அடுத்த வாரம் தமிழகத்தில் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தலும், 39 தொகுதிகளில் மக்களவைத் தேர்தலும் நடைபெற உள்ளது.
என்னாது அப்படியா? என்று நக்கலாகக் கேட்காதீர்கள். ஆமாம் உங்களுக்கு தெரிந்த விஷயம்தான். ஆனால் இப்போது நாங்கள் சொல்ல வரும் விஷயத்தை நீங்களும் உணர்ந்திருப்பீர்கள். ஆனால் அதை எப்படி சொல்வது என்று தெரியாமல் இருந்திருப்பீர்கள் அவ்வளவுதான்.
சென்னையில் கடந்த மார்ச் மாதம் மீனம்பாக்கத்தில் 39.2 டிகிரி அளவுக்கு வெப்பம் பதிவானது. இதுதான் மார்ச் மாதத்தின் அதிக வெப்பம் நிறைந்த நாளாக இருந்தது. இது 4.5 டிகிரி அளவுக்கு வழக்கமானதை விட அதிகமாகும்.
வெப்பம் அதிகரித்ததாலோ என்னவோ, தேர்தல் பிரசாரம் பெரிய அளவில் சூடுபிடிக்கவில்லை. இப்படி சொல்லலாமா? அல்லது இதனை வேறு மாதிரி சொல்லலாமா?
திமுக தலைவர் கருணாநிதியும், அதிமுக தலைவர் ஜெயலலிதாவும் இருந்த போது அரசியல் பிரசாரங்களும், தலைவர்களின் பேச்சுக்களும் மழை காலத்திலும் அனல் பறக்கும். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த அனல் பேச்சுக்களில் யாரோ தண்ணீர் தெளித்துவிட்டது போல போரடிக்கிறது.
ஏதோ ஒரு தொய்வு நிச்சயம் தலைவர்களின் பேச்சுக்களில் காண முடிகிறது. அவர் அப்படி சொன்னாராமே, அதற்கு இவர் இப்படி பதிலடி கொடுத்தாராமே என்றெல்லாம் மக்கள் அங்கலாய்ப்பதில்லை. காரணம்? அவர் ஒன்றும் அப்படி சொல்லிவிடுவதுமில்லை, இவர் எப்போதும் இப்படியெல்லாம் பேசிவிடுவதுமில்லை என்று சொல்லலாமா?
அரசியல் நோக்கர்கள் கூறுகையில், அதிமுகவின் நிறுவனர் எம்ஜிஆர் திமுகவைப் பற்றி பேச ஆரம்பித்தால் குற்றச்சாட்டுகளை அம்பு மழையாக வீசுவார். ஜெயலலிதாவும், கருணாநிதியும் தத்தமது தேர்தல் பிரசாரங்களின் போது கேட்கும் மக்களை கதிகலங்க செய்துவிடுவார்கள். அவர்களின் கனீர் குரலும், பலமான குற்றச்சாட்டுகளும் தலைவர்களின் பேச்சுக்களைக் கேட்க தாமாகவே மக்கள் கூட்டத்தைக் கூட்டியது.
ஆனால் தற்போது இரண்டு திராவிடக் கட்சித் தலைவர்களும் ஒருவரை ஒருவர், பொய்யர்கள் என்றும், பயனற்றவர்கள் என்றும், நல்லதை செய்யவில்லை, கொலையாளிகள் என இன்னும் மோசமாக திட்டிக் கொண்டாலும் நிச்சயம் ஏதோ ஒன்று மிஸ்ஸிங். அதுதான் என்ன?
இதுமட்டுமல்ல, சில கட்சிகள் தாங்கள் வைத்துக் கொண்ட முரண்பட்ட கூட்டணி குறித்த விளக்கங்களின் போது கூட காரசாரமாகப் பேசி தமிழக மக்களை அவர்களை நோக்கிப் பார்க்க வைக்காமல் செய்துவிட்டன.
உதாரணமாக, தொடர்ந்து விமரிசித்து வந்த அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்ட பாமகவின் அன்புமணி ராமதாஸ், நாங்கள் எல்லாவற்றையும் முயற்சித்தோம். கடந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்டோம். எங்களை பலரும் பாராட்டினார்கள். ஆனால் ஓட்டுக்கள் கிடைக்கவில்லை என்று உண்மையை உளறினார்.
இதே போல பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தது பற்றி விளக்கம் அளித்த தம்பிதுரை, இது கொள்கை ரீதியிலான கூட்டணியல்ல, வெற்றிக் கூட்டணி என்று நேர்மையாக பதிலளித்தார்.
இந்த நேர்மை எங்களுக்குப் பிடித்திருந்தாலும், இதில் ரசிக்க ஒன்றுமில்லையே?
எங்கள் தொகுதிக்கு இன்னமும் ஒரு கட்சி வேட்பாளர் கூட வரவில்லையே, எங்கேயும் தேர்தல் பிரசாரத்தைப் பார்க்கவேயில்லை.. ஆமாம் தேர்தல் பிரசாரம் செய்கிறார்களா? இல்லையா என்ற அளவுக்குத்தான் இந்த முறை பிரசாரம் இருக்கிறது.
செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? என்ற அந்த கனீர் குரல் மட்டுமல்ல.. எந்த குரலும் எங்கும் ஒலிக்கவில்லையோ என்றே தோன்றுகிறது.
தேர்தல் பிரசாரங்கள் எல்லாம் சூடுபிடிக்காத நிலையில், பணம் பறிமுதல் மற்றும் வாக்குக்கு பணம் என்ற விஷயம் மட்டுமே தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் விஷயமாகிவிட்டது. இதனை திமுக செய்தபோது திருமங்கலம் ஃபார்முலா என்று சொன்னவர்கள், தற்போது ஆர்.கே. நகர் ஃபார்முலா என்றும் கூறுகிறார்கள்.
கடந்த 2016ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது தமிழகத்தில் ரூ.100 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் 2017ல் ஆர்கே நகர் தேர்தலின் போது தேர்தலுக்கு 10 நாட்களே இருந்த நிலையில் ரூ.100 கோடி அளவுக்கு தேர்தல் ஆணையத்தால் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், பணம் பட்டுவாடாவைத் தடுக்க தேர்தல் ஆணையம் கண்ணில் விளக்கெண்ணெயை விட்டுக் கொண்டு வலம் வந்தாலும், அவர்கள் கண்ணில் மண்ணைத் தூவி, வாக்காளர்களுக்கு பணத்தைக் கொடுத்து விட சில அரசியல் கட்சிகளும் துடிப்போடு வழி மீது விழி வைத்துக் காத்திருக்கின்றன.
அதே சமயம், முன்பு ஓட்டுக்கு பணம் கொடுத்தால் நிச்சயம் அந்த கட்சிக்கு வெற்றி நிச்சயம் என்ற நிலை இருந்தது. ஆனால் ஒரு சில கட்சிகள் இந்த பாணியை பின்பற்றினால் எப்படி வெற்றி வாய்ப்பு மாறும் என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அப்படியிருக்கும் போது கொடுக்கும் பணத்துக்கு ஏற்ப வாக்குவித்தியாசம் மாறலாம்(?)
மறுபக்கம், வாக்குக்கு பணம் பெற்றுக் கொண்டால் நிச்சயம் அந்தக் கட்சிக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்பது நிச்சயமில்லை என்று சொல்லும் மக்களையும் காண முடிகிறது. எங்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை எங்களிடே தருவதுதான் தேர்தல் என்று ஜனநாயகத்துக்கு பொதுமக்கள் வேறு அர்த்தம் கற்பித்தாலும் சொல்வதற்கில்லை.
அதோடு, பணம் வாங்காதீர்கள் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் தேர்தல் ஆணையத்துக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் இவர்கள் சொல்லும் ஒரு பஞ்ச்.. "அவர்களை நிறுத்தச் சொல்லு நாங்க நிறுத்துறோம்" என்பதுவே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.