இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் பங்கேற்பது சந்தேகம் என தகவல் வெளியாகியிருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடர் வருகிற நவம்பர் 21 ஆம் தேதி பெர்த் கிரிக்கெட் திடலில் துவங்கி ஜனவரி 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
போட்டி துவங்குவதற்கு இன்னும் 40 நாள்கள் மட்டுமே உள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், தொடரின் துவக்க ஆட்டங்களில் பங்கேற்க மாட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஜூலை மாதம் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி முழுமையாக வென்ற ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் பாட் கம்மின்ஸ் முதுகு வலி காரணமாக ஓய்வில் இருந்தார்.
இதனால், அவர் தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரில் இருந்து விலகியிருந்தார்.
இந்த நிலையில், ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் மட்டும் அல்லது தொடர் முழுவதும் கம்மின்ஸ் அணியில் இருந்து விலகுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடக்க ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தற்காலிக கேப்டனாகப் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேகப்பந்து வீச்சுக்குப் பெயர்போன ஆஸ்திரேலிய அணியில், கம்மின்ஸுக்குப் பதிலாக ஸ்காட் போலண்ட் இணைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
2018 ஆம் ஆண்டு முதல் ஆஷஸ் கோப்பையைத் தக்கவைத்துக் கொள்ள முயற்சிக்கும் ஆஸ்திரேலிய அணிக்கு இது பெருத்த பின்னடைவாகவும், 2011 முதல் ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்டில்கூட வெற்றி பெறாத இங்கிலாந்து அணிக்கு சாதகமாகவும் அமைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.