறு தேய்க்க வேண்டும்.
வாய் துர்நாற்றத்தைப் போக்க...
தினமும் இரு முறை பல் துலக்க வேண்டும். வாயில் உள்ள பாக்டீரியாக்கள்தான் வாய் துர்நாற்றத்திற்குக் காரணம்.
பற்களுக்கு இடையே உள்ள அழுக்குகளை நீக்க தினமும் ஃபிளாசிங் செய்ய வேண்டும்.
தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும்.
பாக்டீரியாவை நீக்கக்கூடிய மவுத் வாஷ் பயன்படுத்தி வாய் கொப்புளிக்க வேண்டும்.
6 மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரை அணுக வேண்டும்.
காபி, புகையிலை, காரத்தன்மை கொண்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
பற்களில், ஈறுகளில் பிரச்னை வந்தால் அலட்சியம் செய்ய வேண்டாம்.