முகப்பு
தமிழ்நாடு

மோடியை மிரட்டி கரூர் தொகுதிக்கு என்ன திட்டங்களை கொண்டு வந்திருக்கின்றீர்கள்?: தம்பிதுரைக்கு ஸ்டாலின் செக்! 

மோடியை மிரட்டி கரூர் தொகுதிக்கு அப்படி என்ன திட்டங்களை கொண்டு வந்திருக்கின்றீர்கள்? என்று அதிமுகவின்  தம்பிதுரைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:34 AM
பகிர்:

கரூர்: மோடியை மிரட்டி கரூர் தொகுதிக்கு அப்படி என்ன திட்டங்களை கொண்டு வந்திருக்கின்றீர்கள்? என்று அதிமுகவின்  தம்பிதுரைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

வெள்ளியன்று(05-04-2019) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், கரூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அதன் முழுவிவரம் பின்வருமாறு:

வருகின்ற 18ஆம் தேதி நடைபெற இருக்கக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் கரூர் நாடாளுமன்ற தொகுதியில் நிறுத்தப்பட்டிருக்கக்கூடிய, காங்கிரஸ் பேரியக்கத்தின் அங்கீகாரம் பெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் உங்களிடத்தில் இருகரம் கூப்பி வாக்குகள் கேட்கின்ற சகோதரி ஜோதிமணி அவர்களுக்கு நீங்கள் அனைவரும் கை சின்னத்தில் வாக்களித்து சிறப்பானதொரு வெற்றியைத் தேடித் தர வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கின்றேன்.

மக்கள் பணி ஆற்றக்கூடிய நம்முடைய ஜோதிமணி அவர்களை எதிர்த்து போட்டியிடக்கூடிய வேட்பாளர் யார் என்பதை நானும் சொன்னேன், நீங்களும் தெளிவாக உணர்ந்து கொண்டிருக்கின்றீர்கள். துணை சபாநாயகராக இருக்கக்கூடிய தம்பிதுரை அவர்கள். கடைசிவரையில் அவருக்கு சீட் கிடைக்குமா? கிடைக்காதா? என்று அந்தக் கட்சியைச் சார்ந்த நிர்வாகிகளுக்கு மட்டுமல்லாமல் அவருக்கே அந்த சந்தேகம் இருந்து வந்தது. ஏனென்றால் அ.தி.மு.க-வில் இருக்கக்கூடிய அணியில் அவர் எந்த அணியில் இருக்கின்றார் என்பதே எல்லோருக்கும் ஒரு குழப்பம், ஏன் அவருக்கே ஒரு குழப்பம் தான். யாருக்கும் தெரியாது ஈ.பி.எஸ் அணியா? ஓ.பி.எஸ் அணியா? என்ற நிலை.

அண்மையில் மத்திய நிதி நிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அன்றைய தினம் தம்பிதுரை என்ன பேசினார் என்றால், இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில் பெரிய சலுகைகள் இல்லை, இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையானது, பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையாக விளங்கிக் கொண்டிருக்கின்றது. பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு 6,000 ரூபாய் உதவித்தொகை என்று அறிவித்திருக்கிறார்கள், அதே போதுமானதல்ல. குறைந்தபட்சம் 12,000 ரூபாய் வழங்கிட வேண்டும். தற்போது அறிவித்திருக்கக்கூடிய சலுகைகளை நியாயமாக, ஏற்கனவே ஏன் 2012ஆம் ஆண்டு அறிவிக்கவில்லை என்று கேட்டவர் யார் என்றால் தம்பிதுரை. அப்படிப்பட்டவர்தான் பி.ஜே.பி-யின் துணையோடு ஆதரவோடு அவர் இங்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கின்றார்.

அதைத்தொடர்ந்து, மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு குறு தொழிலாளர்களுக்கு என்ன நன்மை கிடைத்திருக்கின்றது? ஜி.எஸ்.டி வரி மூலம் மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசு பறித்திருக்கின்றது. ஜி.எஸ்.டி வரி வசூலில் மாநிலத்தின் பங்கை பெறுவதற்கு மத்திய அரசிடம் மாநில அரசுகள் பிச்சை எடுக்கக்கூடிய நிலை உருவாகியிருக்கின்றது. மாநிலங்களுக்கு தர வேண்டிய நிதியைக்கூட முறையாக மத்திய அரசு வழங்கவில்லை. இதுதான் கூட்டாட்சி தத்துவமா? என்று கேட்டவர் தம்பிதுரை அவர்கள். அவர்தான் இப்பொழுது மோடியை ஆதரித்து ஓட்டு கேட்கின்றார். அதுமட்டுமல்ல பல்வேறு காலகட்டங்களில் தமிழ்நாட்டில் புயல் தாக்கியது. அந்த புயல்கள் தாக்கிய நேரத்தில், மத்திய அரசு மூலமாக மாநிலத்திற்கு வரவேண்டிய நிவாரணத் தொகை இதுவரையில் முழுமையாக வந்து சேரவில்லை என்பதைச் சொன்னவர் தம்பிதுரை.

அதையும் தாண்டி சொன்னார். பலமுறை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு பல பிரச்னைகளுக்காக நடந்திருக்கின்றது. பல சட்ட மசோதாக்களை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடந்த நேரங்களில், நாங்கள் பலமுறை இந்த அரசை ஆதரித்து வாக்களித்திருக்கின்றோம். ஆனால், எங்கள் மீது மத்திய அரசு நம்பிக்கை வைக்கவில்லை என்று கேட்டவர் தம்பிதுரை. இவருக்குத் தான் இன்றைக்கு மோடி ஆதரவு கேட்டுக் கொண்டிருக்கின்றார். அதுமட்டுமல்ல பி.ஜே.பி-யின் பல்வேறு திட்டங்கள் தோல்வியடைந்து விட்டன. குறிப்பாக 100 நாள் வேலைத்திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படவில்லை. சிறுபான்மையினர் நன்மைக்காக போதிய நிதி ஒதுக்கவில்லை என்று பகிரங்கமாக பாராளுமன்றத்தில் குற்றம் சாட்டியவர் தம்பிதுரை அவர்கள்.

வேலையில்லா திண்டாட்டம் மிகப்பெரிய அளவில் உருவாகி இருக்கின்றது. கடந்த 45 வருடத்தில் இல்லாத அளவிற்கு இப்பொழுது நாட்டில் வேலை வாய்ப்பின்மை இருந்து கொண்டிருக்கின்றது என்று நாடாளுமன்றத்தில் பேசி பதிய வைத்தவர் தான் தம்பிதுரை அவர்கள். இந்தியாவில் 3 இலட்சம் விவசாயிகள், தற்கொலை செய்துகொண்டு மாண்டு போயிருக்கிறார்கள். விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்கு உயர்த்துவேன் என்று மோடி சொன்னார். அது என்ன ஆனது, என்று பாராளுமன்றத்தில் கேட்டவர் தம்பிதுரை அவர்கள். இவர் தான் இப்பொழுது மோடிக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருக்கின்றார். அது மட்டுமல்ல அவர் ஒரு புள்ளி விபரத்தோடு நாடாளுமன்றத்தில் சொன்னார், என்னுடைய கரூர் தொகுதியில் கட்டப்பட்டிருக்கக்கூடிய கழிப்பறைகள் அதைக்கூட முறையாக கட்டவில்லை என்று சொல்லிவிட்டு. அதற்கான ஆதாரங்களை புகைப்படங்களை அங்கிருக்கும் "ஸ்பீக்கர்"யிடம் தந்தவர்தான் தம்பிதுரை அவர்கள். ஆனால், இப்பொழுது தொகுதி தொகுதியாக தம்பிதுரை வருகின்றார். மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். கேள்வி கேட்பது மட்டுமல்ல, "நீங்கள் எப்படி இங்கு மறுபடியும் வரலாம்? பத்து வருடமாக எட்டிப்பார்க்காத நீ? மறுபடியும் இந்தப் பகுதிக்கு வந்து வாக்கு கேட்க வந்திருக்கிறாயே?" என்று விரட்டியடிக்கக் கூடிய காட்சிகள் ஊடகங்களில் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றது.

தம்பிதுரை அவர்கள் பிரச்சாரம் செய்யும் பொழுது ஒருவர் கேட்டிருக்கின்றார். 4 வருடமாக வரவில்லை என்று மக்கள் கேட்டபொழுது, இவர் என்ன சொல்லி இருக்கின்றார் என்று தெரியுமா? ஊடகங்களிலும் தொலைக்காட்சிகளிலும் வெளிவந்தது, என்ன சொன்னாரென்றால், "ஓட்டு போட்டா போடுங்க இல்லேன்னா போங்க. உங்க காலில் எல்லாம் நாங்க விழ முடியாது" என்று சொன்னவர் இவர்.

எனவே, மக்களிடம் ஓட்டுகள் வாங்கிக்கொண்டு இப்பொழுது பேசுகிற பேச்சா இது. இரண்டு நாட்களுக்கு முன்னால் இதே தம்பிதுரை என்ன பேசி இருக்கின்றார். அ.தி.மு.க-வில் இருக்கக்கூடிய எங்களில் நான் ஒருவன்தான் மோடியை எதிர்த்துப் பேசுகின்றேன். மோடியை மிரட்டுகின்றேன் என்று இரண்டு நாட்களுக்கு முன்னால் பேசி இருக்கின்றார். மோடியை இவர் மிரட்டுகின்றாராம்? அப்படியானால் அப்படி மிரட்டி நீங்கள் இந்த கரூர் தொகுதிக்கு என்ன திட்டங்கள் கொண்டு வந்து சேர்த்து இருக்கின்றீர்கள்? உங்களால் அதைச்சொல்ல முடியுமா?

ஆனால், தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி அவர்கள் இப்பொழுது ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருக்கின்றார். அம்மையார் ஜெயலலிதா அவர்கள் உயிரோடு இருந்தபோது இப்படி எல்லாம் வேனில் போயிருப்பார்களா அவர்கள்? யாராவது ஒருத்தராவது போய் இருப்பார்களா? ஆனால், இப்பொழுது தன்னை எம்.ஜி.ஆர் போன்றே நினைத்துக் கொண்டு போகிறார் ஈ.பி.எஸ். நியாயமாக ஒரு ஆட்சியில் இருக்கக்கூடிய முதலமைச்சர், அதேபோல் பிரதமராக இருக்கக்கூடிய மோடி எதைச்சொல்லி ஓட்டுக் கேட்க வேண்டும்? பிரதமர் மோடி அவர்களைப் பொறுத்தவரையில் 5 வருடமாக ஆட்சியில் இருக்கின்றார். எடப்பாடியைப் பொறுத்தவரையில் ஜெயலலிதா அவர்கள் இருந்ததையும் சேர்த்துப் பார்த்தால் 8 வருடமாக ஆட்சியில் இருக்கின்றார். எனவே, ஆட்சியில் இருக்கக்கூடிய அவர்கள் எங்களுடைய ஆட்சியில் இதெல்லாம் செய்து இருக்கின்றோம் என்று சொல்லி வாக்குக் கேட்க வேண்டும். ஆனால், எதுவும் இல்லாததால் "சட்டியில் இருந்தால்தானே அகப்பையில்" வரும். எதுவும் இல்லாத காரணத்தினால் காங்கிரஸ் கட்சியின் மீது தி.மு.கழகத்தின் மீது தேவையில்லாத விமர்சனங்களை செய்து கொண்டிருப்பதை நாம் பார்க்கின்றோம்.

நீட் தேர்வை நாங்கள் பொறுப்பிற்கு வந்தால் ரத்து செய்வோம் என்று அறிவித்தோம். மாற்று கட்சியைச் சார்ந்தவர்கள் எதிர்க்கட்சியில் இருக்கக்கூடியவர்கள் நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சிதான். அப்பொழுது தி.மு.க கூட்டணியில் இருந்ததே என்று சொன்னார்கள். ஒரு உண்மையை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சி கொண்டு வந்திருந்தாலும், திராவிட முன்னேற்றக் கழகம் அதை தமிழ்நாட்டிற்குள் கொண்டு வர அனுமதிக்கவில்லை. அதையும் தாண்டி தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது, அதற்காக நீதிமன்றத்திற்குச் சென்று வழக்குப் போட்டார். தி.மு.க இருக்கும் வரையில் நீட் தமிழ்நாட்டு எல்லைக்குள் வரமுடியவில்லை. ஆனால், அ.தி.மு.க ஆட்சி வந்தபிறகு நீட் உள்ளே வந்தது. எனவே, வந்ததற்குப் பிறகு அதனை எதிர்க்கின்றோம்,

அதனால்தான் எங்கு சென்றாலும் எழுச்சி, மகிழ்ச்சி, ஆர்வம், ஆரவாரம். அதனால்தான் சொல்கின்றோம். 40க்கு 40 நாம்தான் அதுமட்டுமா, அரவக்குறிச்சியைத் தவிர தமிழகத்தில் நடைபெறக்கூடிய 18 சட்டமன்றத் தொகுதிகளிலும் வெல்லப் போகின்றோம். அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜி நின்று வெல்லப் போகிறார். அதில் எந்த மாற்றமும் கிடையாது. இந்த தேர்தலை நிறுத்தி வைத்து இருக்கின்றார்கள். நீதிமன்றம் இந்த தடை உத்தரவு போடவில்லை வழக்கு இருக்கிறது அவ்வளவுதான். அந்த வழக்கை பயன்படுத்திக்கொண்டு திட்டமிட்டு வேண்டுமென்றே மூன்று தொகுதிகளில் நடத்தாமல் இருக்கின்றார்கள். தற்பொழுது சூலூரோடு சேர்த்து நான்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க இருக்கின்றது.

மத்தியில் ஆட்சிக்கு வரப்போவது நம்முடைய ராகுல் காந்தி. நம்முடைய ஆதரவு பெற்றிருக்கக்கூடிய ராகுல் காந்தி அவர்கள். எனவே காங்கிரஸ் கட்சி ஆட்சி வந்ததற்குப் பிறகு தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி ஒரு நிமிடமாவது நீடிக்குமா? அதை மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

முழு கட்டுரையைப் படிக்க →