ஆர்ஜென்டீனாவின் இளம் மெஸ்ஸி..! யார் இந்த நீகோ பஸ்?
ஆர்ஜென்டீனாவின் இளம் மெஸ்ஸி என்றழைக்கப்படும் நீகோ பஸ் குறித்து...
ஆர்ஜென்டீனாவின் அடுத்த மெஸ்ஸி யார் என்ற கேள்வி கடந்த சில ஆண்டுகளாகவே பேசப்பட்டு வருகிறது. ஜூலியன் அல்வாரெஸ் (26 வயது) இந்த இடத்தைப் பிடிப்பார் என பலரும் எதிர்பார்த்து வந்தார்கள். ஆனால், இந்த இடத்தைப் பிடித்துள்ளது 21 வயதான இளம் வீரர் நீகோ பஸ் (Nico Paz).
ஆர்ஜென்டீன தந்தை பாப்லோ பஸ் என்பவருக்கும் ஸ்பெயினைச் சேர்ந்த தாய் கார்லா மார்டினெஸுக்கும் மகனாக 2004ல் நீகோ பஸ் ஸ்பெயினில் பிறந்தார். தனது தந்தையின் பூர்விகம் ஆர்ஜென்டீனா என்பதால் அதன் தேசிய அணியில் விளையாடி வருகிறார்.
ஆர்ஜென்டீனாவின் இளம் மெஸ்ஸி என்றழைக்கப்படும் நீகோ பஸ் (21 வயது) இந்த உலகக் கோப்பையிலும் பங்கேற்று கால்பந்து உலகில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
Advertisement
Advertisement
நீகோ பஸ் தொடக்கத்தில் சென்டர் டிஃபென்டராக விளையாட தொடங்கி பின்னர் சென்டர் பார்வேடாக விளையாடி வருகிறார். ரியல் மாட்ரிட், கோமா அணிகளில் விளையாடி இருக்கிறார்.
இந்த உலகக் கோப்பையில் மெஸ்ஸியின் அடுத்த வாரிசாக நீகோ பஸ்ஸை பலரும் முன்வைக்க காரணமாக இருக்கிறது. அவர் பார்வேடாக மட்டுமில்லாமல் மிட் ஃபீல்டராகவும் விளையாடும் திறமை கொண்டவர். மெஸ்ஸியிடம் இதே திறமை இருப்பதால்தான் இவரைப் பலரும் அடுத்த மெஸ்ஸி எனக் கூறுகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.
இத்தாலியில் கோமா என்ற கிளப்பிற்காக விளையாடும் இவரிடம் ட்ரிபிளிங் செய்வதில் நல்ல திறமை இருக்கிறது. வெறுமனே கோல் அடிப்பது என்றில்லாமல் பிளேமேக்கராகவும் விளையாடும் திறமை இருப்பது அவரது போட்டிகளைப் பார்த்தாலே உணர முடிகிறது.
உலகக் கோப்பையின் முதல் போட்டியில் மெஸ்ஸி ஹாட்ரிக் அடித்ததும் 80ஆவது நிமிஷத்தில் நீகோ பாஸ் மாற்று வீரராக களத்தில் இறங்கினார். 10 நிமிஷங்களில் பெரிதாக விளையாடாவிட்டாலும் மெஸ்ஸிக்குப் பதிலாக களமிறக்கப்பட்டதால் கவனம் பெற்றார்.
இரண்டாவது போட்டியில் மெஸ்ஸி முழுவதுமாக விளையாடியதால், நீகோ பாஸ் களமிறக்கப்படவில்லை. மூன்றாவது போட்டியில் நீகோ பாஸ் தொடக்கம் முதலே களமிறக்கப்பட்டார். இவரை 60ஆவது நிமிஷத்தில் மிட் ஃபீல்டர் மேக் அலிஸ்டர் ரீபிளேஸ் செய்தார்.
இந்தப் போட்டியில் அட்டாக்கிங் மிட் ஃபீல்டராக களமிறங்கிய நீகோ பஸ் 53ல் 50 பாஸ்களை அதாவது 94 சதவிகிதம் துல்லியமாக செய்து அசத்தினார். வேகம், பந்தை கட்டுப்படுத்தும் விதம், டிரிபிளிங் செய்தல் ஆகியவை இவரை மற்றவர்களிடம் இருந்து தனித்து காட்டுகிறது.
சீரிஸ் ஏவில் 69 ட்ரிபிளிங் செய்துள்ளார். 2025/26 சீசனில் அதிகபட்ச ட்ரிபிளிங் செய்தவர்களில் இவர் மூன்றாமிடத்தைப் பிடித்துள்ளார்.
ஆர்ஜென்டீன அணிக்காக தனது முதல் கோல் எப்படி அடித்தார் தெரியுமா? ஃபிரி கிக்கில். அதுதான் இவரை மெஸ்ஸியுடன் ஒப்பிட வைத்துள்ளது.
மெஸ்ஸியைப் போலவே நீகோ பஸ் இடது காலில் அதிகமாக கோல் அடிப்பவராக இருக்கிறார். பெரும்பாலும் அவரது விளையாட்டில் பந்தை இடது பக்க பாக்ஸில் எடுத்துச் சென்று அங்கிருந்து தனது இடது காலால் கோல் அடிக்கிறார். இது பலருக்கும் மெஸ்ஸியை நினைவுப்படுத்துவதாகக் கூறுகிறார்கள்.
இதுவரை இந்த உலகக் கோப்பையில் கோல், அசிஸ்டோ செய்யாவிட்டாலும் இவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்து வருகிறது. நாக் அவுட் சுற்றுப் போட்டிகளில் அதிகமான நிமிஷங்கள் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீகோ பஸ் குறித்து நேர்காணல் ஒன்றில் மெஸ்ஸி, “நீகோ பஸ் அற்புதமான மனநிலையைக் கொண்டவர். அதனால்தான் அவர் இங்கிருக்கிறார். அவரது குணம் வியக்கவைக்கிறது. போட்டியை நன்கு புரிந்துக்கொள்கிறார். நம்பமுடியாத அளவுக்கு அவரது மனம் வேலை செய்கிறது. அவருக்கு எனது நண்பர் செஸ்க் ஃபேப்ரிகாஸ் பயிற்சி அளித்து வருகிறார். இது நீகோவை மேலும் வளர உதவும்” என இரண்டு ஆண்டுக்கு முன்பு கூறியிருந்தார். தற்போது, மெஸ்ஸியுடன் உலகக் கோப்பையில் தேர்வாகியுள்ளார்.
மெஸ்ஸி முதல் உலகக் கோப்பையில் 1 கோல் மட்டுமே அடித்திருந்தார். ஆர்ஜென்டீன அணிக்காக இதுவரை 1 கோல் மட்டுமே அடித்துள்ள நீகோ பஸ் வருங்காலத்தில் லியோனல் மெஸ்ஸியைப் போலவே பல அதிசயங்களை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Argentina's young Messi...! Who is Nico Paz?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.