முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள்: முதல்வர் தொடக்கிவைத்தார்

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளுக்கு சுரங்கப் பாதை அமைக்கும் பணியை தொடங்கிவைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். 

Updated On : 13 அக்டோபர், 2022 at 3:49 PM
பகிர்:

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளுக்கு சுரங்கப் பாதை அமைக்கும் பணியை தொடங்கிவைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். 

மாதவரம் - சிறுசேரி இடையேயான 45.8 கி.மீ தூரம் மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகளுக்கு மாதவரம்  பால் பண்ணை அருகே சுரங்கப் பாதை அமைக்கும் பணிகளை முதல்வர் இன்று தொடக்கிவைத்தார். 

சென்னையில் 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித் தடங்களில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணி தொடங்கப்பட்டுள்ளது. இதில் 76.3 கி.மீ.க்கு உயர்மட்டத்திலும், 42.6 கி.மீ.க்கு நிலத்தடியிலும் பாதை அமைக்கப்படுகிறது. 

Advertisement

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (13.10.2022) சென்னை, மாதவரம் பால் பண்ணை அருகில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் வழித்தடம்-3 இன் சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகளில், மாதவரம் பால் பண்ணை மெட்ரோ நிலையத்திலிருந்து மாதவரம் நெடுஞ்சாலை மெட்ரோ நிலையம் வரை 1.4 கி.மீ நீளத்திற்கு சுரங்கம் தோண்டும் பணியினை தொடங்கி வைத்தார். 

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-II இன் கீழ், 118.9 கி.மீ நீளத்திலான 3 வழித்தடங்கள் 63,246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசால் கொள்கையளவிலான ஒப்புதல் வழங்கப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதல் மற்றும் நிதியுதவி பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  இதில், வழித்தடம் 3 – மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரை (45.8 கி.மீ), வழித்தடம் 4 – கலங்கரைவிளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை  (26.1 கி.மீ) மற்றும் வழித்தடம் 5- மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை (47.0 கி.மீ) ஆகிய 3 வழித்தடங்கள்  ஆகும். 

மத்திய அரசின் ஒப்புதல் பெறப்படும் வரை தற்காலிகமாக  மாநில அரசு திட்டமாகக் கருதி இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை 52.01 கி.மீ வழித்தடப்பகுதிக்கும், ஆசிய மேம்பாட்டு வங்கி, ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் புதிய மேம்பாட்டு வங்கி ஆகியவை எஞ்சியுள்ள 66.89 கி.மீ வழித்தடப்பகுதிக்கும் நிதியுதவி வழங்குகின்றன.

தமிழ்நாடு அரசின் நிர்வாக ஒப்புதலின் அடிப்படையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகளை மேற்கொண்டு வருகிறது. இதில், உயர்த்தப்பட்ட வழித்தடம் மற்றும் மெட்ரோ நிலையங்களுக்காக 7 ஒப்பந்தங்களும், சுரங்கப்பாதை வழித்தடம் மற்றும் மெட்ரோ நிலையங்களுக்காக 10 ஒப்பந்தங்களும், மாதவரம், பூந்தமல்லி பணிமனைக்களுக்காக 2 ஒப்பந்தங்களும் மற்றும் இருப்புப்பாதை அமைப்பதற்கான 5 ஒப்பந்தங்களும், என மொத்தம் 24 ஒப்பந்தங்கள் அடங்கும்.   24 கட்டுமான ஒப்பந்தங்களில், இதுவரை 15 ஒப்பந்தங்களுக்கு ஏற்பு கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதை தவிர அமைப்புகளை நிறுவுவதற்கான (System Contacts) 36 ஒப்பந்தங்களில் இதுவரை 2 ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

வழித்தடம் 3 இல் மாதவரத்திலிருந்து தரமணி வரையிலான (26.7 கி.மீ) சுரங்கப்பாதை வழித்தடப்பகுதி தமிழ்நாடு அரசு நிதியுதவியுடன் செயல்படுத்தப்படுகிறது.  இதில் இரண்டு சுரங்கப்பாதை அமைப்பதற்கான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மாதவரம் பால் பண்ணையிலிருந்து கெல்லீஸ் வரையில் 9 கி.மீ நீளத்திற்கு சுரங்கப்பாதை தோண்டும் பணி மற்றும் சுரங்கப்பாதை மெட்ரோ நிலையங்களுக்கான தடுப்பு சுற்று சுவர்கள் (Diaphragm Wall)  அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. சுரங்கப்பாதை மெட்ரோ நிலையங்களுக்கான சுற்றுத் தடுப்புச் சுவர்கள் அமைத்தல் மற்றும் சுரங்கப்பாதைக்கான கான்கீரிட் வார்ப்புகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.  மாதவரம் பால்பண்ணையிலிருந்து சுரங்கம் தோண்டும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.  

இந்த நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கே. ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ். சுதர்சனம், துரை சந்திரசேகர், துணை மேயர் மு. மகேஷ் குமார், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர்  எம்.ஏ. சித்திக், இ.ஆ.ப., இயக்குநர்கள்  டி. அர்ச்சுனன் (திட்டங்கள்),  ராஜேஷ் சதுர்வேதி (இயக்கம் மற்றும் பராமரிப்பு), அரசு உயர் அலுவலர்கள்  மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.