தமிழ்நாடு

மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு முன்னுரிமை: கூத்தாநல்லூர் விழாவில் பேச்சு

DIN


திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் மனோலயம் மனவளர்ச்சிக் குன்றியோர் பயிற்சிப் பள்ளியில், நடைபெற்ற நிகழ்வில், மன வளர்ச்சிக் குன்றியவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் ஓய்வு பெற்ற எம்.சந்திரசேகரன் பேசினார். 

கூத்தாநல்லூர் நகராட்சிக்குட்பட்ட மேலப்பனங்காட்டாங்குடி தமிழர் தெருவில் அமைந்துள்ள, தமிழக அரசு அங்கீகாரம் பெற்ற மனோலயம் மனவளர்ச்சி குன்றியோர் பயிற்சிப் பள்ளியில், திருவள்ளுவர் பொது நல அமைப்பு மற்றும் மனோலயம் ஹெல்த் கேர் டிரஸ்ட்டும் இணைந்து, மலரும் நினைவுகள் என்ற தலைப்பில், இனிய சந்திப்பை நடத்தினர். 

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றச் செயலாளர் என்.செல்வராஜ் தலைமை வகித்தார். நகர மன்ற முன்னாள் துணைத் தலைவர் எஸ்.எம்.காதர் உசேன், தமிழக மத்திய கட்டட தொழிலாளர் சங்க மாநில துணைத் தலைவர் ஆர்.சேகர், திருவள்ளுவர் பொதுநல அமைப்பு துணைச் செயலாளர் எம்.மதிராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மனோலயம் பயிற்சிப் பள்ளி நிறுவனர் ப.முருகையன் வரவேற்றார். 

நிகழ்வில், திருவாரூர் மாவட்ட ஆட்சியராகவும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநராகவும் பணியாற்றி ஓய்வுபெற்ற மா. சந்திரசேகரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மாணவர்களிடமும் நிர்வாகிகளிடமும் கலந்துரையாடினார். தொடர்ந்து, அவர் பேசியது: 

"ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியில் சமுதாயத்திற்காகப் பணியாற்றி வருகிறோம். இந்தப் பள்ளியில் இங்குள்ள மனவளர்ச்சி குன்றிய பிள்ளைகளைப் பார்க்கிறோம். இது ஒரு பெரும் சமுதாயப் பணி. இங்குள்ள மாணவர்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வந்துள்ளனர். நிறுவனர் முருகையன், அவரது மனைவி மகேஸ்வரி மற்றும் பயிற்சியாளர்கள் முழுமையாகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு வார்த்தைகளால் நன்றி சொல்ல முடியாது. 

இந்த மனோலயம் மன வளர்ச்சி குன்றியோர் பள்ளிக்குத் தேவையானவற்றை அவர்களே சொல்ல வேண்டும் என எதிர்பார்க்காமல், நாமாகவே முன்வந்து செய்ய வேண்டும். ஆங்கிலேயர்கள் காலத்தில், நாம் போய் அவர்களைப் பார்க்க வேண்டும். ஆங்கிலேயர்கள் நம்மை விட்டு தூரத்தில், விலகி இருந்தனர். வேறு மொழி பேசினார்கள். அதன் பிறகு, தாமாகவே சில விஷயங்கள் நடந்தது. பல விஷயங்கள் நடக்காமலேயே போய் விட்டது. ஆங்கிலேயர்களுக்கு என்ன தேவையோ அதை மட்டுமே செய்து கொண்டார்கள். 

சுதந்திரத்திற்குப் பிறகு, இச்செயல் மாறியது. மக்களைத்  தேடி ஆட்சியாளர்களும் நிர்வாகமும் வரக்கூடிய காலமாக மாறிவிட்டது. மக்களுக்கு என்னென்ன வேண்டும் எனக் கேட்கப்பட்டு நடந்து வருகிறது. இப்பள்ளி இரண்டு இடங்களில் இருப்பதை ஒரே இடத்தில் கொண்டுவர புதிய கட்டடம் கட்ட முயற்சிக்க வேண்டும். இந்த நிர்வாகத்தை நல்ல முறையில் கொண்டு வந்துள்ளார். இப்பள்ளியை நான் திறந்து வைத்தேன் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன். 

திருவாரூர் மாவட்ட ஆட்சியராக நான் பணியாற்றியபோது, மாவட்டத்திற்கு என்னென்ன தேவை எனப் பட்டியல் தயார் செய்தோம். அதன்படி செயல்படுத்தினோம். அதுபோல், இப்பள்ளிக்குத் தேவையானவற்றை ஒரு பட்டியல் தயார் செய்யுங்கள். கூத்தாநல்லூர் செல்வச் செழிப்புமிக்க ஊர். வேண்டும். ஊர் கூடி தேர் இழுப்பது போல், நாம் அனைவரும் இப்பள்ளிக்குத் தேவையான அனைத்தையும் இணைந்து செய்ய வேண்டும்.  இப்பள்ளிக்கு நாம் முழுமையாக முதல் முக்கியத்துவம் தர வேண்டும்" என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குனர் மா.சந்திரசேகரன் பேசினார்.

முன்னதாக, கண்களைக் கட்டிக்கொண்டு எதிரில் உள்ளவற்றைத் துல்லியமாக சொல்லும்  டெல்டா பப்ளிக் பள்ளி 7 ஆம் வகுப்பு படிக்கும் எம். சந்தோஷ் சரவணனைப் பாராட்டி வாழ்த்தினார்.

விழா ஏற்பாடுகளை, பயிற்சியாளர்கள் அனுராதா, செளமியா, சுரேஷ், பாபுராஜா உள்ளிட்டோர் கவனித்தனர். மகேஸ்வரி முருகையன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

SCROLL FOR NEXT