கூத்தாநல்லூர்: வடபாதிமங்கலத்தில் இடிந்து விழும் நிலையில் மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டி
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அடுத்த வடபாதிமங்கலத்தில் இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அடுத்த வடபாதிமங்கலத்தில் இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
மன்னார்குடி ஊராட்சி ஒன்றியம், அரிச்சந்திரபுரம் ஊராட்சி, கூத்தாநல்லூர் வட்டம், வடபாதிமங்கலம் பிர்காவில், அரிச்சந்திரபுரம் கீழத்தெருவில் மேல்நிலை குடிநீர்த் தேக்கத் தொட்டி அமைந்துள்ளது. ஒரு லட்சம் கொள்ளளவு கொண்ட இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை, கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது.
கூத்தாநல்லூர் - வடபாதிமங்கலம் பிரதான சாலையின் ஓரப்பகுதியில் அமைந்துள்ள இத்தொட்டியிலிருந்து தான், காமராஜர் தெரு, திட்டச்சேரி, அரிச்சந்திரபுரம் கீழத்தெரு, நடுத்தெரு, மேலத்தெரு, அங்காளம்மன் கோயில் தெரு மற்றும் பள்ளி வாயில் தெரு உள்ளிட்ட தெருக்களில் வசிக்கும் 450க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை, தாங்கிக் கொண்டிருக்கும் அனைத்துக் கால்களும் மிகவும் மோசமான நிலையில், சிமிண்ட் காரைகள் பெயர்ந்து, உள்ளிருக்கும் இரும்புக் கம்பிகள் தெரியும் அளவிற்கு உள்ளது.
மேலும், அந்த இரும்புக் கம்பிகளும், துருப்பிடித்து, மடிந்த நிலையில் உள்ளன. மேலும், கீழிருந்து பார்க்கும் போது, தொட்டியின் மேலேயுள்ள அடிப்பாகத்திலும், ஆங்காங்கே சிமிண்ட் காரைகள் பெயர்ந்துள்ளது. மேல் நிலை குடி நீர்த்தேக்கத் தொட்டியைத் தாங்கிக் கொண்டிருக்கும் அடிப்பாகமான அனைத்துக் கால்களும் மோசமான நிலையில் உள்ளதால், எந்த நேரத்திலும், நீர்த்தேக்கத் தொட்டி இடிந்து விழக்கூடிய அபாயகரமான நிலையில் உள்ளது. இந்த மேல்நிலை குடி நீர்த்தேக்கத் தொட்டியைச் சுற்றிலும் ஏராளமான வீடுகள் உள்ளன.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி கூறியது..
இந்தத் தொட்டியைப் பழுது பார்த்துத் தரும் படி பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்துள்ளோம். இதுவரை, எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இரவில் தூங்கும் போது, பயந்து கொண்டே தூங்க வேண்டிய நிலையில் வாழ்கிறோம். மேலும், காலையில், நல்லபடியா உயிருடன் எழுந்து வருவோமா என நினைத்தப்படிதான் ஒவ்வொரு நாளும் தூங்கப் போகிறோம்.
மனைவி மற்றும் பிள்ளைகளை வீட்டில் விட்டு விட்டு வேலைக்குச் சென்றாலும், எங்களுக்கு இந்த தொட்டியின் நினைப்பு தான். மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து, இந்த மேல்நிலை குடிநீர்த் தேக்கத் தொட்டியைப் பார்வையிட்டு, அதன் பிறகு நடவடிக்கை எடுக்கட்டும். பெரும் உயிரிழப்பு ஏற்படும் முன்னர் இந்த மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டியைப் பழுது பார்க்க வேண்டும் எனத் தெரிவித்தார்.