திருவானைக்கா அருள்மிகு அகிலாண்டேசுவரி திருக்கோயில்
ஐம்பூதத் தலங்களுள் நீர்த் தலமாகவும், திருச்சி அருகே தெற்கே காவிரி, வடக்கே கொள்ளிடம் சூழ அமைந்துள்ளது திருவானைக்கா அருள்மிகு அகிலாண்டேசுவரி உடனுறை ஜம்புகேசுவரர் திருக்கோயில். இங்கு வழிபடும் சிவலிங்கம்
ஐம்பூதத் தலங்களுள் நீர்த் தலமாகவும், திருச்சி அருகே தெற்கே காவிரி, வடக்கே கொள்ளிடம் சூழ அமைந்துள்ளது திருவானைக்கா அருள்மிகு அகிலாண்டேசுவரி உடனுறை ஜம்புகேசுவரர் திருக்கோயில். இங்கு வழிபடும் சிவலிங்கம் அப்புலிங்கம் என அழைக்கப்படுகிறது.
நீரின்றி அமையாது உலகு என்பதை உணர்த்தும் வகையில் இறைவனை, தேவி தண்ணீர் வடிவில் வழிபட்ட தலம் திருவானைக்கா.
முற்காலச் சோழர்களில் ஒருவராகிய கோச்செங்கட்சோழ மன்னரால் இக் கோயில் கட்டப்பட்டது. திருவானைக்கா என்னும் இத்தலம் திருவானைக்காவல், ஜம்புகேசுவரம், ஜம்பு வீச்சுரம், வெண்நாவல் வனம், ஜம்புவனம், தந்திபுகாவாயில், காவை, தந்திவனம், இபவனம், அமுதேசுவரம் எனப் பல்வேறு பெயர்களைப் பெற்று விளங்குகிறது.
Advertisement
Advertisement
கிழக்கே திருவளர்ச்சோலையும், மேற்கே ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் கோயிலும் அமைந்துள்ள நிலையில், திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவிலும், மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 8 கி.மீ. தொலைவிலும் காவிரிக் கரையின் வடக்குப் பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது.
தென்னாட்டில் எழுந்தருளிய திருத்தலங்களில் பலவற்றுள் ஐம்பூதத் தலங்கள் மிகச் சிறந்தவை. அனைவரும் சிவஞானம் பெற்றுத் திகழ வேண்டும் என்னும் பெருங்கருணையுடன் நீர்த்திரளை சிவலிங்கமாக்கி வழிபட்ட திருவானைக்கா "யானைக்கு' அருள் புரிந்தமையாலும், யானை வசித்த காடு என்னும் பொருளில் கஜாரணியம், இபவனம், தந்திவனம் என்றும், வெண்நாவல் மரத்தின் கீழ் வீற்றிருப்பதால் ஜம்புகேசுவரம், ஜம்பு வீச்சரம், ஜம்புவனம் என்றும், அம்பிகை இறைவனிடம் ஞானஉபதேசம் பெற்றதால் ஞானத்தலம் என்றும், யானை புகாதபடி கட்டப்பட்டதால் தந்திபுகா வாயில் என்றும், ஐம்பூதத் தலங்களில் நீரினால் அமைந்ததால் அப்புத் தலம் என்று இக்கோயில் அழைக்கப்படுகிறது.
கோயில் அமைப்பு: இத் தலம் சோலைகளுக்கு நடுவில் அமைந்துள்ளது. சுவாமி சன்னதி மேற்கு நோக்கியும், அம்மன் சன்னதி கிழக்கு நோக்கியும் அமைந்துள்ளன. கோயில் 2,500 அடி நீளம், 1,500 அடி அகலம் கொண்டதாக விளங்குகிறது.
உள்ளே இருந்து வெளிவீதி வரையில் ஐந்து திருச்சுற்றுகளில் 4,5 வது திருச்சுற்றுகள் வீடுகள் நிறைந்தவையாக அமைந்துள்ளன. 4-வது திருச்சுற்றில் உத்சவர் புறப்பாடும், தேரோட்டமும் நடைபெறும். 5 -வது திருச்சுற்றாகிய விபூதித் திருச்சுற்றில் சிங்கத் தூண்களைக் காணலாம்.
இந்தத் தலத்துப் பெருமானை தரிசிப்பதற்காகவே திருவரங்கத்தில் அரங்கநாதர் எழுந்தருளியிருப்பதாக காஜரண்ய ஷேத்திர மகாத்மியம் கூறுகிறது. இதற்கு ஏற்ப ஆண்டுக்கு ஒரு முறை அரங்கநாதப் பெருமான் இங்குள் நாச்சியார்தோப்புக்கு எழுந்தருளுகிறார்.
புராணச் செய்திகள்: பிரம்மன், ராமன், கெüதம முனிவன், பராசரன் ஆகியோர் இங்கு இறைவனை வழிபட்டதாக ஐதீகம்.
இங்கு யானை ஒன்று தினமும் தும்பிக்கையில் தண்ணீர் கொண்டு வந்து சிவலிங்கத்தை நீராட்டி, மலர்களைத் தூவி வழிபட்டதாகவும், மேற்கூரை இல்லாமலிருந்த சிவலிங்கத்துக்கு தனது வலையால் கூரையமைத்து ஒரு சிலந்தி வழிபட்டதாகவும் வழக்கு.
இறந்து போன அந்த யானைக்கு சிவலோகத்தில் பூதகணத் தலைமைப் பதவியை வழங்கியும், சிலந்தியை சோழ மன்னராக பிறக்கவும் சிவபெருமான் திருவருள் செய்ததாகவும் திருத்தலப் புராணம் கூறுகிறது. யானை பூஜை செய்த தலமானதால் ஆனைக்கா எனப் பெயர் பெற்றது இத் தலம்.
ஆண்டவன் அமுதமான தண்ணீரே உருவாக அமைந்ததால் இங்குள்ள லிங்கம் அப்புலிங்கம் எனப் பெயர் பெற்றது.
ஸ்ரீ சக்கரங்கள்: அகிலாண்ட நாயகி ஆதியில் மிக உக்கிரமான சக்தியாக விளங்கினாள். அதனால், பக்தர்கள் கோயிலுக்குள் செல்லாமல் வெளியிலிருந்து வழிபட்டு வந்தனர். இதையறிந்த ஆதிசங்கரர் இரு ஸ்ரீ சக்கரங்கள் செய்து, இவற்றில் அம்பிகையின் தெய்வீக சக்தி முழுவதும் வந்து குடிபுகும்படி வேண்டினார்; அம்பிகையும் அவ்வாறே செய்தார்.
அந்த ஸ்ரீ சக்கரங்கள் இரண்டும் அம்பிகையின் இரு காதுகளிலும் தோடுகளாக ஒளிவீசுகின்றன.
அம்பிகை வழிபாடு: நாவல் மரங்கள் சூழ்ந்த சோலையாக விளங்கிய திருவானைக்காவில் காவிரி நீரைத் திரட்டி சிவலிங்கமாக்கி அம்பிகை அகிலாண்டேசுவரி வழிபட்டு, மக்களும் ஆராதிக்க உதவினாள்.
அந்த வழிபாடு இன்றும் தொடர்கிறது. உச்சிகால வழிபாடு நடத்த வரும் அர்ச்சகர் அகிலாண்டேசுவரி சன்னதியிலிருந்து அம்மனைப் போல பெண் உருவமேற்று தன்னை அம்பிகையாக பாவித்து சிவவழிபாடு நடத்துகிறார்.
சிவபெருமான் குருநாதனாக இருந்து இறைவிக்கு உபதேசித்ததால், எல்லையில்லாத கல்வியை முழுவதும் கற்காத நிலையில், அகிலாண்டேசுவரி இன்றும் திருமணம் முடிக்காத மாணவியாக இங்கு காட்சி தருகிறாள். எனவே, இத் திருக்கோயிலில் திருக்கல்யாணத் திருவிழா கிடையாது.
இக் கோயிலில் பிரம்ம தீர்த்தம், இந்திர தீர்த்தம், ஜம்பு தீர்த்தம், ராமதீர்த்தம், ஸ்ரீமத் தீர்த்தம், அக்னி தீர்த்தம், அகத்திய தீர்த்தம், சோம தீர்த்தம், சூரிய தீர்த்தம் ஆகியவை உள்ளன.
தல விருட்சம்: இந்தக் கோயிலின் தல விருட்சம் வெண்ணாவல் மரமாகும். சுவாமி சன்னதி வெண்ணாவல் மரத்தின் கீழ் அமைந்துள்ளது.
இக் கோயில் குறித்து அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகம், கவி காளமேகம், தாயுமானவர், அருணகிரிநாதர், மகாவித்வான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம்பிள்ளை ஆகியோர் பாடல்கள் இயற்றியுள்ளனர்.
திருவிழாக்கள்: இக்கோயிலில் பிரம்மதேவன் கொண்டாடிய திருவிழா இன்றும் பெருந்திருவிழா என்ற பெயரில் 40 நாள்கள் மிகச் சிறப்பாக நடத்தப்படுகிறது. விநாயகர், முருகப்பெருமானுக்கு 5 நாள்களும், நால்வருக்கு 3 நாள்களும், கல்யாணசுந்தரமூர்த்திக்கு 3 நாள்களும், சந்திரசேகரப் பெருமானுக்கு 6 நாள்களும், சோமாஸ்கந்தருக்கு 10 நாள்களும், சொக்கேசருக்கு 3 நாள்களும், மவுனத் திருவிழா 3 நாள்களும், சண்டேசருக்கு 3 நாள்களும், பிரம்மனுக்கு அருள் செய்த பெருந்திருவிழா ஒரு நாளும், விடையாற்றி, மண்டாலபிஷேகம் முறையே ஒவ்வொரு நாளுமாக 40 நாள்கள் திருவிழா இன்றும் நடத்தப்பட்டு வருகிறது.
ஜம்புகேசுவரருக்கு வைகாசி வசந்தப் பெருவிழா 10 நாள்களும், தைப்பூசத் திருவிழா 10 நாள்களும் நடைபெறுகின்றன. அகிலாண்டேசுவரி அம்மனுக்கு ஆடிப்பூரத் திருவிழா 10 நாள்களும், நவராத்திரி விழா 10 நாள்களும் நடைபெறுகின்றன. பங்குனி மாதத்தில் ஆண்டு பெருந்திருவிழாவும் நடைபெறுகிறது.
சித்திரை- சித்திரை விசு புண்ணிய கால தினத்தன்று இரவில் காளை வாகனப் புறப்பாடு, பௌர்ணமியன்று மருக்கொழுந்து வழிபாடு, வைகாசி -பௌர்ணமி நாளில் ஏக வசந்தம், வசந்தோத்சவம், விசாக நட்சத்திரத்தன்று பால், மாங்காய் வழிபாடு, ஆனி- உத்திரநட்சத்திரத்தில் ஆனி திருமஞ்சனம், மறுநாள் நடராஜர் புறப்பாடு, பௌர்ணமியன்று முப்பழ வழிபாடு, ஆடி -தக்ஷிணாயன புண்ணிய காலத்தில் பட்டு பவித்ரம், இரவு காளை வாகனத்தில் புறப்பாடு, ஆவணி -மூல நட்சத்திரத்தன்று ஆவணி மூலம், சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த உத்சவம், பௌர்ணமியன்று எள் அபிஷேகம்.
புரட்டாசி மாதம் -கிருஷ்ண சதுர்த்தி இரவு கேதாரவிரதம், மறுநாள் சோமாஸ்கந்தர் புறப்பாடு, கலைமகள் வழிபாடு, விஜயதசமியன்று அம்பு எய்தல், பௌர்ணமியன்று நெல்பொரி வழிபாடு, ஐப்பசி -நரகசதுர்த்தியன்று தீபாவளி வழிபாடு, கார்த்திகை- சோமவாரங்களில் சங்கு வழிபாடு, பௌர்ணமி- கிருதவழிபாடு, மார்கழி -திருப்பள்ளியெழுச்சி விழா தொடக்கம், மாணிக்கவாசகர் உத்சவம், பௌர்ணமியன்று நெய் வழிபாடு.
தை மாதம்- ராமதீர்த்த தெப்பக்குளத்தில் தெப்பத் திருவிழா, கடைசி செவ்வாய்க்கிழமை பிடாரியார் பெருவிழா முதல் காப்பு, பௌர்ணமியன்று தேன் வழிபாடு, மாசி -மகா சிவராத்திரி, பங்குனி- ஆண்டுப் பெருந்திருவிழா.
இக்கோயிலில் தினமும் 5 கால வழிபாடுகள் நடைபெறுகின்றன. உசத்காலம்- காலை 6.30 மணி முதல் காலை 7.30 மணி வரை, காலசந்தி -காலை 8 முதல் காலை 8.45 மணி வரை, உச்சிக்காலம் -முற்பகல் 11 மணி முதல் பகல் 12 மணி வரை, சாயரட்சை -மாலை 5 மணி முதல் மாலை 5.45 மணி வரை, அர்த்தசாமம் -இரவு 9.
ஞாயிறு, வெள்ளி மற்றும் முக்கியத் திருவிழா நாள்களில் திருக்கோயில் மக்களின் வழிபாட்டுக்காக தொடர்ந்து நடை திறந்திருக்கும்.
பேருந்து, ரயில் வசதிகள்: திருச்சி சத்திரம் பஸ் நிலையத்திலிருந்தும், மத்திய பஸ் நிலையத்திலிருந்து லால்குடி, சமயபுரம், மண்ணச்சநல்லூர், துறையூர், பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் அனைத்து நகர, புறநகர்ப் பேருந்துகளும் திருவானைக்கா வழியாகத்தான் செல்லும். ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்திலிருந்தும், கோட்டை, டவுன் ரயில் நிலையங்களிலிருந்தும் ஆட்டோ வசதி உண்டு.
இக்கோயில் அருகில் தங்குவதற்கு விடுதிகள் அதிகமில்லை. ஒன்று அல்லது இரண்டுதான் உள்ளன. இங்கும் குறைந்தபட்சம் ரூ. 400 முதல் ரூ. 500 வரை கட்டணம் வசூலிக்கப்படும். திருவானைக்காவிலிருந்து சத்திரம் பேருந்து நிலையம் மிக அருகில் இருப்பதால் அங்குள்ள விடுதிகளில் தங்கிக் கொள்ளலாம்.
அருகிலுள்ள கோயில்கள்: திருவானைக்காவுக்கு அருகில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோயில், உத்தமர்கோயில், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், மலைக்கோட்டை தாயுமானசுவாமி திருக்கோயில், உறையூர் வெக்காளியம்மன் திருக்கோயில் போன்ற பல கோயில்கள் உள்ளன. இந்த கோயில்கள் அனைத்தும் 2 கி.மீ. முதல் 10 கி.மீ. தொலைவில்தான் உள்ளன. இந்தக் கோயில்களுக்குச் செல்வதற்கு திருவானைக்காவிலிருந்து ஆட்டோ, கார் வசதிகளும் உள்ளன.
திருக்கோயில் வழிபாட்டுக்காவும், திருப்பணிகளுக்கும் நன்கொடைகள், காணிக்கை செலுத்த விரும்புபவர்கள், ""செயல் அலுவலர், அருள்மிகு ஜம்புகேசுவர் அகிலாண்டேசுவரி திருக்கோயில், திருவானைக்காவல், திருச்சி 620005'' என்ற முகவரிக்கு அனுப்பலாம்.
மேலும், tvkoil@sancharnet.in என்ற இ.மெயில் முகவரியிலோ, www.thiruvanaikkavaltemple.org என்ற இணையதள முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம். மேலும், விவரங்கள் தேவைப்படுவோர் 0431 - 2230257 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
தங்களது பிறந்த நாள், திருமண நாள் போன்ற நாள்களில் தங்களது பெயரில் பூஜைகள் செய்ய விரும்புவோருக்கு வசதியாக இக்கோயில் இ- பூஜா வசதியும் உண்டு. இதற்காக www.e-pooja.in/tvkoil என்ற இணையதள முகவரியை தொடர்பு கொள்ளலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.