ஸ்மித் 94 ரன்கள்: இங்கிலாந்துக்கு எதிராக 280 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியா!
சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்மித், 114 பந்துகளில் 94 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் ஆட்டம் சிட்னியில் நடைபெற்று வருகிறது. முதல் ஒருநாள் ஆட்டத்தை ஆஸ்திரேலிய அணி எளிதாக வென்றது.
ஆஸி. கேப்டன் பேட் கம்மின்ஸுக்கு ஓய்வு அளிக்கும்விதமாக இந்த ஆட்டத்தில் ஆஸி. அணியின் புதிய கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஹேஸில்வுட் களமிறங்கினார். அவர் இதற்கு முன்பு எந்தவொரு ஆட்டத்திலும் கேப்டனாக இருந்ததில்லை. அதேபோல இங்கிலாந்து அணியின் கேப்டனாக பட்லருக்குப் பதிலாக மொயீன் அலி செயல்படுகிறார்.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. வார்னர் 16 ரன்களுக்கும் டிராவிஸ் ஹெட் 19 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு ஸ்மித்தும் லபுஷேனும் அருமையான கூட்டணி அமைத்தார்கள். 25 ஓவர்களுக்குப் பிறகு ஆடுகளம் ரிவர்ஸ் ஸ்விங்குக்கு ஏற்றவாறு மாறியது. ரன்கள் எடுக்க ஓரளவு சிரமம் ஏற்பட்டது. ஸ்மித் - லபுஷேன் கூட்டணி 112 பந்துகளில் 101 ரன்கள் எடுத்தார்கள். லபுஷேன் 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்பிறகு ஸ்மித் - மிட்செல் மார்ஷ் கூட்டணி 95 பந்துகளில் 90 ரன்கள் கூட்டணி அமைத்ததால் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்தது. சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்மித், 114 பந்துகளில் 94 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மிட்செல் மார்ஷ் 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இங்கிலாந்துத் தரப்பில் அடில் ரஷித் 3 விக்கெட்டுகளும் டேவிட் வில்லி, வோக்ஸ் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.
Advertisement