முகப்பு
தமிழ்நாடு

திமுகவின் போராட்டத்தைத் தடுப்பதற்கு அரசு மேற்கொள்ளும் முயற்சிகளே போராட்டத்தின் வெற்றிக்கான அடையாளம்: மு.க. ஸ்டாலின்

திமுகவின் போராட்டத்தைத் தடுப்பதற்கு அரசு மேற்கொள்ளும் முயற்சிகளே போராட்டத்தின் வெற்றிக்கான அடையாளம் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு

திமுகவின் போராட்டத்தைத் தடுப்பதற்கு அரசு மேற்கொள்ளும் முயற்சிகளே போராட்டத்தின் வெற்றிக்கான அடையாளம்: மு.க. ஸ்டாலின்

திமுகவின் போராட்டத்தைத் தடுப்பதற்கு அரசு மேற்கொள்ளும் முயற்சிகளே போராட்டத்தின் வெற்றிக்கான அடையாளம் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:31 PM
பகிர்:

திமுகவின் போராட்டத்தைத் தடுப்பதற்கு அரசு மேற்கொள்ளும் முயற்சிகளே போராட்டத்தின் வெற்றிக்கான அடையாளம் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், கழகத்தின் சார்பில் தூர் வாரப்பட்டுள்ள, சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட கொங்கணாபுரம் அடுத்த எருமைப்பட்டியில் அமைந்துள்ள கட்சராயன் ஏரியை பார்வையிட இன்று நேரில் சென்றார். ஆனால் அவரை கனியூர் என்ற பகுதியில் தடுத்து நிறுத்திய காவல்துறையினர் கைது செய்தனர். 

இதுகுறித்து, தமு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
’நீட்’ தேர்வுக்கு விலக்களிக்க வேண்டும், அதற்கு தமிழகத்தில் நடைபெறும் எடப்படாடி பழனிசாமி தலைமையிலான ‘குதிரை பேர’ அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்பதற்காக, தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களிலும் திராவிட முன்னேற்றக் கழகம், திமுக கூட்டணிக் கட்சிகள் மற்றும் இந்த விவகாரத்தில் ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைந்து இந்தப் போராட்டத்தை இன்று மாலை 4 மணியில் இருந்து 5 மணிவரை நடத்த சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருகிறது. இதில் அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல், பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர் பெருமக்கள், மாணவ - மாணவியர், அவர்களது  பெற்றோர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்துக் கொண்டு இந்தப் போராட்டத்தை மிகப்பெரிய போராட்டமாக நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட இந்தப் போராட்டத்தை, எப்படியாவது கொச்சைப்படுத்த வேண்டும், அந்தப் போராட்டம் முழு அளவில் வெற்றிப் பெற்று விடக்கூடாது என்ற வஞ்சக எண்ணத்தோடு எடப்படாடி பழனிசாமி தலைமையிலான ‘குதிரை பேர’ ஆட்சி, எப்படியாவது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுத்து, இந்தப் போராட்டத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என திட்டமிட்டு, இன்று காலையில் எடப்பாடி தொகுதியில் அமைந்துள்ள கட்சராயன் ஏரியில், ஏற்கனவே இரண்டு மாத காலமாக திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள், தோழர்கள், நண்பர்கள் மிக சிறப்பாக அந்த ஏரியை தூர்வாரி முடித்திருக்கிறார்கள். 

இதனைப் பொதுமக்களின் ஒத்துழைப்போடு தி.மு.கவை சேர்ந்தவர்கள் செய்திருக்கிறார்கள். இங்கு மட்டுமல்ல, திமுக சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ள இப்படிப்பட்ட பணிகளை நான் தமிழகம் முழுவதும் நேரடியாக சென்று பார்வையிட்டு வருகிறேன். அந்தவகையில் மாவட்ட செயலாளர் சிவலிங்கம் என்னிடம், ”நீங்கள் கட்சராயன் ஏரியை பார்வையிட வேண்டும்”, என்று கேட்டுக் கொண்டார். அந்தக் கோரிக்கையை ஏற்று, இன்று காலை கோவை வந்து, அங்கிருந்து இப்போது அந்த இடத்திற்குச் சென்று கொண்டிருக்கிறேன்.

போகிற வழியில், இந்த கனியூர் பகுதியில் காவல்துறையினர் எங்கள் கார்களை நிறுத்தி, நீங்கள் அங்கு போகக்கூடாது, நீங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று சொன்னார்கள். ”அப்படி தடை செய்யப்பட்டிருந்தால், அதற்குக் காரணம் என்ன”, என்று கேட்டேன். உடனே, ஒரு மனுவை என்னிடம் கொடுத்தார்கள். அதில் மாலையில் சேலத்தில் நடைபெறும் மனித சங்கிலிப் போராட்டத்துக்குத் தடை என்றுதான் இருக்கிறதே தவிர, நான் இந்தச் சாலையில் செல்லத் தடை என்று ஆணை இல்லை.

எனவே, ”அப்படி அந்த ஆணை இருந்தால் காட்டுங்கள், நான் சட்டத்துக்குக் கட்டுப்படுகிறேன். இல்லையென்றால் நான் கண்டிப்பாக கட்சராயன் ஏரியை சென்று பார்ப்பேன் என்று சொல்லி”, இருக்கிறேன். ”இதோ ஐந்து நிமிடத்தில் காண்பிக்கிறோம்”, என்றார்கள். பத்து நிமிடம் ஆகிவிட்டது. இன்னும் ஐந்து நிமிடம் பொறுப்பேன். இல்லையென்றால், தடையை மீறி கட்சராயன் ஏரியை சென்று பார்ப்பேன் என்பது உறுதி.

கேள்வி: நீட் தேர்வுக்கு விலக்களிக்க வேண்டும் என மாணவர்களும், பொதுமக்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதாக தெரிவித்துள்ள நிலையில் சட்டம் – ஒழுங்கினைக் காரணம் காட்டி, உங்களை தடுத்து நிறுத்தி இருக்கிறார்களே?

பதில்: போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் வந்ததால் தான் திமுக போராட்டம் நடத்துகிறது. இந்தப் போராட்டத்தை அறிவித்த காரணத்தினால் தான் இன்றைக்கு தமிழ்நாட்டில் உள்ள ‘குதிரை பேர’ பினாமி முதல்வர் எடப்பாடியும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களும், 3 – 4 முறை தில்லி சென்று பிரதமர் மோடியையும், மத்திய அமைச்சர்களையும் சந்தித்துப் பேசிவிட்டு வந்திருக்கிறார்கள். அப்படி பேசிவிட்டு வருகிறார்களே தவிர, அங்கு என்ன பேசினார்கள், உண்மையான நிலவரம் என்ன என்று எதுவும் தெரிவிக்கவில்லை. அங்கு சென்று மண்டியிட்டு, காலில் விழுந்து, குனிந்து சரணாகதி அடைந்து ஏதாவது பேசுகிறார்களா என்று தெரியவில்லை.

கேள்வி: முதல்வருகு எவ்வளவோ பணிகள் இருக்கும்போது, நீங்கள் வருவதை தடுக்க கீழ்மட்ட அதிகாரிகள் வரை தொடர்பு கொண்டு பேசுகிறார் என்றால் அவரது நோக்கம் என்ன?

பதில்: அதாவது, இந்தப் பணிகளை எப்படி செய்ய விட்டீர்கள் என்று கேட்கிறார். திமுக சார்பில் ஏறக்குறைய 5 மாதங்களாக தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எல்லா கட்சிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்களும் பாகுபாடு இல்லாமல், தங்களால் முடிந்தவரை எங்கெங்கு இந்தப் பணிகளை செய்ய முடியுமோ, எங்கெல்லாம் பொதுமக்கள் ஆதரவு தருகிறார்களோ, கூடுமானவரையில் அறநிலையத்துறையிடம் அனுமதி பெற்று, சில இடங்களில் தனியார் மற்றும் அறக்கட்டளை சார்பில் நீர் நிலைகள் இருக்கின்றன, சில இடங்களில் கோயில்களுக்குச் சொந்தமான இடங்களிலும், சில இடங்களில் ஊராட்சி மன்றங்கள் மற்றும் ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. அவர்களிடம் எல்லாம் முறையாக அனுமதி பெற்றே நாங்கள் செய்து வந்திருக்கிறோம். அந்தப் பணிகள் சிறப்பாக செய்யப்பட்டு உள்ளன.

இரு தினங்களுக்கு முன்பாக திருவண்ணாமலைக்கு சென்றிருந்தேன். அங்கு ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டு இருப்பதை எல்லாம் பார்வையிட்டபோது, வந்தவாசியில், ”குளத்தில் தூர்வாரும் போது ஒரு இடத்தில் திடீரென கிணறு கிடைத்தது”, என்று சொன்னார்கள். கிணறு வெட்ட பூதம் கிளம்பும் என்று சொல்வார்கள், ஆனால், அங்கு தூர்வாரும்போது கிணறு கிடைத்துள்ளது. அந்த கிணறு கிடைத்திருப்பதால், வந்தவாசி நகர் முழுமைக்கும் அதிலிருந்து குடிநீர் கொடுக்கிறார்கள். இப்படிப்பட்ட அருமையான, சிறப்பான பணிகளை நாங்கள் செய்து வருகிறோம்.

இதில் நாங்கள் எந்த அரசியலும் பார்க்கவில்லை. உள்நோக்கம் எதுவுமின்றி, மழை பொய்த்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள இன்றைய நிலையில் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டும், குறிப்பாக, அடுத்தமுறை மழை பெய்யும்போது நீர் நிலைகளில் நீர் தேங்கும், அதன் மூலம் ஓரிரு ஆண்டுகளுக்கு நீர் தட்டுப்பாடு இருக்காது. சில இடங்களில் 4 அல்லது 5 ஆண்டுகளுக்கு தண்ணீர் தேங்கும் சூழல் ஏற்படும் என்ற நிலையில் தான் இந்தப் பணிகளை எல்லாம் மேற்கொண்டு வருகிறோம்.

கேள்வி: திமுக இந்தப் பணிகளை ஆரம்பித்த பிறகு, அரசு சார்பில் அதிமுக கட்சிக்காரர்களுக்கு மட்டும் பணிகளை ஒதுக்கி, பணிகளை தொடங்கி இருக்கிறார்களே?

பதில்: ஊழல் செய்ய, கமிஷன் வாங்க, லஞ்சம் வாங்க அதையெல்லாம் செய்கிறார்கள். அதற்காக 300 கோடி ரூபாய் கூட அறிவித்தார்கள். நான் சட்டப்பேரவையில் பேசியபோது கூட, “300 கோடி ரூபாய் அறிவித்து உள்ளீர்களே, எங்கெங்கு பணிகள் நடந்திருக்கின்றன? எத்தனைப் பணிகளை முடித்தீர்கள்? அவையெல்லாம் எந்த நிலையில் இருக்கின்றன? 110 விதியில் அறிவித்து விட்டுச் சென்று விடுகிறீர்கள். அதையெல்லாம் வெள்ளை அறிக்கையாக வையுங்கள். உறுதிமொழிக் குழு என்று ஒன்று இருக்கிறதே, அதிலாவது சொல்லுங்கள்”, என்று கேட்டேன். ஆனால், இதுவரை எதுவும் சொல்லவில்லை.

நியாயமாக, ஆளும்கட்சிதான் இந்தப் பணிகளை செய்ய வேண்டும். அவர்கள் தான் செய்யவில்லை. எதிர்க்கட்சியாக உள்ள திமுக செய்வதை பாராட்டக்கூட வேண்டாம், ஆனால், உபத்திரம் செய்யாமல் இருந்தாலே போதும். இப்போது நாங்கள் செய்துள்ள பணிகளை எல்லாம், அவர்கள் செய்ததாக கணக்கு காட்டி கமிஷன் எடுத்துக் கொள்வதாக எங்களுக்கு செய்திகள் வந்துள்ளன. அதுபற்றிய ஆதாரங்களுடன் நாங்கள் கண்டுபிடித்து வருகிறோம். இதற்கெல்லாம் விரைவில், 4 ஆண்டுகளோ 5 ஆண்டுகளோ காத்திருக்க வேண்டியதில்லை, இன்னும் நாலைந்து மாதங்களில், எந்தெந்த அமைச்சர்கள் கொள்ளையடித்தார்கள், யார் யார் கமிஷன் வாங்கியிருக்கிறார்கள், என அத்தனை விவரங்களையும் கண்டறிந்து வெளியில் கொண்டு வரப்போகிறோம்.

கேள்வி: உங்களை தடுத்து நிறுத்தி, பல இடங்களில் அனுமதி வழங்க மறுத்து, பலவிதமாக தடை போட்டும் பொதுமக்கள் வந்து போராட்டத்தில் பங்கேற்று வருகிறார்களே?

பதில்: எங்களுடைய போராட்டத்தை தடுக்க அவர்கள் எடுத்து வரும் முயற்சிகளே இந்தப் போராட்டத்துக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றியாக நான் கருதுகிறேன்.

கேள்வி: கொடநாடு விவகாரத்தை மறைப்பதற்காக வளர்மதி கைது, உங்களுடைய போராட்டத்துக்கு தடை விதிப்பது போன்ற நடவடிக்கைகளை அரசு செய்வதாக கூறப்படுகிறதே?

பதில்: இருக்கலாம். நீங்கள் நினைப்பது நூற்றுக்கு நூறு உண்மைதான்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →