நாமக்கல்லில் 50 சிலிண்டர்களுடன் எரிந்த சரக்கு வாகனம்!
நாமக்கலில் 50 சிலிண்டர்களை ஏற்றி வந்த சரக்கு வாகனம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு நிலவியது.
நாமக்கல்: நாமக்கலில் 50 சிலிண்டர்களை ஏற்றி வந்த சரக்கு வாகனம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு நிலவியது.
நாமக்கல் அருகே பொம்மைக்குட்டைமேடு பகுதியில், மீனா என்ற பெயரில் தனியார் எரிவாயு நிரப்பும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு காலியான வணிக சிலிண்டர்களில் எரிவாயு நிரப்பப்படும். அந்த வகையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் சுமார் 1:30 மணி அளவில், ஈரோடு சாஸ்திரி நகரிலிருந்து 50 காலி எரிவாயு சிலிண்டர்களுடன் நாமக்கல் நோக்கி சரக்கு வாகனம் வந்து கொண்டிருந்தது. இதனை ஈரோட்டை சேர்ந்த கார்த்திக் (32) என்பவர் ஓட்டி வந்தார்.
நாமக்கல் பொரசைப்பாளையம் அருகே வந்த போது திடீரென சரக்கு வாகனம் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனால் பதற்றமடைந்த ஓட்டுநர் கார்த்திக் வாகனத்தை விட்டு இறங்கி ஓடினார். தகவல் அறிந்து நல்லி பாளையம் போலீசார், நாமக்கல் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இதனால் நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் போக்குவரத்து அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் அரைமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.