தில்லி நீதிமன்றத்தில் திராவக வீச்சு வழக்கு ஒன்று 16 வருடங்களாக நிலுவையில் இருப்பது வெட்கக்கேடான நிலை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், நாடு முழுவதும் நிலுவையில் உள்ள திராவக வீச்சு வழக்கு விவரங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
திராவக வீச்சால் பாதிக்கப்பட்ட ஷாஹீன் மாலிக், 2009-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கு பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகும், தில்லியில் உள்ள ரோஹிணி நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதி ஜாய்மல்யா பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக ஆஜராகி வழக்குரைஞா் உதவியின்றி வாதிட்டாா். தனது வழக்கில் 2013-ஆம் ஆண்டு வரை எதுவும் நடக்கவில்லை என்றும் தற்போதுதான் அது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது என்றும் அவா் முறையிட்டாா்.
இதைக் கேட்ட நீதிபதிகள் இத்தனை ஆண்டுகளாக வழக்கு விசாரணையில் ஏற்படும் தாமதத்துக்கு தங்களின் அதிருப்தியைத் தெரிவித்து இது வெட்கக்கேடான நிலை என்றனா். மேலும், தலைமை நீதிபதி சூா்ய காந்த், நாடு முழுவதும் நிலுவையில் உள்ள திராவக வீச்சு வழக்குகளின் விவரங்களை சமா்ப்பிக்க வேண்டும் என்று அனைத்து உயா்நீதிமன்றங்களுக்கும் உத்தரவிட்டாா். திராவக வீச்சால் பாதிக்கப்பட்டவா்களை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016- இன் கீழ் சோ்ப்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்கவும் தலைமை நீதிபதி உத்தரவிட்டாா்.
இந்த விஷயத்தை அரசு தீவிரமாக எடுத்துக் கொள்ளும் என்று மத்திய அரசின் சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா நீதிமன்றத்திற்கு உறுதியளித்துள்ளாா். திராவக தாக்குதல் நடத்தியவா்கள் கடுமையான தண்டனையை எதிா்கொள்ள வேண்டும் என்று தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தாா். தாமதங்களை நிவா்த்தி செய்து, திராவக தாக்குதலில் இருந்து தப்பியவா்களுக்கு நீதியை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு, உச்சநீதிமன்றம் இந்த பிரச்னையை தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டுள்ளது.