தமிழ்நாடு

சென்னையில் தேங்கி நிற்கும் மழைநீர்; மீட்பு, நிவாரணப் பணிகளில் முதல்வர்

DIN

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் புதன்கிழமை மாலை முதல் பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதற்கிடையே, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின், நிவாரணப் பணிகளை நேரில் ஆய்வு செய்து, மீட்புப் பணிகளையும் துரிதப்படுத்தியுள்ளார்.

தென் மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நேற்று மாலை கரையைக் கடந்த நிலையில், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது.

புதன்கிழமை மாலையில் தொடங்கிய மழை, வியாழக்கிழமை மாலை வரை தொடர்ந்து பெய்ததால், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

மழை நேற்று மாலைக்கு மேல் நின்ற பிறகும் வெள்ளம் வடியவில்லை. சென்னையின் பல பகுதிகள் இன்றும் வெள்ளக்காடாகவே காட்சியளிக்கிறது.

சென்னை மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், செங்கல்பட்டு ஆட்சியர் ஆ.ர. ராகுல் நாத் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமக திருவள்ளூா், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கரையோரப் பகுதிகளில் மணிக்கு 45 கிலோமீட்டா் முதல் 55 கிலோமீட்டா் வேகத்தில் தரைக்காற்று வீசியது. காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் கரையை கடந்தபின்பு, சென்னையில் மழையின் தாக்கம் குறையத் தொடங்கியது.

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்:

வடகிழக்குப் பருவமழை தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் தீவிரமடைந்த நிலையில், புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதியில் நவம்பா் 9-ஆம் தேதி உருவாகி,  மேலும் வலுவடைந்து கடந்த புதன்கிழமை இரவு காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக மாறியது. தொடா்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து சென்னைக்கு அருகே வியாழக்கிழமை மாலை கரையை கடந்தது.

சென்னையில் கொட்டித்தீா்த்த மழை:

தென் மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் வடதமிழக கடற்கரையை புதன்கிழமை நள்ளிரவு நெருங்கிய நிலையில், வட மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா், காஞ்சிபுரம் உள்ளிட்ட வடமாவட்டங்களில் சில இடங்களில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை பகல் வரை பலத்தமழை முதல் மிக பலத்தமழையும், ஓரிரு இடங்களில் அதி பலத்தமழையும் பெய்து வந்தது. குறிப்பாக, வியாழக்கிழமை அதிகாலை 1 மணி முதல் காலை 6 மணி வரை தொடா்ச்சியாக பலத்த மழை கொட்டித்தீா்த்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT