இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை மீண்டும் சக வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங் விமர்சித்துள்ளார்.
யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கையை தோனி அழித்துவிட்டதாகவும், அவரை மன்னிக்கவே மாட்டேன் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சாதனை கேப்டனாக விளங்குபவர் மகேந்திர சிங் தோனி. இவரது தலைமையிலான இந்திய அணி 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.
இவர் கேப்டனாக இருந்த காலகட்டத்தில், அணியின் முக்கிய ஆல்-ரவுண்டராக யுவராஜ் சிங் திகழ்ந்தார்.
தோனி மீது விமர்சனம்
இந்த நிலையில், இந்திய அணியில் யுவராஜ் சிங்குக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு தோனிதான் காரணம் என்று அடிக்கடி பொதுவெளியில் பேசிவரும் யோகராஜ் சிங், மீண்டும் விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.
தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு சமீபத்தில் யோகராஜ் சிங் அளித்த பேட்டியில்,
“நான் தோனியை மன்னிக்கவே மாட்டேன். அவரது முகத்தை கண்ணாடியில் அவர் பார்க்க வேண்டும். அவர் மிகப்பெரிய கிரிக்கெட்டர், ஆனால் எனது மகனுக்கு எதிராக அவர் செய்தது அனைத்தும் தற்போது வெளிவருகிறது, அவரை என் வாழ்க்கையில் மன்னிக்கவே மாட்டேன்.
எனது வாழ்க்கையில் இரண்டு விஷயங்களை நான் செய்ததில்லை. ஒன்று எனக்கு தீங்கு விளைவித்தவரை ஒருபோதும் மன்னித்ததில்லை. மற்றொன்று, அவர்கள் எனது குடும்ப உறுப்பினராக இருந்தாலும் சரி, என் குழந்தைகளாக இருந்தாலும் சரி, அவர்களை கட்டிப் பிடித்ததில்லை.
யுவராஜ் சிங் இன்னும் 4, 5 ஆண்டுகள் விளையாடியிருக்க முடியும். யுவராஜை போன்ற இன்னொரு வீரர் மீண்டும் கிடைக்க மாட்டார் என்று கம்பீர், சேவாக் போன்றோரே கூறியுள்ளனர். புற்றுநோயுடன் விளையாடி நாட்டுக்கு உலகக் கோப்பை வென்று கொடுத்த யுவராஜுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
தோனி மீது பல முறை யோகராஜ் சிங் விமர்சனத்தை வைத்த போதிலும், இதுவரை யுவராஜ் சிங் தவறாக ஒரு கருத்தைகூட கூறியதில்லை.
யுவராஜ் சிங்கின் சாதனை
இந்திய அணிக்காக 2000 முதல் 2017 வரை 402 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள யுவராஜ் சிங், 17 சதங்கள், 71 அரைசதங்களுடன் 11,178 ரன்கள் குவித்துள்ளார்.
2002 ஐசிசி சாம்பினஸ் டிராபி, 2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஒருநாள் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் முக்கிய பங்காற்றிய யுவராஜ் சிங், 2019ஆம் ஆண்டில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.