திட்டமிட்டபடி வரும் 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் நாளுக்கு நாள் பெரிதாகி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பினரும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும் தனித்தனியாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே ஓ.பி.எஸ். ஆதரவு மாவட்ட செயலாளர்கள் சில இபிஎஸுக்கு ஆதரவு தெரிவித்து வருவதால் அதிமுகவில் குழப்பம் நீடித்து வருகிறது.
இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ''முன்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்குழுவை ஒத்திவைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு, ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதுவது வழக்கத்திற்கு மாறாக உள்ளது.
பொதுக்குழுவை ஒத்திவைக்க வேண்டும் என பழனிசாமியிடம் செல்போன் மூலம் ஓபிஎஸ் பேசியிருக்கலாம். ஆனால் ஓபிஎஸ் கடிதம் எழுதியது வழக்கத்திற்கு மாறானது.
பொதுக்குழுவை ஒத்திவைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு எழுதிய கடிதம் ஊடகங்களிலும் பொதுவெளியிலும் எப்படி கசிந்தது. ஒரு கட்சியில் நடைபெறும் ரகசிய விஷயங்களை எதற்காக பத்திரிகைகளில் கொடுத்தார்.
ஒற்றைத் தலைமை என்பது நல்ல விஷயம்தான். அதனால் அதை வெளிப்படையாக சொன்னேன் இதில் எந்த தவறும் இல்லை.
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தியை ஓபிஎஸ் எப்படி சந்திக்கலாம். கட்சியில் ஒருங்கிணைப்பாளருக்கு ஒரு சட்டம்? மற்றவர்களுக்கு ஒரு சட்டமா?
2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் வரும் 23ஆம் தேதி பொதுக்குழு நடத்தப்பட வேண்டும் என கடிதம் கொடுத்துள்ளனர். அதனால் திட்டமிட்டபடி பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும்'' எனக் குறிப்பிட்டார்.