மலைநாட்டின் மகத்தான ஆலயங்கள்
கேரளத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற 30 சைவ-வைணவத் திருத்தலங்களைத் தொகுத்து, 'மலைநாட்டின் மகத்தான ஆலயங்கள்' என்ற தலைப்பில் இந்நூல் வெளிவந்துள்ளது.
மலைநாட்டின் மகத்தான ஆலயங்கள்-பனையபுரம் அதியமான்; பக். 304; ரூ. 270; வானதி பதிப்பகம், சென்னை-600 017, ✆ 044-2434 2810.
'கடவுளின் சொந்த நாடு' என்று சிறப்பிக்கப்படுகிறது, கேரளம். மலைநாடான கேரளப் பகுதியில், பரசுராமரால் உருவாக்கப்பட்ட கோயில்கள் மட்டுமின்றி, வைணவ வழிபாட்டில் 13 திவ்ய தேசங்களும் அமைந்துள்ளன.
கேரளத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற 30 சைவ-வைணவத் திருத்தலங்களைத் தொகுத்து, 'மலைநாட்டின் மகத்தான ஆலயங்கள்' என்ற தலைப்பில் இந்நூல் வெளிவந்துள்ளது.
Advertisement
Advertisement
திருத்தலங்களின் வரலாறு, அமைப்பு, விழாக்கள், நிர்வாகம், அமைவிடம் குறித்தும்; பெட்டிச் செய்தியாகக் கோயிலின் சிறப்பும்; பொருத்தமான படங்களும் சிறப்பான முறையில் இடம் பெற்றுள்ளன.
திருவனந்தபுரத்தில் உள்ள பழவங்காடி மகாகணபதி கோயிலின் வரலாறு, வேனாட்டின் தலைநகரான பத்மநாபபுரத்தில் தொடங்கி, சுவாரஸ்யமாகச் செல்கிறது.
திருவிதாங்கூர் சமஸ்தானத்து ராணுவ வீரர்கள் உருவாக்கிய இந்த ஆலய நிர்வாகத்தை, நீலகிரியில் வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் ராணுவ மையம் தலைமையிலான குழு பராமரித்து வருகின்றது என்ற தகவல் பலருக்கும் தெரியாதது.
சேரன் செங்குட்டுவனால் கண்ணகிக்குக் கோயில் எடுக்கப்பட்ட வரலாற்றை சிலப்பதிகாரம் எடுத்துரைக்கிறது. அந்த வழிபாடே பிற்காலத்தில் பகவதி அம்மன் வழிபாடாக மாறுகிறது.
திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுகால் பகவதி அம்மன் திருக்கோயிலில் 2009-ஆம் ஆண்டு 25 லட்சம் பெண்கள் ஒன்றுகூடி பொங்கல் வைத்துக் கொண்டாடிய 'ஆற்றுகால் பொங்கல் திருவிழா' கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதை அந்தக் கோயில் கட்டுரை பதிவு செய்துள்ளது.
'மரத்தில் மறைந்த மாயவன்' என்ற தலைப்பில் நெய்யாற்றின்கரை கிருஷ்ணசுவாமி கோயில், 'சிலைக்குப் பதில் குழியும் துளையுமே மூலவர்' என்ற தலைப்பில் காடம்புழா பகவதி ஆலயம், 'பெண்கள் வேடத்தில் ஆண்களின் வேண்டுதல்' என்ற தலைப்பில் கொல்லம் மாவட்டத்தில் சவரா எனும் இடத்தில் அமைந்துள்ள கொற்றன்குளங்கர தேவி ஆலயம் எனப் பல கோயில்களின் தலைப்பே அந்தத் திருத்தலங்கள் குறித்த கட்டுரையை வாசிக்க வேண்டும்; அங்குச் சென்று தரிசிக்கவேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.