ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் பாஜக ஆய்வுக் குழு சந்திப்பு!
தமிழகத்தில் பாஜக தலைவர்கள் கைது தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவியிடம் பாஜக ஆய்வுக்குழுவினர் சந்தித்து மனு அளித்தனர்.
தமிழகத்தில் பாஜக தலைவர்கள் கைது தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவியிடம் பாஜக ஆய்வுக்குழுவினர் சந்தித்து மனு அளித்தனர்.
பாஜக கொடிக்கம்பம் அகற்றப்பட்ட வழக்கில் கைதாகி சென்னை புழல் சிறையில் உள்ள அக்கட்சியின் விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் மேம்பாட்டுப் பிரிவு மாநிலத் தலைவா் அமா் பிரசாத் ரெட்டி மேலும் இரு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து தமிழ்நாட்டில் பாஜக நிர்வாகிகள் கைது தொடர்பாக பாஜகவின் சதானந்த கவுடா தலைமையில் சத்யபால் சிங், புரந்தேஸ்வரி, பி.சி. மோகன் ஆகியோர் அடங்கிய 4 பேர் கொண்ட குழுவை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா அமைத்து உத்தரவிட்டார்.
இந்த குழு இரண்டு நாள் பயணமாக நேற்று(வெள்ளிக்கிழமை) தமிழகம் வந்தது. பாஜக கொடிக்கம்பம் அகற்றப்பட்ட விவகாரத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வீட்டில் ஆய்வு செய்த குழு, பின்னர் தமிழக ஆளுநர் ஆர். என். ரவியை கிண்டி ஆளுநர் மாளிகையில் சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளது.
அதில், தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாக பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்படுவதாகவும் இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
மேலும் இரண்டு நாள்கள் தமிழகத்தில் ஆய்வு செய்த அறிக்கையை நாளை தில்லி சென்ற பின்னர் தேசிய தலைமையிடம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.