மகளிர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய ரசிகர்களை அமைதியாக்குவோம் என தென்னாப்பிரிக்க மகளிர் அணி கேப்டன் லாரா வோல்வார்ட் தெரிவித்துள்ளார்.
9-வது மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தது. தற்போது இந்தத் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
அரையிறுதியில் 7 முறை பட்டம் வென்ற நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை, நட்சத்திர வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ், கேப்டன் ஹா்மன்ப்ரீத் கௌர் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றது.
மற்றொரு அரையிறுதியில் நான்கு முறை சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு தென்னாப்பிரிக்க அணித் தகுதிபெற்றுள்ளது. கோப்பையை வெல்லாத 2 அணிகள் மோதுவதால் இந்தப் போட்டிக்கு எதிர்பார்ப்பு அதிகாரித்துள்ளது.
இந்த நிலையில், தென்னாப்பிரிக்க லாரா வோல்வார்ட் போட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில், “இந்திய ரசிகர்களை அமைதியாக வைத்திருகக முயற்சிப்போம்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் லாரா வோல்வார்ட் பேசுகையில், “நாக் அவுட் போட்டிகள் லீக் சுற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. நாக் அவுட் போட்டிகளில் வீரர்கள் சில சிறப்பான விஷயங்கள் செய்வதை நாங்கள் பார்த்திருக்கிறோம். ஜெமிமாகூட நாக் அவுட் போட்டியில் நன்றாக விளையாடினார்.
இந்திய அணி எங்களுடன் விளையாடிய லீக் சுற்று ஆட்டங்களைப் பற்றி நாங்கள் யோசித்துப் பார்க்கவில்லை. இந்தியா ஒரு வலுவான அணி. இது கடுமையான போட்டியாகத்தான் இருக்கும். அதனால், நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.
மொத்த ரசிகர்களும் அவர்களுக்குப் (இந்திய அணிக்கு) பின்னால் இருப்பார்கள் என எனக்குத் தெரியும். நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன். அந்த வெற்றி அவர்களை (இந்திய ரசிகர்களை) அமைதிப்படுத்தும் என்று நினைக்கிறேன் (சிரிக்கிறார்)” எனத் தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டு குஜராத்தின் அகமதாபாத் நரேந்திர மோடி திடலில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னதாக பத்திரிகையாளர் சந்திப்பின் போது, சொந்த மண்ணில் இந்திய அணி விளையாடுவதால் அவர்களுக்கு ஆதரவு அதிகமாக இருக்கும்.
1 லட்சத்துக்கும் அதிகமான இந்திய ரசிகர்களை அமைதிப்படுத்துவதே எங்கள் இலக்கு என சபதம் செய்திருந்த ஆஸ்திரேலியாவின் கேப்டன் பாட் கம்மின்ஸ், சொன்னது போலவே இந்திய ரசிகர்களை அமைதிபடுத்தி கோப்பையையும் வென்றிருந்தார். அவரைப் போலவே தற்போது லாராவும் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.