விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து ஆலோசிக்கவில்லை என இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.
விராட் கோலியின் பரந்த அனுபவம் உலகக் கோப்பை டி20 தொடர்களில் தங்கத்தைப் போன்றது எனவும், நடப்பு ஐபிஎல் தொடரில் அவரது ஸ்டிரைக் ரேட் குறித்தெல்லாம் நாங்கள் ஒருபோதும் கவலைப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 500 ரன்கள் எடுத்துள்ளார். அதில் ஒரு சதம் மற்றும் 4 அரைசதங்கள் அடங்கும். ஆனால், அவரது ஸ்டிரைக் ரேட் குறித்து விமர்சனங்கள் எழுந்தது.
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் விராட் கோலி 147-க்கும் அதிகமான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடுகிறார். ஆனால், தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கும் வெளிநாட்டு வீரர்களான டிராவிஸ் ஹெட் 194-க்கும் அதிகமான ஸ்டிரைக் ரேட், பில் சால்ட் 180-க்கும் அதிகமான ஸ்டிரைக் ரேட் மற்றும் சுனில் நரைன் 182-க்கும் அதிகமான ஸ்டிரைக் ரேட்டுகளிலும் விளையாடி வருகின்றனர். அவர்களை ஒப்பிடுகையில் விராட் கோலி குறைந்த ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி வருகிறார்.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான அணியை தேர்வும் செய்யும்போது விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து ஒருபோதும் ஆலோசிக்கவில்லை என இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து நாங்கள் ஆலோசித்ததாக நினைக்கவில்லை. அவர் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். அதனால், அவரது ஸ்டிரைக் ரேட் குறித்தெல்லாம் நாங்கள் கவலைப்படவில்லை. விராட் கோலியின் மதிப்பு மிகப் பெரியது. அவர் அணியில் இருப்பது அணிக்கு பலம் சேர்ப்பதாக இருக்கும். பெரிய ஸ்கோர்களை சேஸிங் செய்யும்போது, பெரிய ஷாட்டுகளை விளையாடுவதற்கு இந்திய அணியில் வீரர்கள் இருக்கிறார்கள் என்றார்.
டி20 உலகக் கோப்பை வருகிற ஜூன் 1 முதல் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.