ஸ்பெஷல்

ஆச்சர்யமென்ன? சல்மான் கானை கோர்ட் படியேற வைத்த பிஷ்னோய் பெண்களுக்கு மான்குட்டிகளும், பெற்றெடுத்த பிள்ளைகளும் ஒன்றே!

கார்த்திகா வாசுதேவன்

மான்குட்டிக்கு அமுதூட்டும் வட இந்தியப் பெண்ணொருத்தியின்  புகைப்படம் நேற்று முதல் இணையத்தில் ட்ரெண்ட் ஆகிக் கொண்டிருக்கிறது. அந்தப் பெண் ராஜஸ்தானைச் சேர்ந்த பிஷ்னோய் இனத்தைச் சேர்ந்த பெண். அவர்களது இனத்தில் மான்குட்டிகளுக்குப் பெண்கள் பாலூட்டுவது தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கம் தான்.

தனது ஒரு மார்பகத்தில் தான் பெற்ற குழந்தைக்கும், மறுமார்பில் புதிதாய் பிறந்த அனாதையாகிப் போன இளம் மான் குட்டிக்கும் பெண்கள் பாலூட்டும் காட்சி அங்கொன்றும் புதிதில்லை. இது இன்றைய மக்களுக்கு வேண்டுமானால் புதுமையான காரியமாகத் தோன்றலாம்.

பிஷ்னோய்கள் தங்களது குருவாகக் கொண்டாடும் ஜம்பேஸ்வர்ஜியின் 29 கொள்கைகளைத் தங்களது வாழ்க்கையின் அருநெறிகளாகக் கொண்டு அதன் படியே வாழ்ந்து வருபவர்கள். இயற்கையின் மீதும் வன விலங்குகள் மீதும் மிகுந்த அக்கறை கொண்டவர்கள். ஜம்போஜி என பிஷ்னோய்களால் அன்போடு அழைக்கப்படும் ஜம்பேஸ்வர்ஜி 1700 களில் வாழ்ந்து வந்தவர். ரஜபுத்திர குலத்தைச் சார்ந்த ஜம்போஜி அந்நாட்களில் அப்பகுதியை ஆட்டிப் படைத்த பஞ்சத்தில் இருந்து மக்களைக் காப்பதில் முக்கிய பங்காற்றினார். எனவே மக்கள் இவரை விஷ்ணுவின் அம்சமாகக் கருதி கொண்டாடி வருகின்றனர்.

பிஷ்னோய் சமூகத்தைச் சார்ந்த அம்ருதா தேவி எனும் பெண், 1787 ல் ஜோத்பூர் பிராந்தியத்தில் மரங்களை வெட்டுவதற்கு அரசர் உத்தரவு பிறப்பித்த போது, அந்த உத்தரவுக்கு எதிராகக் கடுமையாகப் போராடியவர்களில் ஒருவர்.  ஜோத்பூரில் அப்போது ராஜா அபய் சிங்கின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. தனது உத்தரவை ஏற்க மறுத்த பிஷ்னோய்களின் மீது ராஜா கடும் ஆத்திரம் கொண்டார். அதனால் என்ன? அரசனே ஆனாலும் இயற்கையையும், வனவிலங்குகளையும் நிலைகுலையச் செய்யும்படியாக மரங்களை வெட்டுவது தவறு, அதற்கு நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம், மரங்களை வெட்டுவதை விட, எங்களை வெட்டுங்கள். என பிஷ்னோய் பெண்களும், ஆண்களுமாக ஏராளமானோர் மரங்களைச் சுற்றிச் சூழ்ந்து நின்று அவற்றைக் கட்டிப்பிடித்துக் கொண்டனர். இதைக் கண்டு வெகுண்டெழுந்த ராஜாவின் ஆட்கள் கொஞ்சமும் யோசிக்காமல் அரச உத்தரவை ஏற்று அவர்களை வெட்டிக் கொன்றனர். ஏறத்தாழ 363 பேர் அதில் உயிரிழந்தனர், அதில், அம்ருதா தேவி உட்பட 111 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கள் சமூகத்து முன்னோர்களின் இந்த உயிர்த்தியாகத்தை பிஷ்னோய் இன மக்கள் இன்றும் மறந்தாரில்லை. அதன் வெளிப்பாடு தான் இதோ இணையத்தில் ட்ரெண்ட் ஆகிக் கொண்டிருக்கும் அந்த இளம்பெண்ணின் புகைப்படம். மான்குட்டிகள் பிறந்ததும் அதன் தாய்மான் இறந்து விட்டால், பிஷ்னோய் இனப்பெண்கள் அவற்றை அப்படியே காட்டுக்குள் விட்டுவிடுவதில்லை. அவற்றை வீட்டுக்கு எடுத்து வந்து தாம் பெற்ற குழந்தைகளுக்கு ஈடாக அன்பு காட்டி பாலூட்டி வளர்த்து மூன்று மாதங்கள் பராமரிப்பில் வைத்திருந்து மான்குட்டிகள் தானாக இயங்கத் தொடங்கியதும் தான் காட்டுக்குள் அனுப்பி வைப்பார்கள் அந்த அளவுக்கு விலங்குகள் மீது அவர்களுக்கு பரிவு அதிகம். 

ராஜஸ்தான், ஹரியானா, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற இந்திய மாநிலங்களில் இவர்கள் கணிசமாக வாழ்ந்து வருகிறார்கள். பிஷ்னோய்களின் கொள்கை பிடித்துப் போய் இவர்களது இனத்திற்கு மாறி வருகின்ற மக்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்து வருகிறதாம். 

சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் சல்மான் கான் மான் வேட்டையாடிய வழக்கில் கைதாகி தண்டனை பெற்றாரில்லையா? அப்போது அவருக்கு எதிராகக் களமிறங்கிப் போராடியதும் இதே பிஷ்னோய் இன மக்கள் தான்.

பிஷ்னோய்களின் வாழ்வாதாரமே காடும், காடு சார்ந்த விவசாயமும் தான் என்கிறார்கள் அப்பகுதி சுற்றுச்சூழலியல் செயல்பாட்டாளர்கள். இப்போது காலமாற்றத்துக்கு ஏற்ப அவர்களிலும் சிலர் வியாபாரம், படிப்பு என நகரங்களுக்கு இடம்பெயர்ந்தாலும் கூட முன்னோர்களது வாழ்க்கை நெறிமுறைகளைத் தவறாது பின்பற்ற அவர்கள் தயங்குவதில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT