முகப்பு
தமிழ்நாடு

மாமல்லபுரத்தில் சேதப்படுத்தப்படும் புராதனச் சின்னங்கள்: பாதுகாக்கக் கோரிக்கை

மாமல்லபுரத்தில் புராதனச் சின்னங்களை சேதப்படுத்துவது தொடர்கதையாகி வருகிறது. இதனைத் தடுத்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

Updated On : 14 டிசம்பர் 2016, 2:47 am IST
மாமல்லபுரம் வராக மண்டபத்தில் சிதைக்கப்பட்டுள்ள பூமாதேவி சிற்பம்.
பகிர்:

மாமல்லபுரத்தில் புராதனச் சின்னங்களை சேதப்படுத்துவது தொடர்கதையாகி வருகிறது. இதனைத் தடுத்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாமல்லபுரம் சிற்பங்கள் உலகப் புகழ்பெற்றவை. இங்குள்ள கடற்கரை கோயில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, கிருஷ்ண மண்டபம், வராக மண்டபம், குடைவறை மண்டபங்கள் உள்ளிட்ட 32 புராதனச் சின்னங்கள் உள்ளன. இவற்றை தொல்லியல் துறை பாதுகாத்து, பராமரித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக முறையாக பராமரிப்பும், பாதுகாப்பும் இல்லாத காரணத்தால் புராதனச் சின்னங்களை சிதைத்து சேதப்படுத்துவது என்பது தொடர் கதையாகி வருகிறது. கடந்த வருடத்திலேயே 3 சிற்பங்கள் சமூக விரோதிகளால் சேதப்
படுத்தப்பட்டன. வராக மண்டபத்தில் அண்மையில் நுழைந்த மர்ம நபர்கள் சிலர் பல்லவர்களின் கைத்திறனால் வடிவமைக்கப்பட்ட வராக அவதாரத்தை விளக்கும் சிற்பத்தில் பூமாதேவியின் மூக்கு மற்றும் விரல்கள் ஆகிய பகுதிகளை சேதப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளுடன் வழிகாட்டலுக்குச் செல்லும் சுற்றுலா வழிகாட்டிகள் சிலர் சிற்பங்களை சுட்டிக்காட்டியபோது சிற்பம் சிதைக்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்டுள்ளதை கவனித்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மாமல்லபுரம் தொல்லியல் துறைக்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து தொல்லியல் துறையினர் விசாரித்து வருகின்றனர். பல்லவர்களின் கலை பொக்கிஷங்களை சிதைக்கும் சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் அங்கீகரிக்கப்பட்ட சிற்பக் கலைஞர் வெ.அரிதாஸ் கூறுகையில், பல்லவர்கள் காலமான 7-ஆம் நூற்றாண்டில் மாமல்லபுரத்தை துறைமுகப் பட்டினமாகவும், காஞ்சிபுரத்தை தலைநகரமாகவும் கொண்டு ஆட்சி செய்தனர். பல்லவ மன்னர்களில் மகேந்திரவர்மன், அவரது மகன் நரசிம்மவர்மன் ஆகியோர் மாமல்லபுரம் பாறைகளில் சைவம், வைணவம் ஆகிய இரண்டையும் ஒருங்கிணைத்து குடைவரை சிற்பங்களை வடிவமைத்தனர். இவற்றை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். தற்போது இந்த சிற்பங்கள் சேதப்படுத்தப்பட்டு வருவது மிகவும் வேதனைக்குரியது. எவ்வளவு விலை கொடுத்தாலும் கிடைக்காத இதுபோன்ற சிற்பங்களை இனி உருவாக்குவது என்பது கடினம். அதனாலேயே வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இந்த சிற்பங்களை பார்த்து ரசிக்கின்றனர். இனி வருங்காலத்திலாவது இந்த புராதச் சிற்பங்களை பாதுகாக்க தொல்லியல் துறை தனிகவனம் செலுத்த வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.