FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அமமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்கவேண்டும்: தங்க.தமிழ்ச்செல்வன்  

அமமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைக்கவேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக உள்ளது என, அமமுக மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வன் கூறினார்.

30 ஜனவரி 2024, 9:56 pm
பகிர்:

அமமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைக்கவேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக உள்ளது என, அமமுக மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வன் கூறினார்.
 திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் அமமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க வந்திருந்த தங்க.தமிழ்ச்செல்வன், முன்னதாக மன்னார்குடி கோபாலசமுத்திரம் வடக்குவீதியில் உள்ள தரணி கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்ற, மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
 தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களின் வழக்கை மூன்றாவது நீதிபதி விரைவாக விசாரித்து, தீர்ப்பு வழங்குவார் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், சட்டப் பேரவைத் தலைவர் சார்பில் ஆவணங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டிருப்பதால், விசாரணை தாமதப்பட்டிருக்கிறது. 18 எம்எல்ஏக்களின் பதவி நீக்கம் சரியா, தவறா என்பதை விரைவாக அறிவிக்க வேண்டும். தகுதி நீக்கம் சரி என்றால், 18 தொகுதிகளிலும் உடனடியாகத் தேர்தல் நடத்த வேண்டும். அமமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைக்க வேண்டும் என, கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் விரும்புகின்றனர். திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேறி வந்து, எங்களை அணுகினால் அக்கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்வோம். அரசியல் களத்தில் கூட்டணி எப்படி வேண்டுமானாலும் அமையலாம். சேலத்திலிருந்து சென்னைக்கு எட்டு வழிச்சாலை தேவையில்லாத ஒன்று. இதற்குப் பதிலாக உளுந்தூர்பேட்டை சாலையை மேம்படுத்தலாம். முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி சேலம் மாவட்டத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றால் கூடுதலாக மருத்துவக் கல்லூரி அல்லது வேளாண் கல்லூரி அமைக்கும் முயற்சியில் ஈடுபடலாம் என்றார்.
 பேட்டியின் போது, கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ். காமராஜ், வழக்குரைஞர் பிரிவு மாநிலச் செயலாளர் கு.சீனிவாசன், அமைப்புச் செயலாளர் சிவா.ராஜமாணிக்கம், அண்ணா தொழிற்ச சங்க மாநில இணைச் செயலாளர் எஸ்.சத்தியமூர்த்தி, மாநிலத் தேர்தல் பிரிவு செயலாளர் க.மலர்வேந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments